Thursday, February 23, 2017

சுரைக்காய்க் கதை

 
பொதுவாக அந்தணர்கள் சுரைக்காய் உண்பது வழக்கம் இல்லை.. ஆனால் இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு..திருவீழிமிழலை .. ஒரு க்ஷேத்ரத்தில் மட்டும் அந்தணர்கள் சுரைக்காய் சமைத்து உண்ணலாம் என்ற மரபு இருக்கிறது..தேஜிநீவன (வீழிக்காடு) மாஹாத்ம்யம் சிவபுராணத்தின் ஒரு பகுதி .. விண்ணவர் தொழும் வீழிமிழலையின் பெருமையைப் பலபடக் கூறுவது இந்த க்ஷேத்ர புராணம்...
முதலில் காய்க்கும் சுரைக்காயில் பாதியை பகவானுக்குத் தந்துவிடுவதாக நேர்ந்திருந்தாள் ஒரு அந்தண மாது. ஆனால் மொத்தத்தில் காய்த்ததோ ஒரே ஒரு சுரைக்காய் மட்டுமே.. அடுத்த வருஷத்துக்கு விதைக்காகும் என்று பறிக்காமல் விட்டுவிட நினைத்தவள் கனவில் தோன்றிய ஸ்ரீவீழிநாதர் வார்த்தை பிறழக்கூடாது என்று நினைவூட்டவே..  "வாக்கு கொடுத்தபடி.. பாதியை அறுத்துக் கொடுப்போம்.. இறைவன் வாக்குப்படித் தருவதால் மீதியிருக்கும் மேற்பாதியாவது இறைவன் கருணையால் பிழைத்திருக்கட்டும்" என்று எண்ணியபடியே கொடியில் இருந்த சுரைக்காயைக் காம்புடன் பறிக்காமல் கீழ்ப்பாதியாக அறுத்துப் படைத்தனள் ..

என்னே .. மாப்பிள்ளை ஸ்வாமியின் திருவருள் ..

கொடியில் மீதமிருந்த அறுபட்ட மேற்பாதி - அரைச்சுரைக்காய் - பருத்து முற்றி விதைகளை சொரிந்து தள்ளிவிட்டதாம்.. இறைவனின் அருளால் விளைந்த விதைகளால் அனைவர் இல்லத் தோட்டங்களிலும் பல்கிப் பெருகினவாம் சுரைக்காய்க்  கொடிகள் .. 

இதனால், திருவீழிமிழலை ஸ்தலத்தில் உள்ள அந்தணர்களும் ஸ்ரீவீழிநாதரின் ப்ரஸாதமாகச் சுரைக்காயை உண்பர்..




இதையொத்த வேளாளர் மரபினரின் பெருமையைச் சொல்லும் பாடல் ஒன்று சோழமண்டல சதகத்திலுமுள்ளது..
" பாதிச் சுரைக்காய் கறிக்கும்ஒரு
பாதிச் சுரைக்காய் விரைக்கும்என
ஆதிக் கடவுள் பசிதீர
அளித்தாள் ஆங்கே அறஅரித்த
காதல் கணவன் மனைவியொடும்
கயிலை காணும் கதைசூதன்
ஆதி புகலும் சுரைக்குடையான்
மரபோர் சோழ மண்டலமே " (37)

No comments:

Post a Comment