Wednesday, May 17, 2017

கோவில் நந்தி




அண்மையில் ஒரு கால்நடைத்துறை நிபுணர் வந்திருந்தார் ..
அவருக்குக்  கடவுள் நம்பிக்கை கிடையாது .. அதை மிகப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.. கோவில் குளம் போவதெல்லாம் நேரத்தை வீணடிக்கிற கார்யங்கள் .. கோவில்   கட்றதுக்குப்   பதிலாக நாலு தொழிற்சாலை கட்டி ஜனங்களுக்கு வேலை தரலாம் என்று அறிவுரை சொல்லுவார்..

மெதுவாகப் பேச்சு ஆரம்பித்தது...
பொதுவான லோகாபிராமம் எல்லாம் அவரிடம் விசாரித்தான பிற்பாடு..  " புதுசா என்ன ஸார்  ஆராய்ச்சி பண்ண உத்தேசம் ?"  என்று கேள்வியைப் போட்டேன் ..

"இது வரைக்கும் யாரும் செய்யாததுங்க ..  இது வரையிலும், தமிழகத்தில் மூணு... நாலு நாட்டுப் பசுவினங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.. இன்னும் பல இருந்திருக்கலாம் .. அதனால்   நெடுங்காலமாக  வளர்க்கப்பட்டு வந்துள்ள நாட்டுப் பசுவினங்களைப் பற்றி ஆய்வு செய்யலாம் என்று இருக்கிறேன்.. " என்றார் ..

"நல்லதுங்க .. அவற்றை இனம் காணணும்னா  என்ன செய்யணும் ?" என்றதற்கு "...அது ரொம்ப கஷ்டம் ஸார்.. ஊர் ஊரா போய்தான் தேடணும் .. ஆனாலும் முன்பிருந்து அழிந்து போன்றவற்றைக்  கண்டுபிடிப்பதும் மிக ச்ரமம் .. என்ன செய்யவது என்றுதான் யோசிக்கிறேன்" என்று கவலையுடன் சொன்னார் ..

"அதுக்கு ஒரு ஸுலபமான  வழி இருக்குங்க .." என்று சொல்லி விட்டு " இன்னிக்கு   ப்ரதோஷம்  பெரிய கோவிலுக்குப் போய் நந்தியைப் பார்த்துட்டு வரலாம் வாங்க " என்று  அவரை வற்புறுத்தி இழுத்துப் போனேன் ..
" டைம்  வேஸ்டுங்க.. இதுக்கு பதிலா வேறு எதுனாச்சும் உருப்படியான  கார்யம் பண்ணலாம் " எனப் புலம்பிக்கொண்டே உடன் வந்தார்..

விட்ட வாசற்படி வழியாகப் பெரிய கோயிலின் உள்ளே சென்றோம் ..

" அயிராவணம் ஏறாது  ஆன் ஏறேறி, அமரர் நாடாளாதே ஆரூர் ஆண்ட அயிராவணமே ..என் அம்மானே நின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே " என்று ஓதுவார் உருகிப் பாடி  கொண்டிருந்தார்.

" நம்ப த்யாகராஜா..   ' தேவலோகத்து ஐராவதம் என்கிற யானையும்  வேணாம் -  அந்த தேவலோகமும் வேணாம் .. எனக்கு  இந்த நாட்டுக் காளை மாடும்..  திருவாலூர்  ராஜாங்கமும்  இருந்தா  மட்டும்  போதும்  என்று சொல்லிட்டுப்  பறந்து வந்து இங்கேயே உட்கார்ந்துட்டாராம் .. அதைத்தான் அப்பர் ஸ்வாமிகள் இப்டி பாடறார் " என்று வியாக்யானம் பண்ணியவனை அச்வாரஸ்யத்துடன்  பார்த்தார் மாட்டு டாக்டர் ..

திருவாரூர்ப் பெரிய கோயிலின் உள்ளே திரும்பிய பக்கமெல்லாம் நந்திகள் ..

