Thursday, November 26, 2015

திருவாரூர் தேர் உருவகம் - I



1976ம் வருஷம்…
திருவாரூரிலிருந்து எங்கள் பெற்றோருடன் விடுமுறைக்காகச் சென்னைக்குப் போயிருந்தோம்… சென்னையில் நிறைய இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். நடுவில் ஒருநாள் புதிதாகக் கட்டப்பட்டிருந்த வள்ளுவர்கோட்டத்தைப் பார்க்க அழைத்துப் போனார்கள்…
குழந்தைகளான நாங்கள் வள்ளுவர்கோட்டத்தைச் சுற்றிச்சுற்றி வந்தோம்.
திருவாரூரில் ஸ்ரீதியாகராஜஸ்வாமி ஏறி வரும் பெரிய தேர் போலவே அச்சு அஸலாக வள்ளுவர்கோட்டம் இருப்பதைப் பார்த்து எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம்..!
ஸ்வாமி வரும் பெரிய தேரை இழுக்கும் பெரிய குதிரைகள், யாளி, வடங்கள் என்று சிலதுகள் மட்டும் இல்லை. மற்றபடி திருவாரூர்த்தேரை அப்படியே அலாக்காகத் தூக்கிகொண்டுவந்து சென்னையில் வைத்ததுபோல இருந்தது…!
தேருக்கு மேலே ஜடாமுடியுடன் தாடி வைத்துக்கொண்டு யாரோ ஒரு ஸ்வாமிகள் உட்கார்ந்திருப்பதாக நினைத்தோம்…
எங்களை அழைத்துப்போன பெரியவர்கள் அது திருவள்ளுவர் என்று சொல்லி சுற்றிலும் பொறிக்கப்பட்டிருந்த திருக்குறளைக் காட்டினார்கள். நம் ஊர்க்காரரான கருணாநிதிதான் அதைக் கட்டியிருப்பதாகச் சொன்னார்கள் .
“இங்கு வைத்திருக்கும் எந்த போர்டிலும் திருவாரூர் தேர் பற்றி இல்லை. விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் சிறு படங்கள் மற்றும் புஸ்தகங்களும் திருவாரூர்த் தேர் பற்றிய எந்தவிதமான ரெபரன்சும் இல்லாமல் இருக்கின்றன. இதைக்கட்டிய கருணாநிதியையும் திறப்பு விழாவுக்குக் கூப்பிடலையாம். இனிமேல் இது திருவாரூர் தேர் என்று யார்தான் பெருமையுடன் அடையாளம் காட்டப்போகிறார்களோ தெரியவில்லை…” இப்படியே ஒரு அங்கலாய்ப்புடன் எங்களை அழைத்துப்போன பெரியவர்களின் பேச்சு தொடர்ந்தது…
ஓரிரு நாட்கள் கழித்து காஞ்சீபுரம் ஸ்ரீமடத்திற்குச் சென்றோம்….
அப்போது ஸ்ரீமஹாபெரியவாள் அருகில் ஒரு கிராமத்து சிவாலயத்தில் (சிவாஸ்தானம் என்று நினைவு) இருந்தார்கள்…
சாயங்கால நேரம்…
ஒரு கிணற்றடிக்கப்பால்… அரையிருட்டில் ஸ்ரீபெரியவாள் தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
பெற்றோர் மற்றும் குழந்தைகள் சந்நதியில் நேர்வரிசையாக நின்றோம்.
கைங்கர்யம் செய்பவர்: “ஆடிட்டர் வெங்கட்ராமையர் பையன், மாட்டுப்பெண் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள். வந்தனம் பண்ணுகிறார்கள்”.
ஸ்ரீபெரியவாள்: “எங்கேயிருந்து வருகிறார்கள்?”
குழந்தை: (முந்திக்கொண்டு) “லீவுக்கு மெட்ராஸ்போய்ட்டுத் திரும்பி வரோம்.”
ஸ்ரீபெரியவாள் : “மெட்ராஸில் பார்த்த இடங்களில் எது உனக்கு ரொம்பப்பிடிச்சிருந்தது ? ”
குழந்தை: “வள்ளுவர்கோட்டம் .”
ஸ்ரீபெரியவாள்: “வள்ளுவர்கோட்டம் எது மாதிரி இருக்கு?”
குழந்தை: “எங்கூர் தேர் மாதிரியிருக்கு ”.
ஸ்ரீபெரியவாள்: “அது உங்க ஊர்க்காராளுக்குத் தெரியும். வெளியூர் ஜனங்களுக்குத் தெரியாதே. அதற்கு என்ன பண்ணணும்?”
குழந்தை: “அது எங்க திருவாரூர் தேர் மாதிரி இருக்குன்னு எழுதி வைக்கணும்”.
ஸ்ரீபெரியவாள்: (குழந்தைகளின் தகப்பனாரைப்பார்த்து) வள்ளுவர்கோட்டத்தில் எல்லாரும் படிக்கும்படியாக “திருவாரூர்த்தேர் உருவகம்” என்று ஒரு போர்டு கட்டாயம் எழுதி வைக்கணும். நீ யாரிடமாவது சொல்லி அதற்கு ஏற்பாடு பண்ணு !”.
அன்று ஸ்ரீபெரியவாள் மெல்லிய குரலில் என்னிடம் மெதுவாக ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு பதில்களை வரவழைத்த விதம் தற்போதும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது .
இந்த நிகழ்ச்சிக்குப் பிற்பாடு என் தகப்பனார் பலபேரிடம் சொல்லி முயற்சித்தும் வள்ளுவர் கோட்டத்தில் “திருவாரூர் தேர் உருவகம்” என்ற வாசகம் எழுதி வைக்கக்கூடவில்லை….
















1 comment:

  1. இப்போது கூடச் செய்ய மாட்டார்களா? அப்படியானால் பக்தர்களே ஒரு போர்ட் எழுதி வைக்க வேண்டியதுதான்!

    ReplyDelete