Wednesday, May 17, 2017

கோவில் நந்தி




அண்மையில் ஒரு கால்நடைத்துறை நிபுணர் வந்திருந்தார் ..
அவருக்குக்  கடவுள் நம்பிக்கை கிடையாது .. அதை மிகப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.. கோவில் குளம் போவதெல்லாம் நேரத்தை வீணடிக்கிற கார்யங்கள் .. கோவில்   கட்றதுக்குப்   பதிலாக நாலு தொழிற்சாலை கட்டி ஜனங்களுக்கு வேலை தரலாம் என்று அறிவுரை சொல்லுவார்..

மெதுவாகப் பேச்சு ஆரம்பித்தது...
பொதுவான லோகாபிராமம் எல்லாம் அவரிடம் விசாரித்தான பிற்பாடு..  " புதுசா என்ன ஸார்  ஆராய்ச்சி பண்ண உத்தேசம் ?"  என்று கேள்வியைப் போட்டேன் ..

"இது வரைக்கும் யாரும் செய்யாததுங்க ..  இது வரையிலும், தமிழகத்தில் மூணு... நாலு நாட்டுப் பசுவினங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.. இன்னும் பல இருந்திருக்கலாம் .. அதனால்   நெடுங்காலமாக  வளர்க்கப்பட்டு வந்துள்ள நாட்டுப் பசுவினங்களைப் பற்றி ஆய்வு செய்யலாம் என்று இருக்கிறேன்.. " என்றார் ..

"நல்லதுங்க .. அவற்றை இனம் காணணும்னா  என்ன செய்யணும் ?" என்றதற்கு "...அது ரொம்ப கஷ்டம் ஸார்.. ஊர் ஊரா போய்தான் தேடணும் .. ஆனாலும் முன்பிருந்து அழிந்து போன்றவற்றைக்  கண்டுபிடிப்பதும் மிக ச்ரமம் .. என்ன செய்யவது என்றுதான் யோசிக்கிறேன்" என்று கவலையுடன் சொன்னார் ..

"அதுக்கு ஒரு ஸுலபமான  வழி இருக்குங்க .." என்று சொல்லி விட்டு " இன்னிக்கு   ப்ரதோஷம்  பெரிய கோவிலுக்குப் போய் நந்தியைப் பார்த்துட்டு வரலாம் வாங்க " என்று  அவரை வற்புறுத்தி இழுத்துப் போனேன் ..
" டைம்  வேஸ்டுங்க.. இதுக்கு பதிலா வேறு எதுனாச்சும் உருப்படியான  கார்யம் பண்ணலாம் " எனப் புலம்பிக்கொண்டே உடன் வந்தார்..

விட்ட வாசற்படி வழியாகப் பெரிய கோயிலின் உள்ளே சென்றோம் ..

" அயிராவணம் ஏறாது  ஆன் ஏறேறி, அமரர் நாடாளாதே ஆரூர் ஆண்ட அயிராவணமே ..என் அம்மானே நின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே " என்று ஓதுவார் உருகிப் பாடி  கொண்டிருந்தார்.

" நம்ப த்யாகராஜா..   ' தேவலோகத்து ஐராவதம் என்கிற யானையும்  வேணாம் -  அந்த தேவலோகமும் வேணாம் .. எனக்கு  இந்த நாட்டுக் காளை மாடும்..  திருவாலூர்  ராஜாங்கமும்  இருந்தா  மட்டும்  போதும்  என்று சொல்லிட்டுப்  பறந்து வந்து இங்கேயே உட்கார்ந்துட்டாராம் .. அதைத்தான் அப்பர் ஸ்வாமிகள் இப்டி பாடறார் " என்று வியாக்யானம் பண்ணியவனை அச்வாரஸ்யத்துடன்  பார்த்தார் மாட்டு டாக்டர் ..

திருவாரூர்ப் பெரிய கோயிலின் உள்ளே திரும்பிய பக்கமெல்லாம் நந்திகள் ..

" டாக்டர் ஸார் ..  இங்க பாருங்கோ.. இந்த நந்திக்குக்   காது  மட்டும்  உம்பளச்சேரி மாதிரில்ல  இருக்கு ..  இவர்  அச்சு அசலாகப்   புங்கனுர் குட்டை .. இவருக்கு அலைத்தாழி  ஓங்கோல் ஜாடையில் தெரியுது  ..  இவருடைய  கொம்பு மட்டும் மாறுதலாக இருக்கு பாருங்க .. ஒவ்வொருத்தரையும் தனித்தனியாகக்  காண்பித்து  " இவாளையெல்லாம்  நன்னா  படம் எடுத்து ஆராய்ச்சியைத் தொடருங்கோ " என்று  சொல்லி முடித்தேன் ..

அவ்வளவுதான்..   ராத்திரி கோவில் நடை சார்த்தும்  வரைக்கும்  மனுஷர் தனது தேடலை நிறுத்தவில்லை..

இந்த வாரம் ஒரு நாள் அவரைப் பார்த்து வரலாம் என்று அவர் வீட்டுப் பக்கம் போனேன் ..

"எங்க வீட்டுக்காரருக்கு ..என்ன ஸார்  மந்த்ரம் பண்ணினீங்க? " என்று கேட்டார் அவரது மனைவி .. ஒன்றும் புரியாமலே அவரைப்  பார்த்தேன் ..
" எங்களுக்கு கல்யாணம் ஆகி இருவது வர்ஷத்துல  எங்க வீட்டுக்காரர் கோவில் பக்கம் நிழலுக்கும் ஒதுங்குவதில்லைங்க .. அன்னிக்கு ப்ரதோஷத்துக்குக் கூப்பிட்டுப் போய் என்ன பண்ணுனீங்களோ தெரில ..
தினம் ஒரு கோவிலாக இப்போ போக ஆரம்பிச்சுட்டார் ..நெற்றி நிறைய  விபூதி பூசிக்கொள்கிறார்.. இப்போல்லாம் அவர்  பைக் கீ செயினில் கூட நந்தி படம்தான்  இருக்கு .. அடிக்கடி நந்திகளைப் படம் எடுக்கிறார் .. நிறைய எழுதுகிறார் ஸார்   " என்று வியப்புடன் சொன்னார்..





1 comment: