Monday, November 30, 2015

“ அப்பர் ஸ்வாமிகளைப் பற்றி எழுது ! “ - II



பேராசிரியரை ஸ்ரீபெரீவா சந்நிதானத்தில் கண்டதும்  ஒரு கணம் திகைத்தேன்.. 

மேனா அருகில் நின்ற திருக்கோலத்தில் இருந்த ஸ்ரீபெரியவா மெதுவா முன்னால்  நடந்து வந்தார்கள்..

பேராசிரியர் தகப்பனார் சிவஸ்ரீ.அருணைவடிவேல் முதலியாருக்கு சதாபிஷேகம் தொண்டைமண்டல  ஆதீனத்  திருமடத்தில் அன்று நடைபெறவிருப்பதையும் அதற்கு முன்னர் ஸ்ரீபெரியவாளின் அனுக்ரஹம் பெற்றுக் கொள்ள வேணுமென்று அவர்கள் அங்கு பாதகாணிக்கைகளுடன் வந்திருப்பதையும் அணுக்கத் தொண்டர் தெரிவித்தார்..

சிவப்பழமாக விளங்கிய முதலியாரைக்  கனிவுடன் நோக்கிய ஸ்ரீபெரீவா தன்  இரு கரங்களையும் மார்புறத் திருப்பி வைத்தபடி அவருக்கு ஸ்ரீமடவழக்கப்படி ஸாதரா சார்த்தி மரியாதை பண்ண உத்தரவாயிற்று.. பரமசாம்பவரான  முதலியாருக்கு ஸ்ரீபெரீவா செய்வித்த வித்வத் ஸன்மானங்களை அவரும் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொண்டார்.

இது நடந்து முடிந்தவுடன்.. 

என்னை நோக்கிய ஸ்ரீபெரியவா "அப்பர் ஸ்வாமிகளைப் பத்தி எழுது!"  என்று மட்டும் சொல்லி விட்டு சட்டென்று உள்ளே  சென்றுவிட்டார்கள்..

இதை கண்ணுற்ற பேராசிரியரும் "ஸ்ரீபெரியவா உத்தரவாகி விட்டபடியால் வேறெதைப் பற்றியும் எழுத வேண்டாம்... அவர்கள் திருவுளப்பாங்கின் வண்ணம்   நன்கு முயன்று அப்பர் ஸ்வாமிகள் அருள்வரலாறு  மற்றும் உரிய  திருமுறைப் பாடற் குறிப்புகளுடன் எழுதி எடுத்துக்கொண்டு  வா" என்று சொல்லிச் சென்றார்..


ஸ்ரீபெரியவாள் அருளாணைப்படியே கட்டுரை தயாரானது..

கம்பன் கழகக் கட்டுரைப் போட்டிக்கான நாளும் வந்தது...

கட்டுரைக்கான குறிப்புகளை  நன்றாக மனசில் வாங்கி கொண்டு ஸ்ரீபெரீவா திருவுருவை நமஸ்கரித்துப் போட்டி நடைபெறும் ராணிசீதை மன்ற அரங்கிற்குச்  சென்றேன்..

பத்து மணிக்கு போட்டி தலைப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்..

என்னைத் தவிர்ந்த போட்டியாளர்கள் அனைவரும் மூன்று தலைப்புகளுக்கும் கட்டுரை எழுதத் தயாராக வந்திருந்தனர். அப்பர் ஸ்வாமிகளைப் பற்றி எழுதும்படி ஸ்ரீபெரீவா உத்தரவிட்டபடி மூன்றில் எந்தத் தலைப்பானாலும் அப்பர் ஸ்வாமிகளைப் பற்றி  மட்டுமே எழுதும் முடிவில் அமர்ந்திருந்தேன்..

சரியாக மணி பத்து..

அரங்கத்தின் மேடை மீது தோன்றிய  கம்பன் கழகச் செயலாளர் " பெரியபுராணக் கட்டுரைப் போட்டி.... தலைப்பு...." என்று சொல்லி சில நொடிகள் தாமதித்து  "..உடலால் தொண்டாற்றியவர்!" என்று  அறிவித்து முடித்ததுதான்.. எனக்குத் தாங்க முடியாத ஆச்சரியம் ஒருபுறம்.. ஆனந்தம் மறுபுறம்.. 

உடலால் தொண்டாற்றிய அடியவர்களுள் முதன்மையானவர்  அப்பர் ஸ்வாமிகள் .. ஸ்ரீபெரியவா  வாக்கு ஸத்யம்..  அவர்கள் உத்தரவானபடி எழுத வேணும்.. என்பதை  மனத்தில் இருத்தியபடி

  " நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ
        வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு,
  புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு,
         பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி,
  தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, “சங்கரா,
      சய! போற்றி போற்றி!என்றும்,
    “அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ!
    என்றும், “ஆரூரா!என்று என்றே, அலறா நில்லே!."

