Saturday, April 1, 2017

செம்மலையின் சிற்ப வேலை

2003ம் வருஷம் ..  வீடு அமைப்புக்கு மனுஷ்யாலய சந்த்ரிகை என்னும் (வாஸ்து) க்ரந்தத்தை அநுஸரித்துக்  கட்டுமான வேலைகள் நடந்து வந்தன. 
வாசல் நிலை.. கதவு.. ஸூர்ய பலகை வைக்கும் தருணம் வந்தது.  "கணேசர்..
பத்மங்களை மாலையாக அணிந்து பத்மாஸனத்தில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மீ.. 
யாதவன்" ஆகிய மூவரின் திருவுருவங்களுடன் அமைக்கச் சொல்லியுள்ளது தெரிந்தது.. 
மேற்கொண்டு,  வீட்டில் மரவேலை பார்த்துக்கொண்டிருந்த  ஆசார்யாரிடம் யோசனை கேட்டபோது.. தனக்குத் தெரிந்த ஒரு சிற்பாசாரியின் மாணவர் ஒருவரை அழைத்து வருவதாகச் சொன்னார்.. மறுநாள் அந்த மாணவர் வந்தார்.. அவர்  பெயர்.. செம்மலை..  
"புதிதாக வேலை கற்றுக் கொண்டு வந்த சிறு பையன்தான் சிற்பாசாரியா?"
என்று கட்டுமான வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தவர்கள் 
வியப்புடன் கேட்டார்கள். செம்மலையிடம்   சில  ரூபங்களைப்  பற்றிச்சொன்னதும் அவற்றைக் கோட்டோவியமாக வரைந்தும் காட்டினார்.. யாவும் நன்றாக அமைந்திருந்தன.. 
மாமல்லபுரம்  சிற்பக் கல்லூரி மூலம்  சா.கணேசன் ..கணபதி ஸ்தபதி ஆகியோர் முயற்சியில் வெளிவந்த சிற்பச்செந்நூல் புஸ்தகத்தைக் கொடுத்துப் படித்துப் பார்த்து வரச்  சொன்னதும்..
மகிழ்வுடன் எடுத்துப்போய்விட்டு ஓரிரு நாட்களில் திரும்பி வந்தார்..
அவருக்கு இதுதான் முதல் வேலை ..தைரியமாக பணியை மேற்கொள்ளத் துணிந்தார்..
"ஒரு மரத்தினதாகவே கதவு, நிலை, ஸூர்ய பலகை, வாசல்மாலை, தோரணங்கள் அமைச்சுடலாம்" என்றார் சிற்பாசாரி  செம்மலை.. 
மேலிருக்கும் ஸூர்ய பலகையில்.. இருபுறமும் சங்க சக்ரம்.. மேற்புறம் கல்பக வ்ருக்ஷம்...


முதலில் கணேசர் இருக்க வேணுமென்று சொல்லியிருப்பதால்..
இடக்கரத்தில் கல்பகக் கொடியுடன் வலம்புரியாக க்ஷிப்ர ப்ரஸாத கணபதி...
இரண்டாவதாக லக்ஷ்மீக்குரிய  ஸ்தானத்தில்  ஐச்வர்யலக்ஷ்மீயையும் 
வைத்துவிடலாம் என்று தீர்மானம் பண்ணினோம்.. 
"சரி..  மூன்றாவதாகச் சொல்லப்பட்டிருக்கும்  யாதவ மூர்த்திக்கு எந்த வடிவை அமைப்பது..?
"புல்லாங்குழல் ஊதும் க்ருஷ்ணர் வடிவம் வீட்டில் வைப்பது வழக்கமில்லை..அதனால் ஸ்ரீவித்யா ராஜகோபாலனையே அமைத்து விடலாம் என்று முடிவாயிற்று..



விரல் நுழையும் அளவிற்கு பர்மா தேக்குப் பலகையைக் குடைந்து செண்டாயுதம்.. இடுப்பில் கச்சை.. மணிக்கொடியில் தொங்கும் சாவி.. இருபுறமும் நிற்கும் பசுவும் கன்றுகளுடன் கோபாலன் திருவுருவை அழகுற உருவாக்கினார்...


கதவின்  நடுவில் ராஜஹம்ஸம் .. இருபுறமும் கல்பகக் கொடிகள் வளர்ந்திருக்கும் பன்னீர்ச் செம்புகள்.. கீழ்ப்புறம் தஞ்சை ஸரஸ்வதீ மஹாலய நூலகத்தில் இருக்கும் ஒரு பழைய காகிதச்சுவடியில் இருக்கும் வண்ணப் படத்தை ஒத்த தாமரை மலர் அமைப்பு இவைகளுடன்  அனைத்தையும் ஒரே மாதத்தில் அழகுற அமைத்துவிட்டார் அமைத்துவிட்டார் செம்மலை ஆசாரியார்.  
இப்போதெல்லாம்  செம்மலையைக்  காண்பதே அரிதாகி விட்டிருக்கிறது ..
அவ்வபோது வருவார் .. புள்ளையார், லெட்சுமி, கோபாலன்  மூவரையும்   கண்மூடிக் கும்பிட்டுக்  கன்னத்தில் போட்டுக்கொண்டுவிட்டு..  " இது நாஞ்செஞ்ச முதல்  வேலை .. அன்னிக்கு..  என்ன நம்பிக் குடுத்தீங்க.. இந்த வாசமாலை.. கதவு    போட்டோவைத்தான்  என் மாடல் ஆல்பத்துல முதலா வச்சிருக்கேன்.. ஒரு  பெரிய பார்ட்டி ரொம்பநாளா கூப்டுறாங்க..    ரெண்டுநாளில் சிங்கப்பூர் போய்வர்றேன்  ஸார் .." என்று  சொல்லி விட்டுப் போவார் ப்ரபல சிற்பாசாரி செம்மலை..


  

1 comment: