Monday, March 5, 2018

விச்வரூப தரிசனம்...II

1995ம் ஆண்டு..எசமானர்களின் சோழமண்டல யாத்திரை.. மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள்,  காரைக்கால் முக்கியஸ்தர்கள் ஏற்பாட்டில்  மாபெரும் வரவேற்பு நடந்தது.

இரண்டு நாட்கள் முகாமிட்டு பிறகு  எசமானர்கள் திருமலைராயன் பட்டினம் வழியே  வாழ்மங்கலம் தமிழக எல்லையில் இருக்கும் செக் போஸ்ட்டைக் கடந்து திருவாரூரில் இரவு தங்குவதாக ஏற்பாடு..

காரைக்கால்  முயல் மார்க் ரைஸ் மில் வளாகத்திலிருந்து எசமானர்கள் இருவரும் புறப்பட்டு பாரதியார் வீதியில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் அப்போதைய  அமைச்சர் சந்திரகாசு, காவல்துறை கண்காணிப்பாளர் பரம்ஜித்சிங், காரைக்கால் மண்டல நிர்வாகி மாத்யூ சாமுவேல், ஊர்  முக்கியஸ்தர்களின் வாகனங்களும் வந்து கொண்டிருந்தன.

ஆரூரனுக்கு அந்த ஊரில் அலுவலகம் ஏற்படுத்தித் தந்து சில காலம்தான் அப்போது ஆகியிருந்தது.

வீதியின் ஓரமாக எசமானரை வணங்கி நமஸ்கரித்ததும் .. தமது திருக்கரத்தை உயர்த்திக்  காட்டினார்கள்,,, வாகனத்தில் இருந்தபடியே மேலே இருந்த அலுவலகத்தின் பெயர்ப் பலகையையும்  வாசித்துவிட்டார்கள்..

சட்டென்று  முன்னால் இருந்து வாகனத்தை ஓட்டி வந்த ஸ்ரீசீதாராம ஐயரிடம் வாகனத்தை நிறுத்தத் சொல்லிவிட்டு இறங்கி விடுவிடுவென்று மாடிப்படிகளில் ஏறி அலுவலகத்துள் வந்து அங்கிருந்த எசமானர்களின் திருவுருவப்படங்களுக்கு புஷ்பம் சார்த்தி, குங்குமத்தை தமது கை நிறைய அள்ளி சுற்றிலும் இருந்த சாதனங்களின் மீது இட்டார்கள்.. ப்ரஸாதம் கொடுத்தார்கள்...

அப்போது ஆரூரனின் பெற்றோர் திருவாரூர் முகாம் வேலைகளை ஏற்பாடு செய்வதற்காக முன்னதாகச் சென்றுவிட்டபடியால்  ஸ்ரீமடம்  முக்யஸ்தரான முதியவர் திருத்துறைப்பூண்டி ஸ்ரீராஜம் ஐயர் மட்டுமே அங்கிருந்தார்.

அவரிடம்-
" நம்ப பையன் தன்னந்தனியா புது ஊர்ல தைரியமா வந்து ஆஃபீஸ் போட்ருக்கான்.. நிறைய வேலை பார்த்துண்டு நன்னா இருக்கணும்" என்று சிரித்தபடியே  சொல்லிவிட்டு  வேகமாகக் கீழிறங்கித் தம் வாகனத்தில் ஏறிவிட்டார்கள்..

சுற்றிலும் இருந்த விஐபி-களுக்கு சற்று நேரம் என்ன நடந்ததென்றே  அறியக்கூடவில்லை..
என்னவென்று அறிய  பலருக்கு ஆர்வம்...
ஒரு சிலருக்கு இப்படி திடீர்  ப்ரோக்ராம் இடையில் வந்து புகுந்ததென்று சற்று கோபம்..

எஜமானர்களின் அடுத்த முகாம் திருவாரூர் என்பதால் ஆரூரனும் வேகமாக வந்து அருகிலிருந்த வாகனத்தில் ஏறிக்கொண்டு கான்வாயின் முன்னால் முந்திக்கொண்டு செல்ல..

சற்று நேரத்தில்..திருமலைராயன் பட்டினத்தில் அபிராமியம்மன் கோயிலில் பொது ஜனங்கள் வரவேற்பு,,

அப்போது ஒரு காவலர் ஆரூரனிடம்   "உங்களை காவல்துறை கண்காணிப்பாளர் அழைக்கிறார்" என்று கூப்பிட்டுப் போய் அருகில் இருந்த காவல் நிலையத்துக்குள் உட்கார்த்தி வைத்து விட்டார்..

அப்போதுதான், முன் அனுமதியின்றி  கான்வாயை இடையில் நிறுத்தி எசமானரை இறக்கி அழைத்துப்போனதாலும்..
பிறகு வாகனங்களை முந்திக்கொண்டு முன்னால் வேகமாகச் சென்றதாலும் மந்திரி உள்ளிட்ட ஓரிரு முக்கியஸ்தர்களுக்கும், காவல்துறைக்கு கண்காணிப்பாளருக்கும் கோபம் வந்து இப்படி உட்கார்த்தி வைத்துவிட்டார்கள் என்பது புரிந்தது..

ஆரூரனுக்கு இளம் வயது.. உள்ளூர் வ்யவஹாரமும் தெரியாது.. இப்போதுள்ளதைப் போல  செல் ஃபோன் முதலிய வசதிகளும் அப்போது கிடையாது.. கையில் காசு இல்லாமல் மேல் சட்டை அணியாமல் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது...
சற்று நேரத்திற்கெல்லாம் வாக்கி டாக்கி ஒலித்தது..

காவல்துறைக் கண்காணிப்பாளரிடமிருந்து உடனே ஆரூரனை வாழ்மங்கலம்  செக்போஸ்ட் அருகில் பத்திரமாக அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லப்பட்டது..

சில நிமிடங்களில் வாழ்மங்கலம் தமிழக எல்லைப்புறக் கண்காணிப்புச் சாவடிக்கு அழைத்து  வந்தார்கள்.. பக்கத்திலிருந்த பெரிய ஆலமரத்தடியில் எசமானர்கள் செல்லும் வாகனங்கள் நிற்பது கண்ணில் பட்டது..

நடந்தவற்றை எவரும் அவர்களிடம் சொல்லவில்லை.. என்றாலும் யாவற்றையும் உணர்ந்து  எல்லைச்சாவடி வந்ததும் வண்டிகளை நிறுத்திவிடச் சொல்லியிருக்கிறார்கள். ஆரூரனைத் திருப்பிக் கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைக்கச் சொல்லிவிட்டு அங்கேயே நின்றுவிட்டிருக்கிறார்கள்.. அதனால் உடன் வந்த எல்லா வாகனங்களும் அப்படியே சாலையோரமாக நின்றிருந்தன.

காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆரூரனை அழைத்துக்கொண்டுபோய்  எசமானர்களிடம் ஒப்புவித்தார்.. நடந்தவற்றுக்கு எசமானர்களிடம் வருத்தத்துடன் மன்னிப்பும்  கோரினார்..

ஆரூரனைக் கண்டதும்..
"அடுத்தது திருவாலூர்தான்..  ஓடிப்போய் முன் வண்டியில் ஏறிக்கோ.. முன்னாடி போ.." என்று  தமக்கேயுரிய  ப்ரகாசமான சிரிப்புடன் எசமான் சொன்னார்கள்...

இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு 1995..
எசமானர் தங்கக் கையால்  குங்குமத்தை அள்ளிப் போட்ட ஆரூரனின் அலுவலகம்  அவரது தெய்வ வாக்கின்படியே  பல்கித் தழைத்து பிற்பாடு.. 2005ல் எசமானருக்கு மாபெரும் வரவேற்பளித்ததும் நாம் ஏற்கனவே கண்டது...

No comments:

Post a Comment