Monday, October 24, 2016

பாயிஸாயேப்மார்களின் சத்திர தர்மம் : தர்ம ராஜ்யம் - 2

தஞ்சை மராட்டிய  மன்னர்களின் பாயிஸாயேப்மார்.. அவர்களுக்கென மன்னர்கள் அளித்துள்ள ஐஸ்வர்யத்தைக் கொண்டு கி.பி.1743க்கும் 1837க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏராளமான சத்திரங்களை தர்மப் பணிக்கென நிறுவிய அதிசயம் தஞ்சை மராட்டியரின் தர்மராஜ்யத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
அரண்மனைக்குச் சொந்தமான சத்திரங்கள் மொத்தம் 20. இந்த சத்திரங்களுள் பழமையானவை  13. மன்னர்களின் துணைவியரான பாயிஸாயேப்மாரின் வசமே அவற்றின் நிர்வாகமும் இருந்தது.  பாயிஸாயேப்களின் பெயராலேயே தர்ம  சத்திரங்களும் வழங்கப்பெற்றன. அவர்களது மறைவுக்குப் பின்னரும் வெகு காலம் வரைக்கும் நிலைத்து நின்றன.

மிகப் பழமையானது  சூரக்கோட்டையிலிருந்த முதலாம் துளஜா மஹாராஜரின் மனைவி ராஜகுமாராம்பா பாயி பெயராலமைந்த  சத்திரம். 

பிறகு ப்ரதாபஸிம்ஹ  மஹாராஜரின் காலத்தில் திருபுவனத்தில் சக்குவாரம்பா சத்திரம், நீடாமங்கலத்தில் யமுனாம்பா சத்திரம், மணமேற்குடியில் த்ரௌபதம்பா சத்திரம் ஆகியன அமைக்கப் பெற்றன.

இரண்டாம் துளஜா மஹாராஜரின் காலத்தில் மீனமேசலில் (மீமிசல்) ராஜகுமாரம்பா சத்திரம், ராஜாமடத்தில் மோஹனாம்பா, தாராசுரத்தில் ராஜஸாம்பா சத்திரம், வேளன்குளத்தில்  ஸுலக்ஷணாம்பா  சத்திரம், மஹாதேவ பட்டினத்தில் உமாபாயி சத்திரம் என்னும் ஐந்து சத்திரங்கள் உருவாயின.

இரண்டாம் ஸரபோஜி மஹாராஜர் காலத்தில் ஒரத்தநாட்டில் முக்தாம்பா சத்திரமும், இரண்டாம் சிவாஜி மஹாராஜர் காலத்தில் சூரக்கோட்டையில் சைதம்பா சத்திரம், மல்லியம் அஹல்யாபாயி  சத்திரம்,  திருவையாற்றில் பஞ்சநத மோகனாம்பாபாயி சத்திரம் ஆகியன தோன்றின.

இவை தவிர்த்து பள்ளியக்ரஹாரத்தில் லக்ஷ்மீராஜபுரம் சத்திரம், தஞ்சை நடார் சத்திரம்,  கோட்டை அன்ன  சத்திரம், ச்ரேயஸ் சத்திரம், பட்டுக்கோட்டையில் காசாங்குளம் சத்திரம், தனுஷ்கோடியில் சேதுக்கரைச் சத்திரம் , ராமேச்வரத்தில் ஒரு சத்திரமும் இருந்தன.
திருவாரூர் ராஜாங்க கட்டளை, அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை, புரீ ஜகன்னாதத்தில்  நித்ய நைவேத்யம் அன்னதானக் கட்டளை, ஸ்ரீகாசி க்ஷேத்ரத்தில் பனசைத் திருமடம் மூலம்  நித்ய அன்னதானம் முதலியனவும்  நடைபெற்று வந்தன. 

சத்திர தர்மம் எவ்வாறு நடைபெற வேணுமென்பதற்கான  விதிமுறைகளை பழைய மோடி ஆவணம் ஒன்று காட்டுகிறது. 

"கதியற்றவன், சம்பாதிக்கச் சக்தியற்றவன், பரதேசி ஆகியோர்க்கும், வழிப்போக்கன், குருடர், முடவர், அங்க ஹீனமுடையோர்,  முதியோர், குழந்தைகள் ஆகியோருக்கும் சத்திரத்தில் இலவச ஆகாரமும், தங்க இடமும் அளிக்கலாம். பெரிய அதிகாரிகள், அந்தணர்கள், பைராகிகள், பெரியோர்களுக்கு உலுப்பை (உணவுக்கான தானியங்கள்,  உணவு தயாரிக்கத் தேவையான  மளிகை மற்றும் இதர பொருட்கள்) அளிக்கலாம். சத்திரத்தில் இருக்கும் உத்யோகஸ்தர்கள், வேலையாட்கள் யாரும் அங்கு உண்ணக்கூடாது. சத்திரத்திலிருந்து சாமான்களை வெளியில் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படிச் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். ஊரிலுள்ளவர்கள் ஜீவனோபாயம் செய்வதற்கும், சோம்பேறிகள் தங்குவதற்கும் எவ்விதத்திலும் இடம் கொடுக்கக் கூடாதென்ற கண்டிப்பான ஆணையும்  ஸேனா துரந்தரர் நீலகண்ட ராவ் ஆனந்தராவ் ஜாதவ் அவர்களால் வெளியிடப்பட்டது. 

(923-9-62)

வழிப்போக்கர்கள் யாராவது நோயுற்று சத்திர தர்மத்தை நாடினால் அவர்களுக்கு சத்திரத்தின் மருத்துவரைக் கொண்டு சிகிச்சையளிக்கப்படும். அவர்கள் நோய் குணமாகும் வரையிலும் பத்தியம், மருந்து  வகையறா செய்து அவர்கள் வசம் கொடுத்தனுப்பப்படும். யாத்திரையை மேற்கொண்டு அவர்கள் தொடர இது உதவியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு வழக்கத்தில் இருந்தது.முக்தாம்பாள் அண்ணா சத்திரம், ச்ரேயஸ் சத்திரம் முதலியவற்றில் பிள்ளைகள் தாங்கிப் படிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது. 

சத்திரங்களுக்கென பாயிஸாயப்மார்கள் தமது சேமிப்பிலிருந்து ஏராளமான சொத்துக்களை வழங்கியிருந்தனர். அவை அனைத்தும் செம்மையுடன் பேணப்பட்டு கிடைத்த பொருளைக் கொண்டு சத்திர தர்மம் தடையின்றி நடந்தது. தஞ்சை மன்னர்கள் அனைவரும்  சத்திர தர்மத்தைக் கண்போல் பாதுகாத்தனர். 

தஞ்சை மராட்டியரின் தர்ம ராஜ்யம் தவிர   இந்தியாவின் எந்த ஒரு ஸம்ஸ்தானத்திலும்.. இதையொத்த தர்மம் தடையின்றி வெகு காலம் நடந்ததில்லை. 

1817ம் ஆண்டு சட்டத்தின்படி சத்திர  நிர்வாகம்  கும்பினியார் வசமாகியது.. 

பிற்காலத்தில்,  சுதந்திர இந்தியாவில்   சத்திர நிர்வாகம் தேய்மதி போலத் தளர்ச்சியுறத்  தொடங்கிற்று. சத்திரங்கள் இருந்த இடங்கள் பாழ்பட்டன. சத்திரங்களின் சொத்துக்கள் பறிபோயின..  




(தொடரும்)


1 comment: