Tuesday, June 20, 2017

நிஜமான த்யாகராஜா



                           
முன்னொரு சமயம் ஒரு கார்த்திகை சோமவாரத்தன்று இரவில்...
"த்யாகராஜான்னா யாருன்னு உனக்குத் தெரியுமோ ?" என்று எஜமான் ஆரூரனைப் பார்த்துக் கேட்டுவிட்டு சில நொடிகள் புன்முறுவலித்தார்கள்..
பதில் சொல்ல தெரியாமல் அவர்களையே பார்த்து வணங்கியபடியிருந்த ஆரூரனுக்கு உதவியாக வந்தார் பாணாம்பட்டு கண்ணன் மாமா ..
"
த்யாகராஜான்னா... திருவாரூர் கோவில்ல இருக்கற ஸ்வாமி" . என்று முந்திக்கொண்டு பதில் சொல்லி சமாளித்தார் கண்ணன் மாமா ..
" இல்ல்ல " என்று எஜமான் அழுத்தமாகத் தலையாட்டி மறுத்துவிட்டார்கள்..
"எல்லாம் பெரீவாளுக்குத்தான் தெரியும் .. அவாதான் சொல்லணும்" என்றார் பாலு மாமா..
சில நொடிகள் எஜமான் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்..
"த்யாகராஜான்னா ... "த்யாகம் பண்ணின ராஜா ..
எல்லா ஐச்வர்யங்களையும் முழுதாக த்யாகம் பண்ணின ராஜா.. அவன் யாரு தெரியுமோ..?
 அவன் மனுநீதிச்சோழன் .. அவன்தான் த்யாகராஜா
" என்று முடித்தார்கள்..
இந்த இரு படங்களையும் பார்க்கின்ற மாத்திரத்தில் மனஸுக்கு இப்படித் தோன்றுகிறது ..
" மனுநீதிச்சோழன் இப்போதிருந்தால்...
தங்களுடைய ஆயுஸு முழுவதும் தங்க, வெள்ளி கிரீடம், ஸிம்ஹாஸனம், சத்ர, சாமராதிகள் என்று எதையுமே விட மனமில்லாமல் அலையும் பலர் இடையில்..
தங்க நூலால் நெய்த பீதாம்பரம்..ஆபரணங்கள் என்று அனைத்தையும் வாரிப் போட்டுக்கொண்டு... அழகுக்கொரு வடிவமாக இருந்து கொண்டு .. லோகமெங்கும் அறுபதாண்டுகள் விஜயம் செய்து .. அத்வைதராஜ்ய லக்ஷ்மீயை நிலைபெறச்செய்து.. சட்டென்று அலக்ஷ்யமாக யாவற்றையும் துறந்துவிட்ட எஜமான்..
 "இவரன்றோ நிஜமான த்யாகராஜா.. " என்றுதான் அதிசயித்திருப்பான்.."
இந்தப் படங்களை பார்க்கின்ற மாத்திரத்தில் மனஸுக்கு இப்படித்தான் தோன்றுகிறது ..


Thursday, June 1, 2017

ஸாமியாரம்மா

திருவாரூர் சாலைக்காரத்தெருவில் இருந்த வாஸு ஐயர் நீண்ட காலம் தந்த்ர ஸாதனை செய்தவர்.. அவ்வப்போது என்னைக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு கமலைப் பராசக்தி பற்றியும் , தேவியின் இடங்கை மற்றும் வலங்கை ஸாதனா மார்க்கம் பற்றியும் எளிமையாகச் சொல்லிக்கொண்டிருப்பார். புஸ்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுவார்..
அவரும், அந்தத் தெருவில் வசித்து வந்த நாகராஜ ஐயரும் நிறைய தந்த்ர ஸாதனைகள் பண்ணியவர்கள் என்பது பலருக்கும் தெரியாது..
வாஸு ஐயர் ஆத்துக்கு வருஷத்துக்கொரு முறை வட தேசத்திலிருந்து ஒரு யோகினி வருவார். கமலாம்பாள் ஸன்னதிக்குப் போய் அமர்ந்திருப்பார்.. அவர் பெயர் தெரியாது .. எல்லோரும் அவரை "ஸாமியாரம்மா" என்றுதான் சொல்வார்கள்
நன்றாகத் தமிழ் பேசுவார்.. நீளக் காவி அங்கியொன்று அணிந்திருப்பார்..நடுத்தர உயரம்.. எலுமிச்சம்பழக் கலரில் இருப்பார்..அவருடைய ஜடையைப் பிரித்துத் தொங்கவிட்டால் அறை முழுக்கப் பரந்து கிடக்கும். குழந்தைகளிடம் பிரியம் அதிகம் கொண்டவர்.. மிகச் சாதாரணமாக இருப்பார். எந்த சித்து வேலைகளையும் செய்ய மாட்டார்.
1973-74ம் வருஷமாக இருக்கலாம்.. அப்போது கோடை விடுமுறை ஸமயத்தில் ஒருநாள்.. நள்ளிரவில் அவர் தங்கியிருந்த அறைப் பக்கம் போனபோது ஏதோ அரவம் கேட்டது..வெளிப்புறம்
ஒரு கம்பி மெஷ் அடித்த ஜன்னல் .. அதன் உட்புறமாக கருநீலக் கலரில் ஒரு நீண்ட துணிமறைப்புக் கட்டிஇருந்தது..
இரவு நேரம் ..
உள்ளே இருந்த குண்டு பல்பு வெளிச்சத்தில் வழியே ஸாமியாரம்மா நிற்பது தெரிந்தது .. தன்னிரு கைகளையும் உயர்த்தி.. மடக்கி மௌனமாக அபிநயித்தபடி யோக ஸாதனை செய்துகொண்டிருந்தார்.. அப்போது அவரது உருவம் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக இருந்தது.. அவ்வளவு உயரத்தைப் பார்த்ததும் நடுக்குற்று வீட்டுக்குள் ஓடி வந்து படுத்துக்கொண்டேன் ..
மறுநாள் அந்தப் பக்கம் போன என்னைக் கையைத் தட்டி அழைத்து " பயந்துட்டியா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு இரண்டு இனிப்புகளைக் கையில் கொடுத்து அனுப்பிவைத்தார் ஸாமியாரம்மா..
அந்த வருஷம்தான் அவர் வாஸு ஐயர் வீட்டுக்குக் கடைசியாக வந்தது.. அப்புறம் அவர் வரவில்லை. சில வருஷங்கள் கழித்து "ஏம்மாமா உங்காத்துக்கு ஸாமியாரம்மா இப்போல்லாம் வர்றதில்லே ? " என்று அவரிடம்கேட்டேன்.. "அந்தம்மா காசிக்குப் போய் கங்கையில் ஜல ஸமாதி ஆய்ட்டாளாம் ! " என்று பதில் சொன்னார் வாஸு ஐயர் ..
இருபது வருஷங்களுக்குப் பிற்பாடு..
ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களிடம் ஆரூரன் அடைக்கலமாகியிருந்த சமயத்தில் ஒருநாள் ஸ்ரீபரமஹம்ஸரது திவ்ய சரித்ரத்தை வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தபோது பைரவீ ப்ராஹ்மணியைப் பற்றிய குறிப்பை வாசித்ததும்.. "ஸாமியாரம்மா" என்ற அந்த யோகினியின் நினைவுதான் வந்தது.