Tuesday, August 22, 2017

ப்ருதிவீ லிங்கம்


அன்று ஸ்ரீத்யாகேசர் பற்றிய யஜமானரின் நீண்ட பொழிவின்  இடையில்   
"ப்ருதிவீ  க்ஷேத்ரம் எது? திருவாரூரா.. காஞ்சீபுரமா?... ப்ருதிவீ லிங்கம் எங்கேயிருக்கு?" என்ற அடிமையின் ஸந்தேஹங்களை  அவர்களிடம் ஸமர்ப்பித்தார் பாணாம்பட்டு கண்ணன் மாமா..

யஜமானர்.. அவற்றுக்குப்  பதிலளிக்காமல் சற்று இடைவெளி விட்டு..
"அந்த தீக்ஷிதர் க்ருதியில் ஓரிடத்தில்  'ஸோமாஸ்கந்த' என்று. வருமே' என்று சொல்லி மெலிதாகப் புன்முறுவல் பூத்தார்கள்..

சிறு பிராயத்தில் இருந்த அடிமை..ஆர்வம் மிகுந்து ..
." முசுகுந்தாதிபூஜித ஸோமாஸ்கந்தமூர்த்தயே " என்று பேகடா ராகத்திலமைந்த 'த்யாகராஜாய நமஸ்தே' கீர்த்தனையில் வந்திருப்பதை பற்றிச் சொல்லவும்..


யஜமானர் "அதில்லை" என்று அழுத்தமாகக் கூறிவிட்டார்கள்..
அடிமைக்கு அவர்கள் இவ்வாறு சொன்னதன் மேல் விபரம் புரியவில்லை..

"அந்த கீர்த்தனையில்தான்  'ஸோமாஸ்கந்த' என்று வந்திருக்கே.. பிறகு ஏன் 'அதில்லை...' என்று அழுத்திச் சொல்லி மறுத்து விட்டார்கள்?' என்று  நினைத்தபடி யஜமானர் மேற்கொண்டு சொல்லப்போவதை அடிமை  எதிர்பார்த்து இருந்தபோது...

மந்தஹாஸத்துடன் " இவனுக்கு 'சிந்தயமாகந்த' தெரியுமோன்னு கேளு" என்று கண்ணன் மாமாவிடம்  அடிமையைப் பார்த்துக்  கேட்கச் சொன்னார்கள்..

தாழ்மையுடன் பதில் சொன்ன அடிமைக்கு... 
"அதில்தான்  ஏகாம்பரேச்வரர் பற்றி நிறைவாக தீக்ஷிதர் முடித்திருக்கிறாரே.. அதையும்  சொல்லு.." என்று கருணையுடன் உத்தரவாயிற்று..  .

" சேத: ஸ்ரீஸோமாஸ்கந்தம் ' என்று  இந்த கீர்த்தனையில் வரது..
நிறைவில் ' குருகுஹாந்தரங்கம் - ப்ருதிவீ லிங்கம்' னும் இருக்கு" என்று அடிமை பணிந்து சொன்னதும்..

" அதற்குத்தான் ஸோமாஸ்கந்த என்று வரும் கீர்த்தனையை கவனிக்கச் சொன்னது ... 
ப்ருதிவீ க்ஷேத்ரம் என்பது  காஞ்சீ க்ஷேத்ரம்தான்.. 
ப்ருதிவீ லிங்கம்.. இங்கிருக்கும் ஏகாம்ரேச்வரர்தான்.. 
வல்மீகநாதர் இருக்கும்  திருவாரூர்  மூலாதார க்ஷேத்ரம்.. " என்று முடித்தார்கள்..
                                           https://www.youtube.com/watch?v=eNf69UQryv4

Monday, August 21, 2017

தக்கயாகப்பரணியில் பிவாயம்



தக்கயாகப் பரணியில்...