" டாக்டர் ஸார் ..  இங்க பாருங்கோ.. இந்த நந்திக்குக்   காது  மட்டும்  உம்பளச்சேரி மாதிரில்ல  இருக்கு ..  இவர்  அச்சு அசலாகப்   புங்கனுர் குட்டை .. இவருக்கு அலைத்தாழி  ஓங்கோல் ஜாடையில் தெரியுது  ..  இவருடைய  கொம்பு மட்டும் மாறுதலாக இருக்கு பாருங்க .. ஒவ்வொருத்தரையும் தனித்தனியாகக்  காண்பித்து  " இவாளையெல்லாம்  நன்னா  படம் எடுத்து ஆராய்ச்சியைத் தொடருங்கோ " என்று  சொல்லி முடித்தேன் ..

அவ்வளவுதான்..   ராத்திரி கோவில் நடை சார்த்தும்  வரைக்கும்  மனுஷர் தனது தேடலை நிறுத்தவில்லை..

இந்த வாரம் ஒரு நாள் அவரைப் பார்த்து வரலாம் என்று அவர் வீட்டுப் பக்கம் போனேன் ..

"எங்க வீட்டுக்காரருக்கு ..என்ன ஸார்  மந்த்ரம் பண்ணினீங்க? " என்று கேட்டார் அவரது மனைவி .. ஒன்றும் புரியாமலே அவரைப்  பார்த்தேன் ..
" எங்களுக்கு கல்யாணம் ஆகி இருவது வர்ஷத்துல  எங்க வீட்டுக்காரர் கோவில் பக்கம் நிழலுக்கும் ஒதுங்குவதில்லைங்க .. அன்னிக்கு ப்ரதோஷத்துக்குக் கூப்பிட்டுப் போய் என்ன பண்ணுனீங்களோ தெரில ..
தினம் ஒரு கோவிலாக இப்போ போக ஆரம்பிச்சுட்டார் ..நெற்றி நிறைய  விபூதி பூசிக்கொள்கிறார்.. இப்போல்லாம் அவர்  பைக் கீ செயினில் கூட நந்தி படம்தான்  இருக்கு .. அடிக்கடி நந்திகளைப் படம் எடுக்கிறார் .. நிறைய எழுதுகிறார் ஸார்   " என்று வியப்புடன் சொன்னார்..





Saturday, April 1, 2017

செம்மலையின் சிற்ப வேலை

2003ம் வருஷம் ..  வீடு அமைப்புக்கு மனுஷ்யாலய சந்த்ரிகை என்னும் (வாஸ்து) க்ரந்தத்தை அநுஸரித்துக்  கட்டுமான வேலைகள் நடந்து வந்தன. 
வாசல் நிலை.. கதவு.. ஸூர்ய பலகை வைக்கும் தருணம் வந்தது.  "கணேசர்..
பத்மங்களை மாலையாக அணிந்து பத்மாஸனத்தில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மீ.. 
யாதவன்" ஆகிய மூவரின் திருவுருவங்களுடன் அமைக்கச் சொல்லியுள்ளது தெரிந்தது.. 
மேற்கொண்டு,  வீட்டில் மரவேலை பார்த்துக்கொண்டிருந்த  ஆசார்யாரிடம் யோசனை கேட்டபோது.. தனக்குத் தெரிந்த ஒரு சிற்பாசாரியின் மாணவர் ஒருவரை அழைத்து வருவதாகச் சொன்னார்.. மறுநாள் அந்த மாணவர் வந்தார்.. அவர்  பெயர்.. செம்மலை..  
"புதிதாக வேலை கற்றுக் கொண்டு வந்த சிறு பையன்தான் சிற்பாசாரியா?"
என்று கட்டுமான வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தவர்கள் 
வியப்புடன் கேட்டார்கள். செம்மலையிடம்   சில  ரூபங்களைப்  பற்றிச்சொன்னதும் அவற்றைக் கோட்டோவியமாக வரைந்தும் காட்டினார்.. யாவும் நன்றாக அமைந்திருந்தன.. 
மாமல்லபுரம்  சிற்பக் கல்லூரி மூலம்  சா.கணேசன் ..கணபதி ஸ்தபதி ஆகியோர் முயற்சியில் வெளிவந்த சிற்பச்செந்நூல் புஸ்தகத்தைக் கொடுத்துப் படித்துப் பார்த்து வரச்  சொன்னதும்..
மகிழ்வுடன் எடுத்துப்போய்விட்டு ஓரிரு நாட்களில் திரும்பி வந்தார்..
அவருக்கு இதுதான் முதல் வேலை ..தைரியமாக பணியை மேற்கொள்ளத் துணிந்தார்..
"ஒரு மரத்தினதாகவே கதவு, நிலை, ஸூர்ய பலகை, வாசல்மாலை, தோரணங்கள் அமைச்சுடலாம்" என்றார் சிற்பாசாரி  செம்மலை.. 
மேலிருக்கும் ஸூர்ய பலகையில்.. இருபுறமும் சங்க சக்ரம்.. மேற்புறம் கல்பக வ்ருக்ஷம்...


