Tuesday, June 7, 2016

எற்றைக்கும்.. ஏழேழ் பிறவிக்கும்..



                                   

ஸ்ரீபெரீவாளிடம் நேரில் கேட்ட திருவார்த்தைகள்  யாவுமே.. அவர்களின் திருவருளால்  அனேகமாக என் நினைவில் நிலைத்து நிற்கின்றன..   இரண்டு சம்பவங்கள் தவிர.. இவற்றுள் ஒன்றை என் தாயாரும் மற்றதை என் தகப்பனாரும் எனக்கு நினைவுபடுத்தினார்கள்.. 

முதலாவது.. என் தாயார் எனக்குச் சொன்னது ..  

ஸ்ரீபெரீவா தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் வாஸம் செய்தபோது நிகழ்ந்த சம்பவம்.. 

அப்போது எனக்குச்  சிறு வயது.. 

ஸ்ரீபெரீவா இருந்த இடத்தின் அருகில் ஒரு கிணற்றின் எதிர்ப்புறம் விளையாடிக்கொண்டிருந்தவனை  அருகில் இருந்த அணுக்கத் தொண்டர் மூலம் பிடித்துக் கொண்டுவரச் சொன்னார்கள் .. 

அவரும் என்னை பிடித்துக் கொண்டுபோய்   ஸ்ரீபெரீவா அருகில் விட்டார்.. 

அப்போது  ஸ்ரீபெரீவா தன்  திருக்கரத்தால் .. சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த என் தாயாரை  என்னிடம் சுட்டிக் காட்டி     " உங்கம்மாவுக்கு எத்தனை பிள்ளைகள் ?" என்று கேட்டார்களாம்... 

" எனக்கு  அண்ணா ஒருத்தன்  இருக்கான்...  நான் தம்பி..  நாங்க ரெண்டு பேர் ..எங்கம்மாவுக்கு பிள்ளைகள்  " என்று பதில் சொல்லியிருக்கிறேன் .. 

உடனே ஸ்ரீபெரீவா " சரி.. உங்க அண்ணா தம்பி ரெண்டு பேர்களில்..  எந்தக் குழந்தையை  நம்ப மடத்து வேலைக்கு  குடுப்பான்னு .. உங்கம்மாகிட்டே  கேட்டு சொல்லு " என்று  சொல்லி என்னை என் தாயாரிடம் அனுப்பி வைத்தார்களாம்..

நடந்தவற்றைப்  பார்த்துக் கொண்டிருந்த என் தாயார்  "பெரிய பிள்ளையை மட்டும் தர மாட்டேன் " என்று தாழ்ந்த குரலில் சொல்லி நமஸ்கரித்து  என்னை மீண்டும் ஸ்ரீபெரிவாளிடம் திருப்பிவிட்டிருக்கிறார்கள் .. 

என் தாயார் மெலிதாகச் சொன்னதைக்  கேட்டுக் கொண்ட ஸ்ரீபெரியவா, மறுமொழி எதுவும் சொல்லாமல் நிறைந்த புன்முறுவலுடன் சிறுவனை அருகில் வரப் பணித்துத்  தன்  திருக்கரத்தால் ஆசீர்வாதம் செய்தார்களாம்  ..

"காமகோடி கைங்கர்யம்.. ஜன்மாவில் ஒரு தரமாவது யாருக்கும் கெடைக்கறதே கஷ்டம் .. தலைமுறை.. தலைமுறையா .. ஸ்ரீமடத்துக் கைங்கர்யம்  பண்ற பாக்யம் ஒண்ணுதான்  நம்ப நெம்மேலி  குடும்பத்துக்கு நிலைத்த  ஐஸ்வர்யம் .. அதுதான் எப்பவும்  வேணும்னு வேண்டிக்கோ ! " என்று அடிக்கடி சொல்வார் என் தாயார்..            


" எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு 
உற்றோமே யாவோம் ! உனக்கே நாம் ஆட்செய்வோம் ! 
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் ! "

 --  ஆரூரன் 

1 comment:

  1. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Bhagyam, Aarooran! Share with us your great experiences with Maha Periyava!

    ReplyDelete