மஹாகாளி, கூளிகள் புடைசூழக் களம் கண்டு, கூழடக் கட்டளையிட்டருளுதலும்.. அதன்படியே பேய்க்கணங்கள் களத்தில் உள்ளவற்றைச் சேகரித்துக் கூழடுதலும்.. அவ்வாறு  அட்ட கூழை     இறைவிக்குப் படைத்தலும்    விரிவாகக்  காண்கின்றன.  
 
சோறு செய்த மிடாக்களின் மீது..  ஈசன் நெற்றிக்கண்ணில் மலைகள்  வெந்து பூத்ததால் உண்டான  திருநீற்றை வாங்கிப்  புண்டரமாக இடும்படி கணங்களுக்கு மஹாகாளி கட்டளையிடல் தக்கயாகப் பரணி - 750ம்  தாழிசையில் சொல்லப்படுகிறது.. 


" புண்டர மிடுகையாவது சோறு சமைத்த மிடாக்களுக்குப் பிவாயமிடுகை " என்கிறார்  ஒட்டக்கூத்தரின் சமகாலத்தவரான பரணியுரையாசிரியர்.. 


அக்காலத்திலும்,  சோறு சமைத்த மிடாக்கள் - பானைகளுக்குத்  திருநீற்றால் குறியிட்டு வைக்கும் வழக்கம் இருந்துள்ளது. 

இதைப் பிவாயம் என்பர்.

Sunday, August 13, 2017

பணம் பண்ணும் வழி

பொதுவாக வருமானத்தைப்  பெருக்க வேணுமானால் செலவைக் குறைக்கணும் என்று சொல்வது வழக்கம்... 

ஆனால் சில பேர் வருமானத்திற்கு அதிகம் செலவு பண்ணுவதில்லை..
திறமையும், நேரமும்தான் அவர்களுக்கு முக்யம்.. 

அதிகமான பிரயாசை ஏதுமின்றி பணம் பண்ணும் சில பேர்வழிகள்..
எப்போதாவது நம்மிடம் வந்து தமது தொழில் சாமர்த்யத்தைப் பகிர்ந்து கொள்வதும் உண்டு..

அவற்றுள் சில..  சுலபமான  ஐடியாக்கள் நம்மைத் திகைக்க வைத்து விடும்.. 
அவை மற்றவர்களிடம் கறந்து பணம் வாங்கக் கூடியவையாகவும்  இருக்கலாம்.. 

ஆனால் பயனாளிகளுக்கு அது விஷயமாகவே இருப்பதில்லை என்னும்போது மற்ற ஆட்சேபங்கள் அடிபட்டுப் போகின்றன..

ஒரு நபர்.. 

அவரின் முக்கிய வியாபாரம் இதுதான்..    

பெரிய நகரம் ஒன்றின் பிரதான காய்கறி மார்கெட்டில் தினமும் அதிகாலை ரெண்டு லாரி லோடு கறிவேப்பிலை எடுத்துத் தன்னுடைய ஷெட்டிற்குக் கொண்டு வந்து பிரித்துச் சுத்தம் செய்து கட்டுகளாக்கி சந்தைக்கு அனுப்பி வைப்பார்.. பிற்பாடு காசு தானே வந்து விடும்..

காலை 8 மணி சுமாருக்கு இந்த வேலை முடிந்தவுடன்.. 

அருகிலிருக்கும் வீட்டுக்குப் போய்க் குளித்து சாப்பிட்டு விட்டு டாணென்று 9.30க்கெல்லாம் மறுபடியும் சீட்டுக்கு வந்து உட்கார்ந்து கொள்வார்..

அப்போது நான்கைந்து உதவியாளர்கள் அவரிடம் வருவார்கள்..

ஒவ்வொருத்தரிடமும் பத்தாயிரத்துக்குக் குறையாமல் பணம் கொடுத்து அனுப்பி விடுவார்..

அவர்கள் அடுத்து இருக்கும் மார்க்கெட்டின் நான்கு வாசல்களிலும் நின்று கொள்வார்கள்..

அப்போது ஒவ்வொருத்தராக அங்கு  காய்கறி வியாபாரம் செய்யவரும் பெண்களிடம் தலா இரண்டாயிரம் ரூபாய்  பணத்தைக் கொடுப்பார்கள்.. கையில் பணமின்றி மார்கெட்டுக்குள் வரும் இந்தப் பெண்கள் அவர்களிடம்  பணத்தை வாங்கிக் கொண்டு உள்ளே போய் காய்கறிகளை மொத்த வியாபாரிகளிடம் வாங்கிக்  கொண்டு  அருகிலுள்ள திறந்தவெளியில் அமர்ந்துகொண்டு கூடைகளில் வைத்து காய்கறிகளை விற்றுத் தீர்ப்பார்கள்..  பெரும் பகுதி  சரக்கைத்  தெருக்களில் கொண்டு போய் விற்கவும்  அனுப்பி விடுவார்கள்..


சாயங்காலத்திற்குள்ளாக சரக்கு முழுவதையும் விற்ற பிறகு வெளியில் வரும் அவர்கள் கையில் விற்றுமுதல்  இருப்புப் பணம் ரூபாய் நான்காயிரத்திற்குக் குறையாமல் இருக்கும்.. 

அதில் ஏற்கனவே வாங்கிய இரண்டாயிரம் ரூபாயுடன் அதற்கு ஒருநாள் மீட்டர்  வட்டியாக ஆயிரம் சேர்த்து மூன்றாயிரம் ரூபாயை அங்கு தயாராகக்  காத்திருக்கும் அந்த நபர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு கையிருப்பு ஆயிரத்துடன் வீட்டுக்குத் திரும்பிப் போவார்கள்,,

ஒருநாளைக்கு ரூபாய் ரெண்டாயிரத்திற்கு ஆயிரம் ரூபாய் வட்டி மிகமிக அதிகம்தான்..

ஆனால் அதற்காக அந்தப் பெண்கள் கவலைப்படுவதில்லை..

தைரியமாகப் பணம் கிடைக்குமென்று கையில் முதலீடு இல்லாமல் சந்தைக்கு வருகிறார்கள்.. அரை நாள் பொழுதிற்குள் ஆயிரம் ரூபாய் வருமானத்துடன் வீட்டுக்குப் போகிறார்கள்..

நம் கறிவேப்பிலை வியாபாரிக்கும் உட்கார்ந்த இடத்தில் கொள்ளை வருமானம்..

இரண்டு தரப்புமே தர்ம நியாயம் பார்ப்பதில்லை..

அவரவர்கள் எண்ணியபடி அவரவர்களுக்கு வருமானம் தினப்படி கிடைக்கிறது.. 

இது அன்றாடம் அங்கு நடக்கும் நிகழ்வு.. 

Saturday, August 5, 2017

வேலை கிடைக்குமா?

இன்று ஞாயிற்றுக்கிழமை..

" ஐயா.. சாணை புடிக்க எதுனாச்சும் ஜாமான் இருக்குதுங்களா?"
புருஷன்.. பெண்டாட்டி.. பிள்ளைகள் ..ஒரு சைக்கிளுடன் கோஷ்டியாக வந்தனர்.

அருவாமனை.. கத்தி..அருவா..மம்புட்டி.. களைகொத்து என அனேக  உருப்படிகள் சாணை பிடிக்க வேணுமென்று ரொம்ப நாளாக் கைவசமிருந்தவற்றை எடுத்துப் போட்டோம்..

வேலையைத் துவக்கிய சாணைக்காரரிடம் மெதுவாக லோகாபிராமம் விசாரித்தபோது...

"எங்க ஊரு சுரக்குடி பக்கத்ல மூங்கில்குடி.. விடியற்காலம் நாலு மணிக்கு கிளம்பி ஐயனாருக்கு காசு போட்டுவிட்டு லாரி பிடித்து சைகிளுடன் பக்கத்து ஊரு எதுக்காச்சும் போய் இறங்குவோம்..

