Sunday, May 27, 2018

அதிர்வேட்டு


அதிர்வேட்டு எப்டி போடுவாங்கன்னு நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை..
கவனமா கேளுங்க..
சக்கரங்கள் வைத்த, சிறு கயிற்றால் இழுத்துச் செல்லும்படிக் கட்டப்பட்ட  ஒரு கனமான மரத்துண்டின் மேற்புறம் செங்குத்தாக நான்கு  அல்லது ஐந்து இரும்புக் குழாய்களைச் செருகியிருப்பார்கள்.. அவற்றில் இரண்டிரண்டாக நான்கில்  மட்டும் வெடி மருந்தை இட்டு நன்றாகக் கிடித்துக் கொள்வார்கள்..
ஒவ்வொரு குழாயின் கீழிருக்கும் துளையும் நீளமான  ஒரே கரித்திரியால் இணைக்கப்பட்டிருக்கும்.. வெடி மருந்து இடிக்கப்பட்டு  தயார் நிலையில் இருக்கும்..

ஆழித்தேர் புறப்படத் துவங்கும் சில கணங்களுக்கு முன் ..
லேசாக ஒரிரிரு முறை மெல்லிய தம்பட்டத் தட்டுச்  சப்தம் கேட்கும்.. பக்தர்கள் வடம்பிடிக்கத் தயாராகுவர்..

அந்தக் கணத்தில் ... ஆ ...ரூ.....ரா..... என்ற நீண்ட கணீர் என்ற குரல் கேட்கும்போது .. அதிர் வேட்டுச் சகடையின்  பின்புறம் உள்ள   திரியைப் பற்ற வைத்தவுடன்..
இரு வினாடிகளுக்குள்  படீர் .. படீர் .. என்று போடப்படும் இரட்டை அதிர்வேட்டில் பூமி அதிரும்..
கோபுரங்களின் மேலிருக்கும் பல நூறு பக்ஷிகள்  அதிர்வேட்டு சப்தத்தில் ஆகாசத்தில்  தேரைச் சுற்றிப் பறக்கும்..

வடம் பிடிக்கப்பட்டவுடன் .. மஹாமேருவையொத்த உயரமும்,  வடிவமும் கொண்ட ஆழித்தேர் மெள்ளமாகக் குலுங்கியபடி ...தேர்க் குதிரைகள் வலமிடமாக மெள்ள அசைந்தபடி...   சற்று முன் செல்லும்..

வெகு துரத்தில் இருக்கும் பக்தர்கள் அதிர்வேட்டு சப்தம் கேட்டவுடன் "த்யாகேசா.." என்று கன்னத்தில் போட்டுக் கொண்டபடி தேரிருக்கும் திசை நோக்கி  வடம் பிடிக்க விரைவார்கள்.. .

தேவாசிரியன் மண்டப ஓவியத்தொகுதியில் வஸந்தோத்சவத்  திருநாள் சித்திரத்தில் ஐந்து குழாய்களுடன் கூடிய அதிர்வேட்டுச் சகடை வண்டியைப் பாருங்கள்..

இப்போது சகடை வண்டி மாத்திரம் உள்ளது.. மருந்தைக் கிடித்துப் பற்ற வைக்கும் இரும்புக்குழாய் அமைப்பு இல்லை.. அதற்குப் பதிலாக உள்ளூர் ஆனை வெடிகளைப் பற்ற வைத்து வெடிக்கிறார்கள்...