முதலில் கணேசர் இருக்க வேணுமென்று சொல்லியிருப்பதால்..
இடக்கரத்தில் கல்பகக் கொடியுடன் வலம்புரியாக க்ஷிப்ர ப்ரஸாத கணபதி...
இரண்டாவதாக லக்ஷ்மீக்குரிய  ஸ்தானத்தில்  ஐச்வர்யலக்ஷ்மீயையும் 
வைத்துவிடலாம் என்று தீர்மானம் பண்ணினோம்.. 
"சரி..  மூன்றாவதாகச் சொல்லப்பட்டிருக்கும்  யாதவ மூர்த்திக்கு எந்த வடிவை அமைப்பது..?
"புல்லாங்குழல் ஊதும் க்ருஷ்ணர் வடிவம் வீட்டில் வைப்பது வழக்கமில்லை..அதனால் ஸ்ரீவித்யா ராஜகோபாலனையே அமைத்து விடலாம் என்று முடிவாயிற்று..



விரல் நுழையும் அளவிற்கு பர்மா தேக்குப் பலகையைக் குடைந்து செண்டாயுதம்.. இடுப்பில் கச்சை.. மணிக்கொடியில் தொங்கும் சாவி.. இருபுறமும் நிற்கும் பசுவும் கன்றுகளுடன் கோபாலன் திருவுருவை அழகுற உருவாக்கினார்...


கதவின்  நடுவில் ராஜஹம்ஸம் .. இருபுறமும் கல்பகக் கொடிகள் வளர்ந்திருக்கும் பன்னீர்ச் செம்புகள்.. கீழ்ப்புறம் தஞ்சை ஸரஸ்வதீ மஹாலய நூலகத்தில் இருக்கும் ஒரு பழைய காகிதச்சுவடியில் இருக்கும் வண்ணப் படத்தை ஒத்த தாமரை மலர் அமைப்பு இவைகளுடன்  அனைத்தையும் ஒரே மாதத்தில் அழகுற அமைத்துவிட்டார் அமைத்துவிட்டார் செம்மலை ஆசாரியார்.  
இப்போதெல்லாம்  செம்மலையைக்  காண்பதே அரிதாகி விட்டிருக்கிறது ..
அவ்வபோது வருவார் .. புள்ளையார், லெட்சுமி, கோபாலன்  மூவரையும்   கண்மூடிக் கும்பிட்டுக்  கன்னத்தில் போட்டுக்கொண்டுவிட்டு..  " இது நாஞ்செஞ்ச முதல்  வேலை .. அன்னிக்கு..  என்ன நம்பிக் குடுத்தீங்க.. இந்த வாசமாலை.. கதவு    போட்டோவைத்தான்  என் மாடல் ஆல்பத்துல முதலா வச்சிருக்கேன்.. ஒரு  பெரிய பார்ட்டி ரொம்பநாளா கூப்டுறாங்க..    ரெண்டுநாளில் சிங்கப்பூர் போய்வர்றேன்  ஸார் .." என்று  சொல்லி விட்டுப் போவார் ப்ரபல சிற்பாசாரி செம்மலை..


  

Monday, March 27, 2017

ஸ்ரீஇளையாற்றங்குடி பெரீவா.. 2

 






ஸ்ரீஇளையாற்றங்குடி பெரீவா ...1


ஸ்ரீஇளையாற்றங்குடிபெரீவா ..இளமையில் திருவிடைமருதூரில்  மஹாராஷ்ட்ர ராஜ வம்சத்துக் குழந்தைகளுடன் விளையாடி வளர்ந்தவர்..

