Friday, May 11, 2018

தர்மராஜ்யம்...3

தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மாமன்னர் பல்கலை வித்தகர்.. வைத்ய சாஸ்த்ரத்தில் மிகுந்த தேர்ச்சியும் உடையவர்.. அக்காலத்தில் இருந்த ஆயுர்வேத , சித்த மற்றும் மேற்கத்திய வைத்ய சாஸ்த்ர நிபுணர்கள் பலரும் அவரது அவையை அலங்கரித்தனர்.. எண்ணிலாத அரிய வைத்ய நூல்கள் மற்றும் சித்திரங்களையும் தமது சரஸ்வதி மஹால் நூலகத்தில் சேகரித்து வைத்திருந்தார்..

ஒருசமயம் சரபோஜி மஹாராஜாவுக்கு மனித உடலின் உட்புற உறுப்புகளைக் காணவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாம்..
வைத்ய சாஸ்த்ரங்களில் ..மனித சடலத்தைத் தர்ப்பைப் புல்லால் மூடிக் கட்டிக் கொண்டுபோய் ஆற்று நீரில் மூழ்க வைத்து.. பிறகு சில நாட்கள் கழித்து அழுகிய சடலத்தின் தோலை மெதுவாகச் சுரண்டி எடுத்து வீங்கிய நிலையில் பார்வைக்குப் புலப்படும் நரம்புகளையும் மற்ற உள்ளுறுப்புகளையும் தனித்தனியாகக் கண்டு கொள்ளும்படி சொல்லியிருக்கிறது என்றாலும், இம்முறையானது மன்னரின் கடுமையான ஆசாரத்திற்குப் புறம்பானது என்பதால் இவ்விதம் ஏற்பாடு செய்ய அவருக்கு மனமில்லை.
.
எனவே, இங்கிலாந்திலிருந்து யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட ஒரு மனித எலும்புக்கூட்டைத் தஞ்சைக்கு வரவழைத்து விட்டார்.. அரண்மனையில் சுமார் ஐந்தரை அடி உயரமும் 104 கிலோ எடையும் கொண்ட அந்த எலும்புக்கூட்டைப் பார்த்தவர்களுக்கு அது யானைத் தந்ததினால் ஆனது என்பதை நம்பவே முடியவில்லையாம்...

சில ஆண்டுகள் கழித்து மேலும் ஒரு ரோஸ் உட் மரத்தினால் ஆன எலும்புக்கூட்டையும் தஞ்சாவூருக்கு வரவழைத்து விட்டார் சரபோஜி மஹாராஜா ...

 இவ்விரண்டு எலும்புக் கூடுகளையும் வைத்துக்கொண்டு தஞ்சை ராஜ்யத்திலிருந்த வைத்யர்கள் தமது ஆராய்ச்சிகளை செய்ய உதவினார் மஹாராஜா..

தஞ்சை ராஜ்யம் மறைந்த பிற்பாடு  இவ்விரண்டு அரிய கலைப் பொருட்களும் வெறும் 75 ரூபாய்களுக்கு விற்கப்பட்டுவிட்டனவாம்...

தற்போது இந்தியாவிலிருக்கும் இவ்விரு எலும்புக்கூடுகளையும் 1970ம் ஆண்டு லண்டனில் நடந்த பொருட்காட்சியில் ஒருவாரம்  வைப்பதற்கு  வாடகையாக வெள்ளைகாரர்களிடம் ஐந்து லட்சம் ரூபாயை வசூலித்து விட்டார்கள் நம்ப ஆசாமிகள் என்பது வேறு கதை...

2 comments:

  1. விற்றவர்கள் யார்? இப்போது யாரிடம் அவை உள்ளன?

    ReplyDelete
  2. விற்பவர்கள் யார்? தற்போது அவை யாரிடம் உள்ளன?

    ReplyDelete