Monday, October 31, 2016

ஸ்வாமிநாதன் ... 1



இன்று ஸ்வாமிமலை ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமிக்கு ஸ்கந்த சஷ்டி விசேஷ அபிஷேகம், ஷண்முகார்ச்சனை, ஸமாராதனைக்கு ஸ்ரீமடத்தின் பழவடியாருள் முக்யஸ்தரான தண்ணீர்க்குன்னம் உடையார் அழைத்திருந்தார்..
பூஜ்யஸ்ரீ ஆசார்யர்களின் திருவுளப்படி பெருமளவு பசும்பால், விபூதி ஆகியனவும் ஸ்ரீமடத்தின் வாஞ்சியூர் கோசாலையிலிருந்து அபிஷேகத்திற்காகச் சேர்ப்பிக்கப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அவர்களும் தமது பரிவாரத்துடன் அங்கு வந்திருந்தார்கள்..
சோழிய முன் உச்சிக் குடுமியுடன்.. ஸ்வர்ண கௌபீனத்துடன்.. வலது கையில் பலாச தண்டம் ஏந்தி.. ப்ரம்மசாரிக் கோலத்தில் ஸ்வாமி நின்றார்..
ஸன்னதிமுறை சிவாசார்யர் தம் இரு கைககள் நிறைய விபூதியை அள்ளி அள்ளி எடுத்துத் திருமேனி முழுதும் நிறைத்தார்..
.ஏராளமான த்ரவ்யங்களைக் கொண்டு ஸ்வாமிக்குச் செய்விக்கப்பட்ட அபிஷேகம் நிறைவுற்றது..
அலங்காரம் செய்தார்கள்..முத்தங்கி, ஸ்வர்ண க்ரீடம், வஜ்ரவேல், ஸுப்ரமண்ய ஸஹஸ்ரநாமங்கள் பொறித்த ஆயிரத்தெட்டு ஸ்வர்ணத் தாமரை மாலை, மணிகள் பதித்த ருத்ராக்ஷ மாலையுடன் ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமி ஜ்வலித்தார்...
அர்த்த மண்டபத்தில் ஸ்வாமி அருகில் நின்ற நேரத்தில்... ஸ்ரீசிவன்சார் அவர்கள்.. தம் குல தெய்வமான ஸ்ரீஸ்வாமிநாதஸ்வாமியின் அருமை பற்றியும்.. ஸ்ரீபெரீவா அவர்களுக்கு .. அவர்களின் குலதெய்வமான ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியின் பெயரையே வைத்தது பற்றியும் ஆரூரனிடம் பலகாலும் சொன்னவை நினைவில் தோன்றின..
பூஜைகள் நிறைவுற்றன.. திருவடிகளில் தோய்ந்திருந்த அபிஷேக விபூதி ப்ரஸாதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டோம்..
தங்கக் கொடிமரத்தின் அருகில் வந்ததும் "ஸார்.. ஸ்வாமி அணிந்திருந்த தங்கக் கோவணத்த பாத்தீங்களா..? என்று கேட்டார் உடையார் தம்பி...
கேட்டவர் ஸ்ரீபெரீவா அவர்களைப் பற்றித் தொடர்ந்தார்... 

Monday, October 24, 2016

பாயிஸாயேப்மார்களின் சத்திர தர்மம் : தர்ம ராஜ்யம் - 2

தஞ்சை மராட்டிய  மன்னர்களின் பாயிஸாயேப்மார்.. அவர்களுக்கென மன்னர்கள் அளித்துள்ள ஐஸ்வர்யத்தைக் கொண்டு கி.பி.1743க்கும் 1837க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏராளமான சத்திரங்களை தர்மப் பணிக்கென நிறுவிய அதிசயம் தஞ்சை மராட்டியரின் தர்மராஜ்யத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
அரண்மனைக்குச் சொந்தமான சத்திரங்கள் மொத்தம் 20. இந்த சத்திரங்களுள் பழமையானவை  13. மன்னர்களின் துணைவியரான பாயிஸாயேப்மாரின் வசமே அவற்றின் நிர்வாகமும் இருந்தது.  பாயிஸாயேப்களின் பெயராலேயே தர்ம  சத்திரங்களும் வழங்கப்பெற்றன. அவர்களது மறைவுக்குப் பின்னரும் வெகு காலம் வரைக்கும் நிலைத்து நின்றன.

மிகப் பழமையானது  சூரக்கோட்டையிலிருந்த முதலாம் துளஜா மஹாராஜரின் மனைவி ராஜகுமாராம்பா பாயி பெயராலமைந்த  சத்திரம். 

பிறகு ப்ரதாபஸிம்ஹ  மஹாராஜரின் காலத்தில் திருபுவனத்தில் சக்குவாரம்பா சத்திரம், நீடாமங்கலத்தில் யமுனாம்பா சத்திரம், மணமேற்குடியில் த்ரௌபதம்பா சத்திரம் ஆகியன அமைக்கப் பெற்றன.

இரண்டாம் துளஜா மஹாராஜரின் காலத்தில் மீனமேசலில் (மீமிசல்) ராஜகுமாரம்பா சத்திரம், ராஜாமடத்தில் மோஹனாம்பா, தாராசுரத்தில் ராஜஸாம்பா சத்திரம், வேளன்குளத்தில்  ஸுலக்ஷணாம்பா  சத்திரம், மஹாதேவ பட்டினத்தில் உமாபாயி சத்திரம் என்னும் ஐந்து சத்திரங்கள் உருவாயின.

இரண்டாம் ஸரபோஜி மஹாராஜர் காலத்தில் ஒரத்தநாட்டில் முக்தாம்பா சத்திரமும், இரண்டாம் சிவாஜி மஹாராஜர் காலத்தில் சூரக்கோட்டையில் சைதம்பா சத்திரம், மல்லியம் அஹல்யாபாயி  சத்திரம்,  திருவையாற்றில் பஞ்சநத மோகனாம்பாபாயி சத்திரம் ஆகியன தோன்றின.

இவை தவிர்த்து பள்ளியக்ரஹாரத்தில் லக்ஷ்மீராஜபுரம் சத்திரம், தஞ்சை நடார் சத்திரம்,  கோட்டை அன்ன  சத்திரம், ச்ரேயஸ் சத்திரம், பட்டுக்கோட்டையில் காசாங்குளம் சத்திரம், தனுஷ்கோடியில் சேதுக்கரைச் சத்திரம் , ராமேச்வரத்தில் ஒரு சத்திரமும் இருந்தன.
திருவாரூர் ராஜாங்க கட்டளை, அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை, புரீ ஜகன்னாதத்தில்  நித்ய நைவேத்யம் அன்னதானக் கட்டளை, ஸ்ரீகாசி க்ஷேத்ரத்தில் பனசைத் திருமடம் மூலம்  நித்ய அன்னதானம் முதலியனவும்  நடைபெற்று வந்தன. 

சத்திர தர்மம் எவ்வாறு நடைபெற வேணுமென்பதற்கான  விதிமுறைகளை பழைய மோடி ஆவணம் ஒன்று காட்டுகிறது. 

"கதியற்றவன், சம்பாதிக்கச் சக்தியற்றவன், பரதேசி ஆகியோர்க்கும், வழிப்போக்கன், குருடர், முடவர், அங்க ஹீனமுடையோர்,  முதியோர், குழந்தைகள் ஆகியோருக்கும் சத்திரத்தில் இலவச ஆகாரமும், தங்க இடமும் அளிக்கலாம். பெரிய அதிகாரிகள், அந்தணர்கள், பைராகிகள், பெரியோர்களுக்கு உலுப்பை (உணவுக்கான தானியங்கள்,  உணவு தயாரிக்கத் தேவையான  மளிகை மற்றும் இதர பொருட்கள்) அளிக்கலாம். சத்திரத்தில் இருக்கும் உத்யோகஸ்தர்கள், வேலையாட்கள் யாரும் அங்கு உண்ணக்கூடாது. சத்திரத்திலிருந்து சாமான்களை வெளியில் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படிச் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். ஊரிலுள்ளவர்கள் ஜீவனோபாயம் செய்வதற்கும், சோம்பேறிகள் தங்குவதற்கும் எவ்விதத்திலும் இடம் கொடுக்கக் கூடாதென்ற கண்டிப்பான ஆணையும்  ஸேனா துரந்தரர் நீலகண்ட ராவ் ஆனந்தராவ் ஜாதவ் அவர்களால் வெளியிடப்பட்டது. 

(923-9-62)

வழிப்போக்கர்கள் யாராவது நோயுற்று சத்திர தர்மத்தை நாடினால் அவர்களுக்கு சத்திரத்தின் மருத்துவரைக் கொண்டு சிகிச்சையளிக்கப்படும். அவர்கள் நோய் குணமாகும் வரையிலும் பத்தியம், மருந்து  வகையறா செய்து அவர்கள் வசம் கொடுத்தனுப்பப்படும். யாத்திரையை மேற்கொண்டு அவர்கள் தொடர இது உதவியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு வழக்கத்தில் இருந்தது.முக்தாம்பாள் அண்ணா சத்திரம், ச்ரேயஸ் சத்திரம் முதலியவற்றில் பிள்ளைகள் தாங்கிப் படிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது. 

சத்திரங்களுக்கென பாயிஸாயப்மார்கள் தமது சேமிப்பிலிருந்து ஏராளமான சொத்துக்களை வழங்கியிருந்தனர். அவை அனைத்தும் செம்மையுடன் பேணப்பட்டு கிடைத்த பொருளைக் கொண்டு சத்திர தர்மம் தடையின்றி நடந்தது. தஞ்சை மன்னர்கள் அனைவரும்  சத்திர தர்மத்தைக் கண்போல் பாதுகாத்தனர். 

தஞ்சை மராட்டியரின் தர்ம ராஜ்யம் தவிர   இந்தியாவின் எந்த ஒரு ஸம்ஸ்தானத்திலும்.. இதையொத்த தர்மம் தடையின்றி வெகு காலம் நடந்ததில்லை. 

1817ம் ஆண்டு சட்டத்தின்படி சத்திர  நிர்வாகம்  கும்பினியார் வசமாகியது.. 

பிற்காலத்தில்,  சுதந்திர இந்தியாவில்   சத்திர நிர்வாகம் தேய்மதி போலத் தளர்ச்சியுறத்  தொடங்கிற்று. சத்திரங்கள் இருந்த இடங்கள் பாழ்பட்டன. சத்திரங்களின் சொத்துக்கள் பறிபோயின..  




(தொடரும்)


Sunday, October 23, 2016

தர்ம ராஜ்யம் - 1


சத்ரபதி சிவாஜி போன்ற மராட்டிய  மாமன்னர்களின்  அரசாட்சி அமைப்புடன் சோழர் மற்றும் நாயக்கர் காலத்திலிருந்து தொடர்ந்த  தஞ்சை  மரபும் கலந்த கலவையாக  அமைந்ததே தஞ்சை மராட்டியர் அரசு முறை ..

தஞ்சை மராட்டிய மன்னர்களின் மோடி  ஆவணங்கள்  அக்காலத்துப் பண்பாடு மற்றும் வரலாறுச் செய்திகள் பலவற்றையும் அறிந்து  கொள்ள  நமக்குத் துணை நிற்கின்றன.. 

சமயம், சமூகம், கல்வி, ஆட்சி, அரசுரிமை, கலை, இலக்கியம், வணிகம் என எண்ணிறந்த விஷயங்களைச்  சுருக்கிப் பாங்குறத்  தருகின்றன  தஞ்சை மராட்டிய அரசர்களின் மோடி ஆவணங்கள்..   

ஏறக்குறைய  இருநூறாண்டுகள்  கால இடைவெளியில் தஞ்சை மராட்டியரின்  " தர்ம ராஜ்யம்"  தொடர்பான பல்வேறு அரிய  நிகழ்வுகளையும்  மோடி ஆவணங்கள் நமக்கு அறிவிக்கின்றன..

சுமார் 960 மூட்டைகளாக கட்டப்பட்டுப்  பாதுகாக்கப்பட்டு வரும் இவ்வரிய சுவடிகளின் மொழிபெயர்ப்பைத் தஞ்சை மன்னர் ஸரபோஜியின் ஸரஸ்வதி மஹால் நூலகமும், பிற்பாடு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமும் வெளியிட்டுள்ளமை குறிப்பிட்டத்  தக்கது.

தஞ்சை மராட்டிய மன்னர்களின் தர்ம ராஜ்யத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்க ..கிடைத்தற்கரிய பொக்கிஷமான இவ்வாவணங்கள் சிலவற்றின் சுருக்கத்தை  இயன்றவரை  பதிவு செய்ய விருப்பம் . 

இறைவன் அருள் துணை நிற்க..

ஆவணம் எண்  :  101C/173 

(ஹூஜூர்  கச்சேரியில் ப்ரசுரித்த உத்தரவின் சுருக்கம்)

1. கச்சேரி உத்யோகஸ்தர்கள் வீட்டுக்கு மிராஸ்தார்களோ அல்லது அவர்களது கார்யஸ்தர்களோ ஒருவரும் போகக்கூடாது.  
2. உத்யோகஸ்தர்கள் மிராஸ்தார்களுடையவோ அல்லது அவர்களுடைய கார்யஸ்தர்களுடைய வீட்டிலோ அல்லது கச்சேரியிலோ வேறு எந்த இடங்களிலோ ரகஸ்யமாகப் பேசக்கூடாது.
3. உத்யோகஸ்தர்கள் ஒருவருடைய வீட்டுக்கு ஒருவர் சென்று ராஜ்யத்தின் ஸமாஜாரங்களைப் பேசக் கூடாது .
அவ்விஷயத்தில் யோஜனைகளையும்  செய்யக்கூடாது.
4. மேற்படி எவ்விதமாகவாவது சங்கதிகள் நமக்குத் தெரிந்தால் அத்தருணமே அவ்வுத்யோகஸ்தர்களை வேலையிலிருந்து நிக்கி அவர்களிடமிருந்து சட்ட விதிகளின்படி பெரும் அபராதம் விதிக்கப்படும். 

இது விஷயம்  தனித் தனியாய்  ஒன்பது தாலுக்காக்களுக்கும் எழுதி அனுப்பியுள்ளதையும் அறியவும்.

முகாம் : நாகப்பட்டினம் கச்சேரி 
தேதி      : 02 மார்ச் 1827 
பகல் 8 மணி,  சனிக்கிழமை 

Tuesday, October 4, 2016

ஸ்ரீசார்.. டயரிக் குறிப்புகள்

 ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்ஸரின்  சரிதம் மற்றும் அவரின் கதைகளில் ஸ்ரீசார் அவர்களுக்கு ரொம்ப இஷ்டம் உண்டு.. சிஷ்யர்கள்  அடிக்கடி இவற்றை அவர்களிடம்  படித்துக் காட்டியபடி இருப்பது வழக்கம்..

ஒருநாள், ஸ்ரீம.(ஸ்ரீமஹேந்த்ர நாதர்) என்னும் அணுக்கத்தொண்டர் ஸ்ரீபரமஹம்ஸரின் உடனிருந்து  அவ்வப்போது நிகழ்ந்தவற்றை எழுதி வைத்து வந்திருப்பது பற்றி பேச்சு வந்தது.. 

அப்போது..   ஸ்ரீசார்  அவர்களின் சொல்லமுதத்தையும் அவ்வப்போது  எழுதி வைத்துக்கொள்ள வேணும்  என்று ஆரூரன்  ப்ரார்த்தித்தவுடன் .. 

ஸ்ரீசார் அவர்கள் புன்சிரிப்புடன் தன்னருகில் இருந்த ஒரு டைரியை எடுத்து .. தம் திருக்கரத்தால்   பெயரை எழுதிக் கொடுத்து ..

ஸ்ரீசார் அவர்களின் திருமுன்னிலையில்  அன்றாடம் நிகழ்வனவற்றையும், அவர்கள் சொல்வனவற்றையும் எழுதிக்கொண்டுவரப் பணித்தருளினார்கள்..
.
சமயம்  கிடைக்கும்போதெல்லாம் ஆரூரனின்  டயரி குறிப்புகளை ஸ்ரீசார் அவர்களும் திருக்கண்சார்த்தி  வந்தார்கள். 1992ம் ஆண்டு ஜூன் மாசம் 27ம் தேதி முதல் இந்தக் குறிப்புகள் எழுதிவரப்பட்டன... 

ஸ்ரீசார் அவர்கள் தொடர்பான சம்பவங்கள், அவர்களின் அருள்வாக்காக மலர்ந்தவை மட்டுமின்றி...  ஸ்ரீபெரீவா அவர்களின் பூர்வாச்ரம பெற்றோர் மற்றும் குடும்ப நிகழ்வுகள், அவர்களின் இளமைப் பருவம், அவர்கள் ஜகதாசார்யாளாகப் பட்டமேற்ற பிறகு நடந்தவை  என ஏராளமான சம்பவங்கள் ..  

இவை தவிர, ஸத்குரு  ஸ்ரீசார் அவர்கள்..  அடிப்படை ஆத்மீகம் மற்றும் வாழ்வியல் முறைகள் பற்றியும்   குழந்தைக்கு அவ்வப்போது புகட்டி வந்துள்ளனவும் இந்த நோட்டு புஸ்தகத்தில் இடம்பெற்றுள்ளன..

சந்தர்ப்பம்  வாய்க்கும்போதெல்லாம் ஸத்குரு  ஸ்ரீசார் சொல்லிவந்த இவற்றை டயரிக் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொண்டது  எழுதியவனின்  தவப்பயன்தான்