அதனால் மராட்டி ..ஹிந்துஸ்தானி பாஷைகளில் அனாயாசமாகப் பேசுவார்.. குதிரையேற்றத்திலும் நிபுணர்.. 
பீடாதிபத்யம் ஏற்ற பிறகு ஒருமுறை அர்தோதயம் ஸம்பவித்தபோது ஸ்ரீஆசார்யர்கள் குடந்தையில் இருந்தார்கள். மறுநாள் கோடியக்கரையில் ஸமுத்ரஸ்நாநம் பண்ணவேணுமென்று அவர்கள் சொன்னபோது ஸ்ரீமடத்து அதிகாரிகள் திகைத்துப் போயினர்.. 
ஒருநாளில் அவ்வளவு தொலைவை எப்படி அடைவது என்று  அனைவரும் யோசித்தனர்...
இரவு பூஜையை முடித்துக் கொண்ட ஸ்ரீஆசார்யாள்  ஸ்ரீமடத்துக் குதிரையொன்றின் மீதேறி இரவு நேரத்தில் பயணித்துக் கோடியக்கரையை அடைந்து அர்தோதய புண்யகாலத்தில் ஸமுத்ர ஸ்நநாநம செய்து பிற்பாடு அதே குதிரையின் மீதேறி ஸ்ரீமடம் திரும்பினார்களாம்..

ஸ்ரீ இளையாற்றங்குடி பெரீவா..அவர்களின் சிவபூஜை மிகவும் ப்ரஸித்தி பெற்றது ..
அவர்கள் தம் திருக்கண்களை மூடி ஸ்ரீசந்த்ரமௌளீச்வரருக்கு பில்வார்ச்சனை செய்யும்பொழுது.. தோஷ வில்வம் மட்டும் தனியாகத் தெறித்துப் போய் வெளியில் விழுமாம்..
உவேசா அவர்கள்தம் முதிர்ந்த ப்ராயத்தில் ஸ்ரீமடத்திற்கு அவ்வப்பொழுது வந்து ஸ்ரீபெரீவா அவர்களின் ஸ்ரீசந்த்ரமௌளீச்வர பூஜையை தர்சனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்..
அப்போது ஒருமுறை.. உவேசா அவர்கள்.. "ஸ்ரீஇளையாற்றங்குடி பெரீவா அவர்கள்உடலெங்கும் கண்ணாக மிக விமர்சையாக சிவ பூஜை செய்யும் பாங்கைத் தம் சிறு வயதில் கண்டிருப்பதாகவும் .. அதைப்போலவே ஸ்ரீபெரீவா அவர்களின் ஸ்ரீசந்த்ரமௌளீச்வரபூஜையின் அழகும் இருக்கிறது" என்றுஸ்ரீபெரீவாளிடம் மகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டாராம்..

Tuesday, March 14, 2017

ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள் - 5



ஸார் ..
இந்த உலகத்தில் நம் கண்களுக்குத் தெரியும்படியான உடலுடன் அவர் வாழ்ந்தது தொண்ணுறு ஆண்டுகள் .. அவற்றுள்ளும் தாகத்திற்கெனத் தண்ணீர் பருகாமலேயே அவர் இருந்தது சுமார் எண்பது ஆண்டுகள் ..
  • அவர் எப்படித் தண்ணீர் குடிக்காமலேயே வாழ்ந்தார்.. ?
  • எப்படி பசி, தாகம், உறக்கம் இம் மூன்றையும் தன் வசத்தில் வைத்திருந்தார் ?
  • அஷ்டமா ஸித்திகளைப் பெற்ற நிக்ரஹானுக்ரஹ சக்தியாக அவர் எப்படி இருந்தார்?  
                    என்பன கூட ஆரூரன் மனத்தில் கேள்விகளாக  எழவில்லை ..

தமக்கு அத்தகையதொரு வல்லமை இருப்பது உலகிலிருக்கும் பிறருக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதிலும் .. தனிமையில் இருக்கும் தம்மை ஒருவிதமான கீர்த்தியும் சூழ்ந்து கொண்டு விட அனுமதிக்கக் கூடாது என்பதிலும் அவர் கவனமாய் இருந்ததே ஆரூரன் மனத்தில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாய் இருக்கிறது.

ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள் - 4

                                

" என் தம்பி சாச்சுவுக்கு மூணு பாஷையும்  தெரியும்.."

ஸ்ரீஸார்  அவர்கள் கும்பகோணத்தில் ஸஞ்சரித்து வந்தபோது..  சில நேரங்களில்  ஸ்ரீமடத்தின் மேற்பால் இருக்கும் தோட்டத்தில் தனித்திருப்பார்கள்.

அப்போதெல்லாம் அருகிலுள்ள  மரங்களிலிருந்து,,  கிளிகள், சிட்டுக்குருவிகள் முதலிய பக்ஷிகள்  கீழிறங்கி வந்து, அவர்களின் திருமேனியின் மீதமர்ந்து கொண்டு விளையாடிய காட்சிகளைப் பலரும் கண்டுள்ளனர் ..

அதேவிதமாக அணிற்பிள்ளைகள் ஆங்காங்கிருந்து ஓடிவந்து ஸ்ரீஸார் அவர்கள் அன்புடன் தரும் உணவை எடுத்துக்கொள்ளும் ..

காவிரிக்கரையருகில் உயரத்தில் பறக்கும் கருட பக்ஷிகள் கூட.. ஸ்ரீஸார் அவர்கள் கையைக் காட்டி அழைத்ததும் கீழிறங்கி வந்து அமர்வதை அனைவரும் வியப்புடன் பார்த்துள்ளனர்..

"என் தம்பி சாச்சுவுக்கு (ஸ்ரீஸார் அவர்களின் இல்லப் பெயர்)  மனுஷாள் பாஷை, பக்ஷி பாஷை, மிருக  பாஷை  என்னும் மூணு பாஷையும்  தெரியும் " என்று ஸ்ரீபெரீவா அவர்கள்  கூறினதாக ஆரூரனிடம்  ஒருசமயம் ஸ்ரீஸார் சொல்லியிருக்கிறார்கள் ..

தோட்ட வேலை




இன்று ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களின் ஆராதனை தினம்.. 

"ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களின் மனதிற்கு உகந்தது கார்யம் எது?" என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார்..

"தோட்ட வேலை" செய்வது ஸ்ரீஸார் அவர்களுக்குப் பெரிதும் உவப்பான கார்யம்.. 

கும்பகோணம் ஸ்ரீமடத்திலும், திருவெண்காடு ஸ்ரீபரமசிவேந்த்ராள் அதிஷ்டானத்திலும் ஸ்ரீஸார் செய்திருக்கும் நந்தவன கைங்கர்யம் பற்றி வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.. 

நந்தவனம் முழுவதையும் தனியொருவராகக் கொத்தி முடித்தும்.. திருமேனியில் பொட்டு வியர்வையின்றி நின்றிருக்கும் அவரிடம்.." ஸார் இப்டிக் காய்ந்திருக்கே.. துளி மழை பெய்யக்கூடாதா?" என்று கேட்ட அன்பரை நோக்கி முறுவலித்து.. நிர்மலமாயிருந்த ஆகாசத்தைப் பார்த்துக் கைகாட்டிய சில கணங்களில் அவர்களிருவரும் நின்றிருந்த தோட்டத்தின் விஸ்தீரணத்துக்குள் மட்டும் பெருமழை கொட்டித் தீர்த்ததாம்..!

பாரம்பர்யமாக அனுமதிக்கப்பட்ட வ்ருக்ஷங்கள், செடிகொடிகள் தவிர பிறவற்றை வீட்டுத் தோட்டங்களில் வைக்கக்கூடாது என வலியுறுத்துவார். 

நவீன க்ரோட்டன்ஸ் வகைகளால் ஆரோக்யத்திற்குக் கேடு உண்டாகும்... 

புனிதமான நந்தவனத்தை மனத்தால் ஸ்மரித்து.. தன்னால் இயன்ற பணியைத் தொடர்ந்து ஆற்றி வரும் ஒருவனுக்கு கடும் பிணிகள் ஏதேனும் இருப்பினும், அவைகளும் கூட காலக்ரமத்தில் சரியாகி விடும் என்பதும் ஸ்ரீஸார் அவர்களின் கருத்து.

படங்கள் :  ஸ்ரீசிவன் சார் அவர்கள் கைத்தொண்டாற்றிய திருவெண்காடு அதிஷ்டான நந்தவனம்...