Sunday, April 21, 2019

தியாகராஜ ஞானியார்

Image result for thyagaraja tiruvarur

                                                  
1986ம் வருஷத்தில் ஒரு கார்த்திகை சோமவாரம்..   
அன்று மாலையில்.. 
எசமான் ஆரூரனுக்குத் திருவாரூர்  க்ஷேத்ர மாஹாத்ம்யம் பற்றி சொல்லி வந்தபோது இடையே 
 "பந்த காக்ஷி"  தெரியுமோ..?  த்யாகேசா த்யாகேசான்னு  பிள்ளைத்தண்டு போட்டு அஜபா நர்த்தனம் பண்ணுவா.." 
என்றபடி தாம் முன்னொரு சமயம் திருவாரூர் பக்த காட்சி உத்ஸவத்தைக் கண்ணுற்றதை நினைவுகூர்கிறார்கள்..

பிள்ளைத் தண்டு போடும் உரிமை விழிப்பிரமர் என்ற திருவீழிமிழலை அந்தணர்களுக்கு முற்காலத்தில் இருந்தது.. பிற்பாடு எப்படி அது சைவர்கள் வசம் தரப்பட்டது.. என்று கதையைத் தொடர்ந்தவர்கள் .. 
சட்டென்று ஆரூரனைப் பார்த்து  
"உனக்கு த்யாகராஜ ஞானியாரைத் தெரியுமோ?.. அவரும்  பிள்ளைத் தண்டு போடும் சைவக்குடும்பத்தில் வந்தவர்தான்  " என்றார்கள்..
"தெரியாது" என்றதும் 
"அந்த நாளில்  திருவாரூரில் ஒரு பேப்பர் கூட அவர் நடத்திண்டிருந்தாரே"  என்று  குறிப்பிட்டார்கள்..  
அதற்கும் "தெரியாது" என்றே ஆரூரன்  தெரிவித்துக்கொண்டதும் 
" ஞானியார் பத்தி  உங்க தாத்தாவுக்குத் தெரியும்..அவரிடம் கேளு.. மத்தவாளிடமும் மேற்கொண்டு விசாரித்துப்பாரு " என்றார்கள்..

பிற்பாடு எசமான் சொன்னதைப்  பற்றி  தாத்தாவிடம் கேட்டபோது... அக்காலத்தில், திருவாரூரில் தியாகராஜ ஞானியார் என்றொரு பத்திராதிபர்  இருந்ததும் அவர் கமலானி  என்றொரு பத்திரிகையை வெகுகாலம் நடத்தி வந்ததாகவும், அவரும் பிள்ளைத் தண்டு ரகசியத்தைப் பேணும் குடும்பதைச் சேர்ந்தவர்தான்.. என்று தாத்தா மேற்கொண்டு விபரம் சொன்னார்... 
வருஷங்கள் கடந்தன..  
கமலானியும் தியாகராஜ ஞானியாரும் ஆரூரன் மனஸிலிருந்து விடை பெற்றுக்கொண்டார்கள்..
ஆனாலும் ஒவ்வொரு வருஷமும் பந்தக்காட்சி வரும்போது எசமான் பக்தகாட்சி மண்டபத்தருகில் நின்றுகொண்டு அஜபா நர்த்தனம் செய்து கொண்டு வரும் ஸ்ரீதியாகேசரை தரிசிக்கும் காட்சி மனதில் தோன்றும்..  
பிள்ளைத்தண்டு போடுபவர்களைப் பார்க்கும்போது தியாகராஜ ஞானியார் பற்றி எசமான் சொன்னதும்  சட்டென்று தோன்றும்.. 
தற்போது திருவாரூரார் யாருக்கும் ஞானியாரையும் அவர் நடத்தி வந்த கமலானி பத்திரிகை  பற்றியும் தெரியாது..  
இந்த விஷயமெல்லாம் முதலும் கடைசியா எசமான் மனசு வைத்துச் சொன்னால்தான் உண்டு என்று நினைத்துக் கொள்வதுண்டு..

இந்த வருஷமும் பந்தக்காட்சி வந்தது.. ஆனால் போகக்  கூடவில்லை..
  
அன்றிரவில் எசமானர் சொல்லியது பற்றிய நினைப்புடன்..
ஆரூரன் இணையத்தில் எவற்றையோ தேடிக்கொண்டிருந்தபோது  சுப்பிரமணிய பாரதியார்  தொடர்பான ய. மணிகண்டன் அவர்கள் எழுதிய அரிய  கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது..
  
என்னதான் இருக்கிறதென்று மேலோட்டமாகப் பார்த்தபோது..
பாரதியின் மணலி விஜயம் பற்றி அதில் இருக்கவே  மேற்கொண்டு வாசிப்பு ஓடியது.. பாரதி திருவாரூருக்கு அருகில் இருக்கும் மணலி என்னும் கிராமத்திற்குச் சென்றதும், அங்குள்ள குலோத்துங்கன் வாசகசாலையின் முதலாண்டு நிறைவுவிழாவிலே சத்தியமூர்த்தியுடன் பங்கேற்றதும், இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகச் சொற்பொழிவாற்றியதும், தாம் இயற்றிய தேசப் பக்திப் பாடல்களைப் பாடிக்காட்டியதும் அக்கட்டுரையில் விவரிக்கப்பட்டிருந்தது..கட்டுரையின் நிறைவில்  "மணலி குலோத்துங்கன் வாசகசாலை - அரிய உபந்யாஸங்கள்" என்று தலைப்பிட்டு அந்தக் கூட்ட நிகழ்வுகள் மற்றும் சொற்பொழிவுகளின் சுருக்கம் தரப்பட்டிருந்தது..

அதிலிருந்து ஒரு பகுதி..
" மணலி யென்பது திருத்துறைப்பூண்டிக் கருகிலுள்ள ஒரு அழகிய கிராமம். அங்கு ஒரு ஆரம்பப் பாடசாலையும் அதனைச் சார்ந்து குலோத்துங்கன் வாசக சாலையென்ற படிப்பறையும் இருக்கின்றன. அந்த வாசகசாலையின் முதல் ஆண்டு நிறைவு டிஸம்பர் 13ஆந் தேதி திங்கட் கிழமை பிற்பகல் மூன்று மணி முதல் இரவு 10 மணி வரை கொண்டாடப்பட்டது. இடையிடையே வந்திருந்த கூட்டத்தார் அனைவருக்கும் சிற்றுண்டிகளும் இரவில் பலருக்கு போஜனமும் நேர்த்தியாகத் தயார் செய்யப்பட்டிருந்தன.
நெடும்பலம் மிராஸ்தார் ஸ்ரீமான் ஸாமியப்ப முதலியார் அக்ராஸனம் வஹித்தார். அக்ராஸனபதியும், சென்னை யிலிருந்து மேற்படி திருவிழாவுக்கென்று விசேஷமாக அழைக்கப்பட்டிருந்தவர்களாகிய ஸ்ரீமான் ஸத்தியமூர்த்தி அய்யரும், ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியும் பந்தருக்குட் புகும்போது இனிய நாகஸ்வரம் ஒலித்தது....

பிறகு ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியைக் குறித்துத் திருவாரூர் ஸ்ரீமான் ஞானியார் (கமலாஸனி - பத்திராதிபர்) சில விஷயங்கள் தெரிவித்தார்.

அப்பால் ஸ்ரீமான் - பாரதி “இந்தப் பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு (தோடி)”, “ஜயமுண்டு (கமாஸ்)” என்ற கீதங்கள் பாடினார்.ஸபையோர் அடிக்கடி கைகொட்டி வியப்புக் கூறி மகிழும்படி, இரண்டு மணி நேரத்துக்கு மேலே, நெடுநேரம் பேசினார்.... 

பிறகு ஸ்ரீ தியாகராஜ ஞானியார் “அறிவு” என்ற விஷயத்தைக் குறித்துப் பேசினார். மிகவும் ரஸமாகப் பேசி, “அறிவே கடவுள்” என்ற வேதப் பொருளை நாட்டினார். “சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே, தேஜோ மயாநந்தமே” என்ற தாயுமானவர் அடியை மேற்கோளாக நன்கெடுத்துக் காட்டினார்.... 
அப்பால் வேறு சிலர் பேசினார்கள். பிறகு ஸபா நாயகர் சுமார் அரை மணி நேரம் மிகவும் நுண்ணறிவுடனும், ராஜ்ய தந்த்ர பாண்டித்யத்துடனும் பேசினார். ஸாமான்ய ஜனங்களைப் போலவே மிராஸ்தார்களும் உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச விடுதலைக்காகச் செலவிட வேண்டுமென்றார்.பிராமணர் - அல்லாதார் என்ற பேதத்தைக் கண்டித்தார். இதனுடன் சபை முடிந்தது." என்று முடித்திருந்தார் எழுத்தாளர் ய.மணிகண்டன்..
இத்தனை காலம் கழித்து.. 
இன்று, அறியப்படாத பாரதி   என்னும் இக்கட்டுரை வாயிலாக  கமலாஸனி - பத்திராதிபர் தியாகராஜ ஞானியார் சுதந்திரப்போராட்டவீரர் என்றும் , அவர் மஹாகவி பாரதி,   தீரர் ஸத்யமுர்த்தி ஆகியோருக்கும் ஆதரவாக இருந்து திருவாரூர் அருகில் உள்ள கிராமங்களுக்கு அவர்களை அழைத்துச்சென்று கூட்டங்களை நடத்தி தெய்வீகமும் தேசியமும் பரவப் பாடுபட்டவர் என்பதுமான பலவற்றையும்  அறிந்துகொண்டது எசமானவர்களின் கருணையேயன்றி வேறென்ன ?