Sunday, August 13, 2017

பணம் பண்ணும் வழி

பொதுவாக வருமானத்தைப்  பெருக்க வேணுமானால் செலவைக் குறைக்கணும் என்று சொல்வது வழக்கம்... 

ஆனால் சில பேர் வருமானத்திற்கு அதிகம் செலவு பண்ணுவதில்லை..
திறமையும், நேரமும்தான் அவர்களுக்கு முக்யம்.. 

அதிகமான பிரயாசை ஏதுமின்றி பணம் பண்ணும் சில பேர்வழிகள்..
எப்போதாவது நம்மிடம் வந்து தமது தொழில் சாமர்த்யத்தைப் பகிர்ந்து கொள்வதும் உண்டு..

அவற்றுள் சில..  சுலபமான  ஐடியாக்கள் நம்மைத் திகைக்க வைத்து விடும்.. 
அவை மற்றவர்களிடம் கறந்து பணம் வாங்கக் கூடியவையாகவும்  இருக்கலாம்.. 

ஆனால் பயனாளிகளுக்கு அது விஷயமாகவே இருப்பதில்லை என்னும்போது மற்ற ஆட்சேபங்கள் அடிபட்டுப் போகின்றன..

ஒரு நபர்.. 

அவரின் முக்கிய வியாபாரம் இதுதான்..    

பெரிய நகரம் ஒன்றின் பிரதான காய்கறி மார்கெட்டில் தினமும் அதிகாலை ரெண்டு லாரி லோடு கறிவேப்பிலை எடுத்துத் தன்னுடைய ஷெட்டிற்குக் கொண்டு வந்து பிரித்துச் சுத்தம் செய்து கட்டுகளாக்கி சந்தைக்கு அனுப்பி வைப்பார்.. பிற்பாடு காசு தானே வந்து விடும்..

காலை 8 மணி சுமாருக்கு இந்த வேலை முடிந்தவுடன்.. 

அருகிலிருக்கும் வீட்டுக்குப் போய்க் குளித்து சாப்பிட்டு விட்டு டாணென்று 9.30க்கெல்லாம் மறுபடியும் சீட்டுக்கு வந்து உட்கார்ந்து கொள்வார்..

அப்போது நான்கைந்து உதவியாளர்கள் அவரிடம் வருவார்கள்..

ஒவ்வொருத்தரிடமும் பத்தாயிரத்துக்குக் குறையாமல் பணம் கொடுத்து அனுப்பி விடுவார்..

அவர்கள் அடுத்து இருக்கும் மார்க்கெட்டின் நான்கு வாசல்களிலும் நின்று கொள்வார்கள்..

அப்போது ஒவ்வொருத்தராக அங்கு  காய்கறி வியாபாரம் செய்யவரும் பெண்களிடம் தலா இரண்டாயிரம் ரூபாய்  பணத்தைக் கொடுப்பார்கள்.. கையில் பணமின்றி மார்கெட்டுக்குள் வரும் இந்தப் பெண்கள் அவர்களிடம்  பணத்தை வாங்கிக் கொண்டு உள்ளே போய் காய்கறிகளை மொத்த வியாபாரிகளிடம் வாங்கிக்  கொண்டு  அருகிலுள்ள திறந்தவெளியில் அமர்ந்துகொண்டு கூடைகளில் வைத்து காய்கறிகளை விற்றுத் தீர்ப்பார்கள்..  பெரும் பகுதி  சரக்கைத்  தெருக்களில் கொண்டு போய் விற்கவும்  அனுப்பி விடுவார்கள்..


சாயங்காலத்திற்குள்ளாக சரக்கு முழுவதையும் விற்ற பிறகு வெளியில் வரும் அவர்கள் கையில் விற்றுமுதல்  இருப்புப் பணம் ரூபாய் நான்காயிரத்திற்குக் குறையாமல் இருக்கும்.. 

அதில் ஏற்கனவே வாங்கிய இரண்டாயிரம் ரூபாயுடன் அதற்கு ஒருநாள் மீட்டர்  வட்டியாக ஆயிரம் சேர்த்து மூன்றாயிரம் ரூபாயை அங்கு தயாராகக்  காத்திருக்கும் அந்த நபர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு கையிருப்பு ஆயிரத்துடன் வீட்டுக்குத் திரும்பிப் போவார்கள்,,

ஒருநாளைக்கு ரூபாய் ரெண்டாயிரத்திற்கு ஆயிரம் ரூபாய் வட்டி மிகமிக அதிகம்தான்..

ஆனால் அதற்காக அந்தப் பெண்கள் கவலைப்படுவதில்லை..

தைரியமாகப் பணம் கிடைக்குமென்று கையில் முதலீடு இல்லாமல் சந்தைக்கு வருகிறார்கள்.. அரை நாள் பொழுதிற்குள் ஆயிரம் ரூபாய் வருமானத்துடன் வீட்டுக்குப் போகிறார்கள்..

நம் கறிவேப்பிலை வியாபாரிக்கும் உட்கார்ந்த இடத்தில் கொள்ளை வருமானம்..

இரண்டு தரப்புமே தர்ம நியாயம் பார்ப்பதில்லை..

அவரவர்கள் எண்ணியபடி அவரவர்களுக்கு வருமானம் தினப்படி கிடைக்கிறது.. 

இது அன்றாடம் அங்கு நடக்கும் நிகழ்வு.. 

No comments:

Post a Comment