தெருத் தெருவாக சுத்தி வேலை கேட்டு வாங்குவோம்..
சாயங்காலம் வரைக்கும் 20 வீடுங்க அளவுக்கு  வேலை செய்யலாம்..

அக்ரகாரமாயிருந்தா..
ஐயருங்க  வீட்ல ஒரு வீட்டிலயே நாலு வீட்டு ஜாமான் இருக்கும்..
ஒரு உபயோகத்துக்குன்னு இருக்கும் இரும்பு ஜாமானை மத்த உபயோகத்துக்கு தராம தனித்தனியாக அளகா வைச்சிருப்பாங்க..
க்ராமமானால் நிறைய மம்புட்டி.. அருவா..கத்தின்னு வேலை தருவாங்க.." என்றவரிடம்

" மாசத்துக்கு எத்தனை நாள் வேலை ..? சுமாராக என்ன வருமானம் வரும்? என்று கேட்டதற்கு..

" எட்டு வயசுல தொழிலுக்கு வந்தேன்..
இன்னிக்கு வரை நானா நெனச்சு எடுத்தாத்தானுங்க லீவு... படிச்சவங்கதான் வேலை கெடைக்காமல் திண்டாடணும்..
எங்க தொழில்ல மாசம் முழுக்க வேலை இருக்குங்க.. நினைச்ச நேரம் வேல செய்யலாம்..

வருமானமும் ஆவரேஜா ஒரு நாளைக்கு ரெண்டாயிரத்லேர்ந்து.. மூவாயிரம் ரூவா வரைக்கும் வரும்க" என்றார்..

மொத்தம் ஒன்பது உருப்படிகளுக்குத் தொள்ளாயிரம் போதும் என்று வாங்கிக் கொண்டார்..

" வீட்டுக்குக் குறைந்தது. நூறு முதல் இருநூறு ரூபாய் என்றால் இருபது வீட்டுக்கு சராசரியாக மூவாயிரம் ...
அதிகமாகவே வருமே..
முப்பது நாளைக்கு.. அறுபதாயிரத்திற்குக் குறையாது.."  அவர்கள் கிளம்பிச் சென்றதும் மனத்துக்குள் கணக்கு ஓடியது...

அப்போது நண்பர் தொலைபேசியில் அழைத்தார்..

"ஸார் ..நமக்கு ரொம்ப வேண்டிய பையன் ..ரொம்ப நாளாக வேலை தேடி.. கடசீயா மெட்ராஸ்ல ஒரு கம்பேனீல  வேலைல இருக்கான்..
மாச சம்பளம் பத்தாயிரம்தான்..
தங்கியிருக்கும் மேன்ஷன் ரூம் வாடகை.. சாப்பாடு..கைச்சிலவுக்கு பணமா பத்தாமல் அவனுடைய அப்பா ..  மாதத்திற்கு..மூவாயிரம்.. அனுப்பி வைக்கிறார்..
ரொம்ப கஷ்டம்..
உள்ளூர்லயே எதுனாச்சும் வேலை பார்த்துக் கொடுங்க..
கௌன்டர்  சேல்ஸ் வேலை ராத்திரி பத்து மணியானாலும் கூடப் பரவாயில்ல..
சம்பளம் மாசம் ஐயாயிரம் இருந்தாலும் போதும்.. பார்த்துட்டு சொல்லுங்க..
உங்களுக்குப் புண்யமா போவும்.. " என்றார்..

" பையன் என்ன படிச்சிருக்கான்? என்றதும்..
சற்று அலட்சியமாகச் செருமி விட்டு
 " அதாங்க.. இப்போ எல்லா பசங்களும் படிச்சுருக்காங்களே.. பீ.ஈ. கம்ப்யூட்டர் ஸயின்ஸ்" என்றார்..

"படிச்சவங்கதான்  வேலைக்குத் திண்டாடணும்" என்று அந்த சாணைக்காரன் சொன்னது நினைவுக்கு வந்தது.. நிஜம்தான்..