Saturday, August 5, 2017

வேலை கிடைக்குமா?

இன்று ஞாயிற்றுக்கிழமை..

" ஐயா.. சாணை புடிக்க எதுனாச்சும் ஜாமான் இருக்குதுங்களா?"
புருஷன்.. பெண்டாட்டி.. பிள்ளைகள் ..ஒரு சைக்கிளுடன் கோஷ்டியாக வந்தனர்.

அருவாமனை.. கத்தி..அருவா..மம்புட்டி.. களைகொத்து என அனேக  உருப்படிகள் சாணை பிடிக்க வேணுமென்று ரொம்ப நாளாக் கைவசமிருந்தவற்றை எடுத்துப் போட்டோம்..

வேலையைத் துவக்கிய சாணைக்காரரிடம் மெதுவாக லோகாபிராமம் விசாரித்தபோது...

"எங்க ஊரு சுரக்குடி பக்கத்ல மூங்கில்குடி.. விடியற்காலம் நாலு மணிக்கு கிளம்பி ஐயனாருக்கு காசு போட்டுவிட்டு லாரி பிடித்து சைகிளுடன் பக்கத்து ஊரு எதுக்காச்சும் போய் இறங்குவோம்..

தெருத் தெருவாக சுத்தி வேலை கேட்டு வாங்குவோம்..
சாயங்காலம் வரைக்கும் 20 வீடுங்க அளவுக்கு  வேலை செய்யலாம்..

அக்ரகாரமாயிருந்தா..
ஐயருங்க  வீட்ல ஒரு வீட்டிலயே நாலு வீட்டு ஜாமான் இருக்கும்..
ஒரு உபயோகத்துக்குன்னு இருக்கும் இரும்பு ஜாமானை மத்த உபயோகத்துக்கு தராம தனித்தனியாக அளகா வைச்சிருப்பாங்க..
க்ராமமானால் நிறைய மம்புட்டி.. அருவா..கத்தின்னு வேலை தருவாங்க.." என்றவரிடம்

" மாசத்துக்கு எத்தனை நாள் வேலை ..? சுமாராக என்ன வருமானம் வரும்? என்று கேட்டதற்கு..

" எட்டு வயசுல தொழிலுக்கு வந்தேன்..
இன்னிக்கு வரை நானா நெனச்சு எடுத்தாத்தானுங்க லீவு... படிச்சவங்கதான் வேலை கெடைக்காமல் திண்டாடணும்..
எங்க தொழில்ல மாசம் முழுக்க வேலை இருக்குங்க.. நினைச்ச நேரம் வேல செய்யலாம்..

வருமானமும் ஆவரேஜா ஒரு நாளைக்கு ரெண்டாயிரத்லேர்ந்து.. மூவாயிரம் ரூவா வரைக்கும் வரும்க" என்றார்..

மொத்தம் ஒன்பது உருப்படிகளுக்குத் தொள்ளாயிரம் போதும் என்று வாங்கிக் கொண்டார்..

" வீட்டுக்குக் குறைந்தது. நூறு முதல் இருநூறு ரூபாய் என்றால் இருபது வீட்டுக்கு சராசரியாக மூவாயிரம் ...
அதிகமாகவே வருமே..
முப்பது நாளைக்கு.. அறுபதாயிரத்திற்குக் குறையாது.."  அவர்கள் கிளம்பிச் சென்றதும் மனத்துக்குள் கணக்கு ஓடியது...

அப்போது நண்பர் தொலைபேசியில் அழைத்தார்..

"ஸார் ..நமக்கு ரொம்ப வேண்டிய பையன் ..ரொம்ப நாளாக வேலை தேடி.. கடசீயா மெட்ராஸ்ல ஒரு கம்பேனீல  வேலைல இருக்கான்..
மாச சம்பளம் பத்தாயிரம்தான்..
தங்கியிருக்கும் மேன்ஷன் ரூம் வாடகை.. சாப்பாடு..கைச்சிலவுக்கு பணமா பத்தாமல் அவனுடைய அப்பா ..  மாதத்திற்கு..மூவாயிரம்.. அனுப்பி வைக்கிறார்..
ரொம்ப கஷ்டம்..
உள்ளூர்லயே எதுனாச்சும் வேலை பார்த்துக் கொடுங்க..
கௌன்டர்  சேல்ஸ் வேலை ராத்திரி பத்து மணியானாலும் கூடப் பரவாயில்ல..
சம்பளம் மாசம் ஐயாயிரம் இருந்தாலும் போதும்.. பார்த்துட்டு சொல்லுங்க..
உங்களுக்குப் புண்யமா போவும்.. " என்றார்..

" பையன் என்ன படிச்சிருக்கான்? என்றதும்..
சற்று அலட்சியமாகச் செருமி விட்டு
 " அதாங்க.. இப்போ எல்லா பசங்களும் படிச்சுருக்காங்களே.. பீ.ஈ. கம்ப்யூட்டர் ஸயின்ஸ்" என்றார்..

"படிச்சவங்கதான்  வேலைக்குத் திண்டாடணும்" என்று அந்த சாணைக்காரன் சொன்னது நினைவுக்கு வந்தது.. நிஜம்தான்..

No comments:

Post a Comment