Monday, November 16, 2015

திருவாரூர் ஸ்கந்த புராணக் கல்வெட்டு





திருவாரூர் ஸ்ரீத்யாகராஜஸ்வாமி திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தின் கீழ்ப்புறம்  ஆயிரக்கால் மண்டபத்தின் அருகில் உள்ளது சங்க தீர்த்தம் என்னும் பொய்கை.. 

சங்கன் என்னும் தவசியின்  குஷ்ட ரோகம் இதில் நீராடத்  தீர்ந்தது. சமத்காரன் என்னும் மாமன்னன் முனிவர் சொற்படி இப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடித் தன் சர்மநோய் நீங்கப் பெற்றான் என்பது புராணச் செய்தி.. 

பாற்குளம் ஒத்த இந்தப் புனித தீர்த்தத்தில் -
" சைத்ர மாதம், வளர் பிறையில், சித்திரை நட்சத்ரத்தில் சந்த்ரன் பிரவேசிக்கும் நேரத்தில்   உண்ணா நோன்பிருந்து பக்தியுடன் நீராடுவோர் குறையா உடலும் தேஜஸும் பெறுவர் . இம்மொழி வாய்மை !" என்று புராண ச்லோக ப்ரமாணம்   காட்டும்  வடமொழி க்ரந்த லிபியிலமைந்த சோழர் காலக் கல்வெட்டு இங்கு பொறிக்கப்பட்டுள்ளது.. 

இக் கல்வெட்டில் காணப்படும்  ச்லோகங்கள் பதிணெண் புராணங்களில் ஒன்றான ஸ்காந்த புராணத்துள் அடங்கியதான நாகரகண்டம் என்னும் பகுதியில், திருவாரூர் ஸ்தல மகிமை கூறும் கமலாலய க்ஷேத்ர மாஹாத்ம்யத்தின் பதினோராவது அத்யாயம்,  38 மற்றும் 39 வது ச்லோகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

புராண ச்லோகங்கள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ள இக் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு  இதன் காலம் கி.பி.12- 13ம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

வடமொழியிலமைந்த நாகர கண்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்புகளாக  கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் மறைஞானசம்பந்த முனிவரால்  கமலாலயச் சிறப்பு என்னும் புராண நூலும்,  நிரம்பவழகிய தேசிகர் சீடரான அளகை சம்பந்த முனிவரால்  திருவாரூர்  புராணம் என்னும் நூலும் இயற்றப்பட்டன. 

"  மேன்மை சான்றதோர் காந்த மாபுராணத்தின் விரிந்த
             ஞான மாதவர் புகழ்தரு நாகரகண்டம் " என்று இதனைப் போற்றுவார் அளகை சம்பந்த முனிவர்.

சோழர் காலத்தில் ஸ்தல புராணங்கள் வழங்கியமை பற்றி ஆய்வோருக்கு இக் கல்வெட்டு பெரிதும் உதவும்.




சமீப காலத்திலும் தோல் நோயுள்ளவர்களைச் சங்க தீர்த்தத்தில் நீராடச் சொல்லும் வழக்கம் இவ்வூரிலுண்டு. 

சங்க முனிவர் பெயரால் தோன்றிய இத்தீர்த்தம் தற்போது சங்கு தீர்த்தம் என வழங்குகிறது. 

சில நாட்களுக்கு முன் நடந்த திருப்பணியின்போது சங்குச் சிலை  ஒன்றையும் கோயிலார் இங்கு  வைத்து விட்டனர்..!

1 comment:

  1. Can you upload Thiruvaaroor Puranam? Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

    ReplyDelete