Sunday, October 23, 2016

தர்ம ராஜ்யம் - 1


சத்ரபதி சிவாஜி போன்ற மராட்டிய  மாமன்னர்களின்  அரசாட்சி அமைப்புடன் சோழர் மற்றும் நாயக்கர் காலத்திலிருந்து தொடர்ந்த  தஞ்சை  மரபும் கலந்த கலவையாக  அமைந்ததே தஞ்சை மராட்டியர் அரசு முறை ..

தஞ்சை மராட்டிய மன்னர்களின் மோடி  ஆவணங்கள்  அக்காலத்துப் பண்பாடு மற்றும் வரலாறுச் செய்திகள் பலவற்றையும் அறிந்து  கொள்ள  நமக்குத் துணை நிற்கின்றன.. 

சமயம், சமூகம், கல்வி, ஆட்சி, அரசுரிமை, கலை, இலக்கியம், வணிகம் என எண்ணிறந்த விஷயங்களைச்  சுருக்கிப் பாங்குறத்  தருகின்றன  தஞ்சை மராட்டிய அரசர்களின் மோடி ஆவணங்கள்..   

ஏறக்குறைய  இருநூறாண்டுகள்  கால இடைவெளியில் தஞ்சை மராட்டியரின்  " தர்ம ராஜ்யம்"  தொடர்பான பல்வேறு அரிய  நிகழ்வுகளையும்  மோடி ஆவணங்கள் நமக்கு அறிவிக்கின்றன..

சுமார் 960 மூட்டைகளாக கட்டப்பட்டுப்  பாதுகாக்கப்பட்டு வரும் இவ்வரிய சுவடிகளின் மொழிபெயர்ப்பைத் தஞ்சை மன்னர் ஸரபோஜியின் ஸரஸ்வதி மஹால் நூலகமும், பிற்பாடு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமும் வெளியிட்டுள்ளமை குறிப்பிட்டத்  தக்கது.

தஞ்சை மராட்டிய மன்னர்களின் தர்ம ராஜ்யத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்க ..கிடைத்தற்கரிய பொக்கிஷமான இவ்வாவணங்கள் சிலவற்றின் சுருக்கத்தை  இயன்றவரை  பதிவு செய்ய விருப்பம் . 

இறைவன் அருள் துணை நிற்க..

ஆவணம் எண்  :  101C/173 

(ஹூஜூர்  கச்சேரியில் ப்ரசுரித்த உத்தரவின் சுருக்கம்)

1. கச்சேரி உத்யோகஸ்தர்கள் வீட்டுக்கு மிராஸ்தார்களோ அல்லது அவர்களது கார்யஸ்தர்களோ ஒருவரும் போகக்கூடாது.  
2. உத்யோகஸ்தர்கள் மிராஸ்தார்களுடையவோ அல்லது அவர்களுடைய கார்யஸ்தர்களுடைய வீட்டிலோ அல்லது கச்சேரியிலோ வேறு எந்த இடங்களிலோ ரகஸ்யமாகப் பேசக்கூடாது.
3. உத்யோகஸ்தர்கள் ஒருவருடைய வீட்டுக்கு ஒருவர் சென்று ராஜ்யத்தின் ஸமாஜாரங்களைப் பேசக் கூடாது .
அவ்விஷயத்தில் யோஜனைகளையும்  செய்யக்கூடாது.
4. மேற்படி எவ்விதமாகவாவது சங்கதிகள் நமக்குத் தெரிந்தால் அத்தருணமே அவ்வுத்யோகஸ்தர்களை வேலையிலிருந்து நிக்கி அவர்களிடமிருந்து சட்ட விதிகளின்படி பெரும் அபராதம் விதிக்கப்படும். 

இது விஷயம்  தனித் தனியாய்  ஒன்பது தாலுக்காக்களுக்கும் எழுதி அனுப்பியுள்ளதையும் அறியவும்.

முகாம் : நாகப்பட்டினம் கச்சேரி 
தேதி      : 02 மார்ச் 1827 
பகல் 8 மணி,  சனிக்கிழமை 

1 comment: