Saturday, June 25, 2016

தூயவர் மேன்மையை மிகைப்படுத்தும் சீடர்கள்...


ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களுடன் இருந்த சமயத்தில்.. ஒரு நாள் நண்பருடன் அந்த ப்ரபல உபன்யாஸகரின் நிகழ்ச்சிக்குப் போய் வந்தோம்..
இரவு வெகு நேரம் கழித்து நாங்கள் திரும்பி வரும்வரையிலும் ஸ்ரீஸார் எங்களுக்காகக் காத்திருந்தார்கள்..
ஸ்ரீஸார் அவர்களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு "தாமதமாகிவிட்டது ஸார் " என்று மன்னிப்பைக் கோரினார் நண்பர்..
உடனே ஸ்ரீஸார் ..
" தாமதமானால் பரவாயில்லை .. கதை கேட்கப் போயிருந்தேளே .. அவன் ஸ்வாமியைப் பத்தி கதை சொன்னானா .. அல்லது கதை விட்டானா .. அதை முதலில் எனக்கு சொல்லு ! "
என்று புன்முறுவலுடன் கேட்டார்கள்..
பிறகு ஸ்ரீஸார் ஆரூரனைப் பார்த்து அவர்கள் எழுதிய ஏணிப்படிகளில் மாந்தர்கள் புஸ்தகத்தில் ஒரு பக்கத்தில் இருந்த -
"தூயவர் மேன்மையை மிகைப்படுத்தும் சீடர்கள் பாமரன்"
" போலியையும் அஸலையும் ஒன்றாகப் போற்றுபவர்கள் பாமரன்"
என்னும் வரிகளைச் சுட்டிக் காட்டி வாசிக்கச் சொன்னார்கள்..
....
ஸ்ரீபெரீவாளின் திவ்ய சரித்ரம் .. மஹிமைகளைப் பற்றி அநேக புஸ்தகங்களும்.. பகிர்வுகளும் மழைபோலத் தொடர்ந்த வண்ணம் உள்ளன..
இவரைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு .. அன்று ஸ்ரீஸார் போட்ட கேள்விதான் நினைவுக்கு வருகிறது..
சமீப காலமாக , பக்தி அல்லது ஆர்வம் காரணமாக நடக்காத சம்பவங்களையோ அல்லது ஸ்ரீயவாளின் வாழ்வுக்கும் , வாக்குக்கும் முரணானவற்றையோ ஸ்ரீமடத்திற்கே தொடர்பற்ற சிலர் அச்சுப் போடுவதும்.. உபந்யஸிப்பதும்..
தொடர்ந்து பலர் அவற்றை முகநூலில் வித்யாசமான தலைப்புகளை போட்டு.. காபி.. பேஸ்ட் செய்து வெகுஜன விநியோகம் செய்வதும்...
..ஸ்ரீயவாளையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்து வரும் பல எளிய பக்த ஜனங்களை பெரிதும் வருந்தச் செய்துள்ளது..
இன்று காலை "மஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்." என்று நம்மை அதிரவைக்கும் திடுக்கிடும் தலைப்பிட்டு ஒரு மேட்டரைப் பதிவிட்டிருக்கிறார் ஒரு நண்பர்..
சமயங்களில் இவற்றையெல்லாம் படிக்க வேணுமா .. என்றும் தோணுகிறது..
ஏற்கனவே ஸ்ரீசங்கர பகவத்பாதாள் காலம் மற்றும் அவர்கள் ஸ்தாபித்த மடங்கள் விஷயத்தில் ஸ்ரீயவாள் பலகாலும் அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டிருக்கும் உண்மைகளுக்கு மாறாக மனம்போன போக்கில் உளறிவைக்கும் இவர்களால் ஸ்ரீமடத்திற்கும்.. சிஷ்யாளுக்கும்,.. உண்மைக்கும் .. பிற்காலங்களில் ஈடு செய்ய முடியாத இழப்பே ஏற்படும்..
நவீன எழுத்தாளர்கள் .. ஸ்ரீயவாள் பற்றி எழுதும் முன் .. ஸ்ரீமடத்திற்குச் சென்று ஸ்ரீசந்த்ரமௌளீச்வரரை வணங்கி, அதிஷ்டானங்களை தரிசித்து, ஸ்ரீமதாசார்யர்களை நமஸ்கரித்து ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு , மனமுருகி பிரார்த்தனை செய்து..
..அங்குள்ள அதிகாரிகளிடமும், பெரியோர்களிடமும் உங்களது நோக்கம் பற்றித் தெரிவித்து .. ஸ்ரீமடம் பற்றியும், ஸ்ரீயவாளைப் பற்றியும் விஷயங்களை நன்கு கேட்டறிந்து.. பதிவு செய்து கொண்டு ..
..எழுதிய பின் தக்கவர்களிடம் சரிபார்த்து பின் வெளியிட்டால் நல்லது ..
ஏதோ எளியவர்களின் மனத்திற்குப் பட்டதைச் சொல்லிவைக்கிறோம்..
..மற்றவை எசமான் திருவுள்ளம்...

Tuesday, June 21, 2016

How do you cope with Loneliness ?


அடிக்கடி பலரும் நம்மிடம் வருந்திச் சொல்லும் வார்த்தைகள்.. ” அமெரிக்காவில் பிள்ளை, பொண்ணு இருக்கா.. நாங்க மட்டும் இங்க இருக்கோம்.. தனியா இருக்கவே கஷ்டமா இருக்கு”…
1991 ம் வருஷம்…
ஸத்குரு ஸ்ரீசிவன் சார் அவர்களுடன் ஆரூரன் தங்கியிருந்த போது.. ஒருநாள்..
அரையிருட்டில்.. தனிமையில் ஸ்ரீசார் தன்மயமாக அமர்ந்திருந்தார்..
அப்போது, ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த NRI இளைஞன் ஸ்ரீசாரை தர்சனம் செய்து கொள்ள வந்தான்.. அருகில் சென்று நமஸ்கரித்துவிட்டு அமர்ந்து கொண்டான்..
அமைதியான அந்தச் சூழ்நிலையில் ஸ்ரீசாரிடம் ஏதோ கேட்க வேண்டுமென்று முயன்றான்… வார்த்தை வராமல் தவித்தான்..
இப்படியே அரைமணி ஆயிற்று.. அவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்று கேட்க உத்தரவாயிற்று..
தயங்கியபடியே.. “How do you cope with Loneliness ?” என்று ஸ்ரீசாரிடம் மிகுந்த ஆச்சர்யத்துடன் கேட்டான் அந்த இளைஞன்..
ஸ்ரீசார்…சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு ஆரூரனிடம்..
” இவர் கேட்ட கேள்வி ரொம்பவே முக்யமானது.. அப்படியே உன் டைரியில் இவர் என்னிடம் இன்னிக்கு இப்படி கேட்டார்னு குறிச்சுக்கோ” என்றார்கள்…
அந்தப் பையனைத் திரும்பி தீர்க்கமாகப் பார்த்து விட்டு மௌனமாக அபயம் காட்டினார்கள்..
சட்டென்று எழுந்தவன், அழுதபடியே வணங்கி நமஸ்கரித்து “பதில் கிடைச்சது” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்…
“அவனுக்கு என்ன சார் புரிஞ்சுது ?”என்று கேட்டேன்.. ” நான் ஸித்தியான பிறகு… பிற்காலத்தில் .. இப்போ நம்ப சார் இல்லையேன்னு மனசுக்குள் தோணும்போது உனக்கும் புரியும் .. இப்போ உன் கார்யத்தைப் பார்” என்று மட்டும் சொன்னார்கள்…
 ஸ்ரீசார் அவர்களின் திருவார்த்தைகளை சற்று தொலைவில் இருந்தபடி ஒரு டைரியில் பதிவு செய்து வருவது மற்ற சிஷ்யர்கள் ஆரூரனுக்கு இட்ட பணி.. ஸ்ரீசாரை தர்சனம் பண்ண வரும்போது டைரியை வாங்கிப் படித்து அன்றாடம் அங்கு நடந்த அதிசய சம்பவங்களையும், ஸத்குருவின் திருவார்த்தைகளையும் அறிந்து கொண்டு, ஸ்ரீசாரிடம் மேல் விஷயங்களைக் கேட்டறிந்து தெளிவார்கள். )
இன்று காலை.. பழைய டைரிக் குறிப்பு கண்ணில் பட்டது… பகிர்ந்து கொண்டோம்..

Tuesday, June 7, 2016

எற்றைக்கும்.. ஏழேழ் பிறவிக்கும்..



                                   

ஸ்ரீபெரீவாளிடம் நேரில் கேட்ட திருவார்த்தைகள்  யாவுமே.. அவர்களின் திருவருளால்  அனேகமாக என் நினைவில் நிலைத்து நிற்கின்றன..   இரண்டு சம்பவங்கள் தவிர.. இவற்றுள் ஒன்றை என் தாயாரும் மற்றதை என் தகப்பனாரும் எனக்கு நினைவுபடுத்தினார்கள்.. 

முதலாவது.. என் தாயார் எனக்குச் சொன்னது ..  

ஸ்ரீபெரீவா தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் வாஸம் செய்தபோது நிகழ்ந்த சம்பவம்.. 

அப்போது எனக்குச்  சிறு வயது.. 

ஸ்ரீபெரீவா இருந்த இடத்தின் அருகில் ஒரு கிணற்றின் எதிர்ப்புறம் விளையாடிக்கொண்டிருந்தவனை  அருகில் இருந்த அணுக்கத் தொண்டர் மூலம் பிடித்துக் கொண்டுவரச் சொன்னார்கள் .. 

அவரும் என்னை பிடித்துக் கொண்டுபோய்   ஸ்ரீபெரீவா அருகில் விட்டார்.. 

அப்போது  ஸ்ரீபெரீவா தன்  திருக்கரத்தால் .. சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த என் தாயாரை  என்னிடம் சுட்டிக் காட்டி     " உங்கம்மாவுக்கு எத்தனை பிள்ளைகள் ?" என்று கேட்டார்களாம்... 

" எனக்கு  அண்ணா ஒருத்தன்  இருக்கான்...  நான் தம்பி..  நாங்க ரெண்டு பேர் ..எங்கம்மாவுக்கு பிள்ளைகள்  " என்று பதில் சொல்லியிருக்கிறேன் .. 

உடனே ஸ்ரீபெரீவா " சரி.. உங்க அண்ணா தம்பி ரெண்டு பேர்களில்..  எந்தக் குழந்தையை  நம்ப மடத்து வேலைக்கு  குடுப்பான்னு .. உங்கம்மாகிட்டே  கேட்டு சொல்லு " என்று  சொல்லி என்னை என் தாயாரிடம் அனுப்பி வைத்தார்களாம்..

நடந்தவற்றைப்  பார்த்துக் கொண்டிருந்த என் தாயார்  "பெரிய பிள்ளையை மட்டும் தர மாட்டேன் " என்று தாழ்ந்த குரலில் சொல்லி நமஸ்கரித்து  என்னை மீண்டும் ஸ்ரீபெரிவாளிடம் திருப்பிவிட்டிருக்கிறார்கள் .. 

என் தாயார் மெலிதாகச் சொன்னதைக்  கேட்டுக் கொண்ட ஸ்ரீபெரியவா, மறுமொழி எதுவும் சொல்லாமல் நிறைந்த புன்முறுவலுடன் சிறுவனை அருகில் வரப் பணித்துத்  தன்  திருக்கரத்தால் ஆசீர்வாதம் செய்தார்களாம்  ..

"காமகோடி கைங்கர்யம்.. ஜன்மாவில் ஒரு தரமாவது யாருக்கும் கெடைக்கறதே கஷ்டம் .. தலைமுறை.. தலைமுறையா .. ஸ்ரீமடத்துக் கைங்கர்யம்  பண்ற பாக்யம் ஒண்ணுதான்  நம்ப நெம்மேலி  குடும்பத்துக்கு நிலைத்த  ஐஸ்வர்யம் .. அதுதான் எப்பவும்  வேணும்னு வேண்டிக்கோ ! " என்று அடிக்கடி சொல்வார் என் தாயார்..            


" எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு 
உற்றோமே யாவோம் ! உனக்கே நாம் ஆட்செய்வோம் ! 
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் ! "

 --  ஆரூரன்