Tuesday, May 22, 2018

தர்ம ராஜ்யம் ..4 : டபீர் பண்டிதர்


Related image

தஞ்சை மன்னர் பிரதாபஸிம்ஹரின் அமைச்சர்..
அரசு மற்றும் நிதி நிர்வாகத்தில் திறமை வாய்ந்தவர்
பழைய முகலாயர் காலத்து நில அளவை முறைக்கு மாற்றாகப் புதிய முறையை ஏற்படுத்தித் தஞ்சை அரசின் வருவாயையும், குடிகளின் நலனையும் பெருக்கியவர்..         
ப்ரதாபஸிம்ஹர் மற்றும்  டபீர் பந்த் ஆகியோரின் மேலான ப்ரார்த்தனையை ஏற்று, கலாப காலத்தில் காஞ்சியிலிருந்து தஞ்சை சீமைக்கு விஜயம் செய்த ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 62வது ஆசார்யர்களான  பூஜ்யஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர  ஸரஸ்வதீ சுவாமிகள் அவர்கள் (1746-1783A.D) காவிரி தீரத்தில் வாஸம் செய்யவேணும் என்று எண்ணியதற்காகக்  கும்பகோணத்தில்  காவிரியின் தென்கரையில் பகவத் படித்துறையருகில்  பூர்விகமாக ஸ்ரீமடத்துக்கிருந்து வந்த கிளை மடத்தை விரிவாக்கித் தந்தவர்.. அருகில் டபீர் அக்ரஹாரத்தையும், குளமொன்றையும் ஏற்படுத்தியவர்.. 
                       Image result for tanjore pratapa simha
நவாப் ஆட்சிக்காலம் வரைக்கும்  தஞ்சை ராஜ்யத்தில் ஸ்ரீமடத்திற்கு ஆங்காங்கு இருந்த நில வருமானங்களை  வசூல் செய்வதில் இருந்து வந்த நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு  ஒவ்வொரு சுபாவிலும்  ஸ்ரீமடத்திற்குச் சேரவேண்டிய நிலவருமானத் தொகையைக் கணக்கிட்டு  அரசு அதிகாரிகள் மூலம் நேரடியாகக் கொண்டு செலுத்தப்படும் முறையை இவர் ஏற்படுத்தினார்..
இதையொத்த வசூல் முறை ஏற்படுத்தப்படாத காரணத்தால்தான்  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆற்காடு பிரதேசங்களில்  ஏறக்குறைய 750 க்ராமங்களில் வருஷாந்தர விளைச்சலில் ஸ்ரீமடத்துக்கு இருந்து வந்த "மேரை" என்னும் பங்கை வசூலிப்பதில் பிற்காலங்களில் முட்டுப்பாடு ஏற்பட்டது..  தொண்டைமண்டல க்ராமங்களிலிருந்து, ஸ்ரீமடத்திற்கும், பிற தேவஸ்தானங்களுக்கும் சேரவேண்டிய விளைச்சல் பங்கும்  அறவே நின்று போனது..
ஆனால், டபீர் பண்டிதரின் நிர்வாகத் திறமையால்  ஸ்ரீமடத்திற்கு " வேலி  குறுணி"   என்னும் விகிதத்தில் 18-19 நூற்றாண்டுகளில்  நிலையான வருமானம்  தொடர்ந்து கிடைத்தமை பற்றி  மராட்டிய மோடி ஆவணங்கள் நமக்கு அறிவிக்கின்றன..

டபீர் பண்டிதருக்கு பசுக்களை பராமரிப்பதில் ஈடுபாடு அதிகம் இருந்ததாம்.. அவரே  நேரடியாக கோசேவையில் ஈடுபடுவாராம்..ஒருமுறை, அரசங்க அலுவல் காரணமாகக் கொட்டிலில் இருந்த பசுக்களுக்குத் தண்ணீர் காட்டச் சற்று தாமதமாகி விட்டதாம்.. கோமாதாவிற்குத் தாம்  பெரிய  அபராதம் இழைத்து விட்டதாகப் பெரிதும் வருந்தினாராம் பண்டிதர்..

இப்பெரும் பாவத்திற்கு பிராயசித்தமாகத்  தஞ்சை  விஜய ராமர் கோயிலையும்,  டபீர் குளத்தையும் அமைத்தாராம்.. விஜயராமருக்கு 'ப்ரதாப ராமர்' என்ற பெயரும் உண்டு. இங்கு  "கணேச லீலார்ணவம்" நாடகம் நடிக்கப்பட்டதாகவும் அறிகிறோம். இக்கோயிலை "டபீர் ராமசாமி கோயில்" என்றே  தஞ்சை மக்கள்   இன்றும்  அழைக்கின்றனர் 

Friday, May 11, 2018

தர்மராஜ்யம்...3

தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மாமன்னர் பல்கலை வித்தகர்.. வைத்ய சாஸ்த்ரத்தில் மிகுந்த தேர்ச்சியும் உடையவர்.. அக்காலத்தில் இருந்த ஆயுர்வேத , சித்த மற்றும் மேற்கத்திய வைத்ய சாஸ்த்ர நிபுணர்கள் பலரும் அவரது அவையை அலங்கரித்தனர்.. எண்ணிலாத அரிய வைத்ய நூல்கள் மற்றும் சித்திரங்களையும் தமது சரஸ்வதி மஹால் நூலகத்தில் சேகரித்து வைத்திருந்தார்..

ஒருசமயம் சரபோஜி மஹாராஜாவுக்கு மனித உடலின் உட்புற உறுப்புகளைக் காணவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாம்..
வைத்ய சாஸ்த்ரங்களில் ..மனித சடலத்தைத் தர்ப்பைப் புல்லால் மூடிக் கட்டிக் கொண்டுபோய் ஆற்று நீரில் மூழ்க வைத்து.. பிறகு சில நாட்கள் கழித்து அழுகிய சடலத்தின் தோலை மெதுவாகச் சுரண்டி எடுத்து வீங்கிய நிலையில் பார்வைக்குப் புலப்படும் நரம்புகளையும் மற்ற உள்ளுறுப்புகளையும் தனித்தனியாகக் கண்டு கொள்ளும்படி சொல்லியிருக்கிறது என்றாலும், இம்முறையானது மன்னரின் கடுமையான ஆசாரத்திற்குப் புறம்பானது என்பதால் இவ்விதம் ஏற்பாடு செய்ய அவருக்கு மனமில்லை.
.
எனவே, இங்கிலாந்திலிருந்து யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட ஒரு மனித எலும்புக்கூட்டைத் தஞ்சைக்கு வரவழைத்து விட்டார்.. அரண்மனையில் சுமார் ஐந்தரை அடி உயரமும் 104 கிலோ எடையும் கொண்ட அந்த எலும்புக்கூட்டைப் பார்த்தவர்களுக்கு அது யானைத் தந்ததினால் ஆனது என்பதை நம்பவே முடியவில்லையாம்...

சில ஆண்டுகள் கழித்து மேலும் ஒரு ரோஸ் உட் மரத்தினால் ஆன எலும்புக்கூட்டையும் தஞ்சாவூருக்கு வரவழைத்து விட்டார் சரபோஜி மஹாராஜா ...

 இவ்விரண்டு எலும்புக் கூடுகளையும் வைத்துக்கொண்டு தஞ்சை ராஜ்யத்திலிருந்த வைத்யர்கள் தமது ஆராய்ச்சிகளை செய்ய உதவினார் மஹாராஜா..

தஞ்சை ராஜ்யம் மறைந்த பிற்பாடு  இவ்விரண்டு அரிய கலைப் பொருட்களும் வெறும் 75 ரூபாய்களுக்கு விற்கப்பட்டுவிட்டனவாம்...

தற்போது இந்தியாவிலிருக்கும் இவ்விரு எலும்புக்கூடுகளையும் 1970ம் ஆண்டு லண்டனில் நடந்த பொருட்காட்சியில் ஒருவாரம்  வைப்பதற்கு  வாடகையாக வெள்ளைகாரர்களிடம் ஐந்து லட்சம் ரூபாயை வசூலித்து விட்டார்கள் நம்ப ஆசாமிகள் என்பது வேறு கதை...