என்ற அப்பர் ஸ்வாமிகளின்  திருவாரூர்  திருத்தாண்டகத்தில் தொடங்கி "சங்கரா,  ய! போற்றி போற்றி! என்று ஸ்ரீபெரிவாளை நினைந்தபடி வேகமாகக் கட்டுரையை எழுதி முடித்தேன்..

சிலநாட்கள் கழிந்தன..

தமிழ்த்துறையில் பேராசிரியர் அழைப்பதாக அலுவலக உதவியாளர் வகுப்பிற்கு வந்து என்னை அழைத்துப் போனார்..

பேராசிரியர் மிகுந்த முக மலர்ச்சியுடன் அங்கு அமர்ந்திருந்தார் .. வணக்கம் தெரிவித்து அவர் அருகில் சென்றேன்..  கம்பன்  கழகக் கடிதம் என்று சொல்லிக் கையில் கொடுத்தார்..

பெரியபுராணக் கட்டுரைப் போட்டிக்கான முடிவுகள் பற்றிய அறிவிப்பு அதில் இருந்தது.. மூச்சைப் பிடித்துப் படித்தேன்..

திருப்பனந்தாள் ஆதீனத்தார் வழங்கும் முதற்பரிசு ரூபாய் 500/- எனக் குறிப்பிட்டு அதற்கருகில்   என்பெயர்  எழுதப்பட்டிருந்தது.. அன்றைய தினம் மாலை மயிலை ஏவிஎம் ராஜேஸ்வரி அரங்கில் நடைபெறும் கம்பன்  விழாவில் பரிசு தரப்படும் என்றும் அதில் கண்டிருந்தது.

ஸ்ரீபெரிவாளை மனதிற்குள் நினைத்துகொண்டேன்.. பேராசிரியரை நன்றியுடன் நோக்கினேன்..

"அதான் அன்னிக்கே உங்க யஜமான் அப்பர் ஸ்வாமிகளைப் பத்தி எழுதுன்னு உத்தரவு பண்ணிட்டாங்களே.. அவங்க வாக்குதான் என்னிக்கும் சத்தியம்!" என்று வியந்து சொன்னவர்.. 
சற்று யோசித்து..                      

" ஈசர் மிழலை இறையவர்பால் 
                   இமையப் பாவை திருமுலைப்பால்
 தேசம் உய்ய உண்டவர்தாம்  
                   திருமா மகனார் ஆதலினால்
 காசு வாசி யுடன்பெற்றார் 
                   கைத்தொண் டாகும் அடிமையினால்
 வாசி யில்லாக் காசுபடி  
                   பெற்று வந்தார் வாகீசர் "

என்ற  திருநாவுக்கரசு நாயனார் புராண வரிகளைத் தன்னை மறந்து சொன்னார் ...

[உமையம்மை திருமுலைப்பால் அளித்தும்திருவீழிமிழலை ஈசனிடமிருந்து  மாற்றுக் குறைந்த  காசினையே  திருஞான சம்பந்தர் பெற்றார். ஆனால்  கைத்திருத்தொண்டு செய்கின்ற அடிமை ஆதலால் குற்றம் இல்லாத காசினைத் திருநாவுக்கரசருக்கு இறைவன் அளித்தார் என்பது  இதன் பொருள்]

"எல்லாம் பெரியவங்க திருவருள்..! என்னிக்கும் அவங்க  கைங்கர்யமாகிற  'கைத்தொண்டாம் அடிமைநிலை' என்னும் பேறு உனக்கு கிடைக்கும்!" என்று என்னை வாழ்த்தி  அனுப்பிவைத்தார்..


பரிசினைப் பெற்று உடன் காஞ்சீபுரம் சென்று ஸ்ரீபெரியவா ஸ்ரீபாதங்களில் .பணிந்து விபரம் தெரிவித்துக் கொண்டேன். ஸ்ரீபெரீவாளின் திருமுகம் மலர்ந்தது. திருமார்பில் திருக்கையைச்  சார்த்தி நன்றாகத் தெரியும்படி அபய ஹஸ்தம் காட்டி அருளினார்கள்... 

எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் கைத்தொண்டாம் அடிமை நிலை எங்களுக்கு நிலைத்திருக்க வேணுமென நினைத்தபடியே தாழ்ந்து பணிந்தேன்..  

1 comment:

  1. Great Blessing! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

    ReplyDelete