Thursday, November 19, 2015

“ அப்பர் ஸ்வாமிகளைப் பற்றி எழுது ! “ - I



1987ம் வருஷம்.. சென்னையில் லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம்.. சென்னைக் கம்பன் கழகத்தாரின் பெரியபுராணக் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு வெளிவந்தது.. தமிழைப் பாடமாக நான் எடுத்துப் படிக்கவில்லை.. ஆனாலும் அக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்க பெரிதும் விரும்பினேன்.

கம்பன் கழகப் போட்டிகள் சற்று கடினமானவை. தமிழ்நாட்டளவில் போட்டியாளர்கள் வருவார்கள்.. போட்டி அதிகமாக இருக்கும்.. மூன்று தலைப்புகளை முன்கூட்டியே அறிவித்து விடுவார்கள். போட்டி நாளன்று போட்டி தொடங்க அரை மணிக்கு முன்னர் மூன்றில் ஒரு தலைப்பை அறிவிப்பார்கள். அதுவரை போட்டித் தலைப்பை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கும் ஒரு வித்யாசமான வழக்கம் அங்குண்டு..

பெரிய புராணக் கட்டுரைப் போட்டிக்கு முதற் பரிசாக திருப்பனந்தாள் ஆதீனம் சார்பில் ரூபாய் ஐநூறும் அறிவிக்கப்பட்டிருந்தது !

அப்போது கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய புலவர் பாலறாவாயன் அவர்களைச் சந்தித்தேன்.. ன்று மாலை தமிழ்த் துறைக்கு வரும்படி சொன்னார்.

ருக்கு “ஆரூரன்” (திருவாரூக்காரன்) என்பதால் என்னிடத்தில் கொஞ்சம் பிரியம் உண்டு..

பேராசிரியர் பாலறாவாயன்,  முதுபெரும் சைவ சித்தாந்த வித்வான் அருணைவடிவேல் முதலியார் அவர்களின் புதல்வர்.. காஞ்சீபுரத்தில் உள்ள தொண்டை மண்டல ஆதீனத்தின் அடியார் திருக்கூட்டத்தை சேர்ந்தவர்.. (பாலறாவாயன் என்ற பெயருக்கு பால் மணம் மாறாத வாயை உடைய திருஞானசம்பந்தர் என்று பொருள்.. பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் ஸ்வாமிகளுக்கும் இயற்பெயர் பாலறாவாயர்தான்..)

அந்த வருஷம், சென்னைக் கம்பன் கழகத்தின் பெரியபுராணக் கட்டுரை போட்டிக்கு மூன்று தலைப்புகள் தரப்பட்டிருந்தன.. 

முதல் தலைப்பு ..“உள்ளத்தால் தொண்டாற்றியவர்”..இரண்டாவது தலைப்பு உரையால் தொண்டாற்றியவர்”. “உடலால் தொண்டாற்றியவர்" என்பது மூன்றாவது தலைப்பு.

அன்று வெள்ளிக் கிழமை..

மாலை வகுப்புகள் முடிந்தவுடன், கட்டுரைப் போட்டித் தலைப்புகளுடன் தமிழ்த் துறைக்குச் சென்றேன். அங்கிருந்த பேராசிரியர் இத் தலைப்புகள் மூன்றையும் பார்த்தார். 

என்னிடம் திருமுறைகள் மற்றும்  சைவ சித்தாந்தம் விஷயமாக சில கேள்விகளை போட்டார்.. என் பதில்கள் ஓரளவிற்கு அவருக்கு த்ருப்தி அளித்திருக்கலாம்.. கடைசியில் போட்டிக்கு என்னை ஆற்றுப்படுத்த ஒத்துக்கொண்டார்.. அதுவே எனக்குப் பெரும் நிறைவைத் தந்தது..

பெரியபுராணக் கதைச்சுருக்கத்தை வாசித்துப் பார்த்து தலைப்புகளுக்கேற்ற அடியார் வரலாற்றைத் தேர்ந்தெடுத்து, தக்க பாடல் மேற்கோளுடன் குறிப்பெடுத்துக்கொண்டு  திங்கட்கிழமை தமிழ்த்துறையில் உள்ள அவரது அறைக்கு வரும்படியும் சொல்லிக் கிளம்பினார்.. 

பேராசிரியரிடம் விடைபெற்றுக் கொண்டு ஹாஸ்டல் அறைக்குத் திரும்பினேன்..

பெரியபுராண புஸ்தகத்தைக் கையில் எடுத்துப் பிரித்துப் பார்த்தேன்..

ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு டஜனுக்குக் குறைவில்லாமல் அடியார்கள் தென்பட்டார்கள்.. இவர்களில் மணீயாக மூன்று பேரை மட்டும் பொருக்கி எடுக்க முயன்றேன்.. அந்த ஜீவரத்னக் குவியலில் எதைத் தனியாகத் தேர்ந்தெடுப்பது..? நேரம்தான் சென்றது.. அனைவருமே ஒவ்வொரு விதத்தில் பொருத்தமானவர்களாகவே என் மனத்திற்குத் தோன்றினர். இப்படியே இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது..

பிறகு, ஸந்த்யாவந்தனம் பண்ணிவிட்டு ஸ்ரீபெரீவா திருவுருவப் படத்துக்கு நமஸ்காரம் பண்ணியபோது.. காலேஜ்தான் ரெண்டு நாள் லீவாச்சே.. நேரா காஞ்சீபுரம் போய் ஸ்ரீபெரீவாளிடம் கேட்டு அவாள் உத்தரவுபடி செய்யலாமே! என்று தோன்றியது..

அதிகாலை கிளம்பி காஞ்சீபுரம் ஸ்ரீமடத்திற்கு வந்து சேர்ந்தேன்….

ஓரு மணி ஜபம் முடிந்து சற்று நேரம் ஆகியிருக்கலாம்.. ஸ்ரீபெரீவா மேனாவுக்கருகில் நின்றபடி தரிசனம் தந்துகொண்டிருந்தார்கள்..

அருகிலிருந்த அணுக்கத் தொண்டர் என் பாட்டனார் பெயரைச் சொல்லி, அவருடைய பேரன் என்று சொன்னபோது.. “ எங்கே வந்தாய்?” என்பது போல ஸ்ரீபெரீவா என் பக்கம் திருக்கண் சார்த்தினார்கள்.. 

உடனே சென்னைக் கம்பன் கழகத்தினர் நடத்தும் போட்டிகளுள் ஒன்றான பெரிய புராணக் கட்டுரைப் போட்டி பற்றி ஸ்ரீபெரீவாளிடம் விக்ஞாபனம் செய்து கொண்டேன்..

“எதைப் பத்தி எழுதணும்?” என்று ஸ்ரீபெரீவா  ரத்னச் சுருக்கமாகக் கேட்டார்கள்.. உள்ளத்தால் தொண்டாற்றியவர், உரையால் தொண்டாற்றியவர், உடலால் தொண்டாற்றியவர் என்று மூணு தலைப்பு கொடுத்திருக்கா.. அரை மணி முன்னாடிதான் இதில் ஒண்ணைச் சொல்வாளாம்.. அதைப் பத்தி எழுதணும்” என்று பயந்தபடி சொன்னேன்..

மேற்கொண்டு ஏதும் சொல்லாமல் இருந்த  ஸ்ரீபெரிவா, சில நிமிஷங்கள் கழித்து வலப்புறமாகத் திரும்பி பார்த்தார்கள்..

அங்கே... க்யூ வரிசைக்கு சற்று தள்ளி...
பேராசிரியர் பாலறாவாயன் தன் பெற்றோருடன் வந்து ஸ்ரீபெரீவா தரிசனத்திற்காக வந்து நின்றார்..

                                                                                                                            
                                                                                                                            தொடரும்...

2 comments:

  1. மிக மிக அருமை... படிக்க படிக்க திகட்டாத பதிவு.,,
    எந்த தலைப்பு முடிவானது ஐயா?

    ReplyDelete
  2. Aarooran! Enna indha suspense cinema and serial mathiri?

    ReplyDelete