Friday, September 23, 2016

நடந்தாய் வாழி காவேரி ..




திருவையாற்றில் காவிரியில் பெரிய  கப்பல் கட்டி, அதனை  அக்காலத்தில் நிரம்பி வழிந்த காவிரியின்  பெரும் கிளைநதியான  அரிசிலாற்றின் வழியே காரைக்காலுக்கு கொண்டு வந்து.. "ப்ரஹதீச்வர  ப்ரஸாத் " என்னும் தனது வணிகக்  கலத்தைக்   கடலினுள் செலுத்தினாராம் இரண்டாம்  ஸரபோஜி மஹாராஜர்..

நாகூர், காரைக்கால் துறைமுகங்களில்    ஆங்கில, போர்ச்சுகீசிய, பிரெஞ்சு  மற்றும் டேனிஷ் வணிகர்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட பொருட்கள்   வெட்டாறு , மற்றும் அரிசிலாறு ஆகியவற்றின்  ஆழமும், அகலமும் கொண்ட  பெரும்   நீர்த்தடங்களின்  வழியே  சிறு கலங்கள் மற்றும் தோணிகள்  மூலம் உள்நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டனவாம் ..

பூந்தோட்டத்திலிருந்து..  விழிதியூர் கிராமம் வரையிலும் முடிகொண்டான் மற்றும் அரிசில்மாநதிக்கரைகளில் பெருமளவு நீண்ட இழைப் பருத்தி பயிரிடப்பட்டு, கரையோர  கிராமங்களில் இருந்த அனுபவமும், திறமையும் கொண்ட  பெண்களால்  பஞ்சடிக்கப்பட்டு, பிற்பாடு உற்பத்தியான நூற்கண்டுகள்    காரைக்கால் பகுதியில் இருந்த அக்ஷயலிங்க நூல்கடை, முருக நூல்கடை, வீழிநாத சுவாமி நூல்கடை போன்ற பல  பழம்பெரும்  நூல் விற்பனை மையங்கள் மூலம் நெசவாளர்களுக்கு விற்பனையானது  என்கிறது பதினெட்டாம் நூற்றாண்டு   வரலாற்றுச் சுவடி.. 

காவிரிக்கரை  கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்ட  " ரம்பூட்டின் " என்னும் உயர் ரக துணிக்கு அயல்நாடுகளில் பெரிய அளவு  வரவேற்பு இருந்துள்ளது.. 
.
அதிலும், ஒவ்வொரு ஆண்டும்  தென்கிழக்காசிய நாடுகளுக்கு மட்டுமே பல்லாயிரம் முழம் ரம்பூட்டின் துணி  கரையோர  நெசவாளர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதை  பிரெஞ்ச்சு ஆவணங்கள் நமக்கு அறிவிக்கின்றன...

மேற்கே  திருக்காட்டுப்பள்ளி முதல்  கிழக்கில் நன்னிலம்,  பேரளம். மாயூரம் மற்றும் சீர்காழி பகுதிகள் வரையிலும் உற்பத்தியான  சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நெல் வகைகள் வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டது. 

இந்த நெல் முழுதும்  காவிரியின் ஏழு கிளை நதிகள் வங்கக் கடலுடன் சங்கமிக்கும்   காரைக்கால்  பகுதிக்கு ஏழு  நீர்வழிகள்  மூலம் தோணிகளில் கொண்டுவரப்பட்டு  அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் தயாரான  உயர்தர அரிசி ஜப்பான் வரைக்கும் ஏற்றுமதியானது என்ற செய்தியையும் பிரெஞ்ச்சு வாணிபக் குறிப்புகள் வாயிலாக அறிகிறோம்...

நாகை,  நாகூர், காரைக்கால், தரங்கம்பாடி  என்று  பத்து மைல்  தூரத்திற்குள் நான்கு உலகப் பிரசித்தி பெற்ற துறைமுகங்கள்  பல நூற்றாண்டுகளாகச் செழித்து வந்திருப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான் ஸாத்யம் .. 

ஏனென்றால் உலகில் வேறெங்கும் இத்தனை செழிப்பான  மண்ணும்,  வற்றாத நீரோட்டமும், கைத்தொழிலிற் சிறந்த ஜன ஸமூஹமும்   கிடையாதே..!

அதனால்தான் பிரெஞ்ச்சுக்காரர்களைத் தொலைத்துக்கட்டிக் காரைக்காலை மீண்டும் தஞ்சை அரசின் பிடிக்குள் கொண்டு வந்த ஆங்கிலப்படையைப் பாராட்டிய  ஸரபோஜி  மன்னர் .. நெப்போலியனை வீழ்த்திய இங்கிலீஷ்காரர்களைப் பெருமைப் படுத்தும் வண்ணம் சாளுவநாயக்கன்பட்டினத்தில் மனோரா என்னும் கோபுரத்தையும்  கட்டி மகிழ்ந்தார்.. 

பிற்பாடு  காரைக்கால் பிரதேசம் வடக்குத் தஞ்சை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு..   தெற்கே ஆவுடையார்  கோயில் முதல் வடக்கே கொள்ளிடம் வரைக்கும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமாக  உருவெடுத்ததால்  முன்னைவிட அதிக  பலமுடனும், செல்வ வளத்துடனும்   திகழ்ந்தனர்  தஞ்சை மாவட்ட விவசாயிகள்.. 

வடபாதி மங்கலம், களப்பாழ், மன்னார்குடி எஸ்டேட்   முதலியார்கள் .. கபிஸ்தலம் மூப்பனார்,   திருவாரூர், மன்னை ,  தஞ்சை பகுதி முக்குலத்தோர், முதன்மையான  பூண்டி  வாண்டையார், கீழ்வேளூர், நாகை  பகுதி நாயுடுக்கள், மயிலாடுதுறை, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி வன்னியர்கள், பதினெட்டு க்ராம செங்குந்தர்கள், தண்ணீர்க்குன்னம். சித்தாய்மூர்,  மங்க நல்லூர் உடையார்கள் , அணைக்குடிபிள்ளை முதலான சைவ  வேளாளர்கள்,    சோழியர், பதினெட்டு க்ராம  வாத்திமர்கள், பட்டுக்கோட்டை சின்னையா  மற்றும்  குன்னியூர், திருக்களாவூர், வேப்பத்தூர், கல்யாணபுரம்,  கணபதி அக்ரஹாரம்,  கதிராமங்கலம், பாஸ்கரராஜபுரம்  முதல்  காளியாக்குடி, சட்டநாதபுரம், கடவாசல் வரையும் இருந்த வடமர்கள், மன்னார்குடி  எஸ்டேட், ஆமூர், திருக்குடந்தை, வடுவூர் அய்யங்கார்கள் , கும்பகோணம் ராயர் ஸஹோதரர்கள் ,   என்று ஐம்பதாண்டுகள்  முன்னர் வரைக்கும் ..  எட்டு திசைகளையும் கட்டி ஆண்டனர் தஞ்சை டெல்டா ப்ரதேச   மிராசுதார்கள் .. 


இது தவிர ,  டெல்டா பிராந்தியத்தில் இருக்கும்  திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான பல லட்சம் ஏக்கர் நிலங்கள் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளால் பயிரிடப்பட்டு .. வருடம் தோறும்  முறை தவறாமல் குத்தகை நெல் அளக்கப்பட்டு வந்தது.... இந்த சமய நிறுவனங்கள் வாயிலாக எண்ணற்றோர் பயனடைந்தனர்.. இவர்களை அண்டியிருந்த  பல்லாயிரம் குடும்பங்கள் வயிறார உண்டு .. பஞ்சம் என்பதையே அறியாமல் நிம்மதியாக வாழ்ந்தனர்..

அரசை நம்பியிருக்காமல், அவ்வப்பொழுது உள்ளூர் அளவிலேயே  குடி  மராமத்து உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் குளங்களைச் செம்மையாகப் பராமரித்தும் வந்தனர்.. 

முறை வைத்து பாசனம் செய்தல் என்ற பேச்சே அக்காலத்தில்  கிடையாது.. அதிகாலையில்  பல்விளக்கப் போகும் பொழுதே .. ஒரு பக்கம் காலால் மண்ணைத் தள்ளிவிட்டு   மடை வழியே  நிறையும் அளவுக்குத் தண்ணீர் வைப்பார்களாம்.. 
  
இத்தனையும் தொலைந்து போய் .. இன்று  புதர் மண்டி ..மண்மேடிட்டுக் காணப்படும் காவிரிப் படுகை ..  

ஆங்காங்கே அடுத்த ஊருக்குத் தண்ணீர் விடாமல் பிடித்து வைக்கும் தகர்ந்து போன செக் டாம்கள்.. சரிந்து போயிருக்கும்  ரிவிட்மென்ட்கள்.. அந்தரத்தில் தொங்கும் படித்துறைகள்.. குவியலாக பிளாஸ்டிக் கழிவுகள்..டாஸ்மாக் கடை பாட்டில்கள், மூடிகள், சாராய பாக்கெட்டுகள்..  

இந்த வருஷம் நெல் சாகுபடி பண்ணும் விவசாயிகளை  இன்ஷுரன்ஸ் பண்ணிக்கொள்ளச் சொல்லுகிறது ராஜாங்கம்.. 

ஆரம்பத்திலேயே நல்ல சகுனம்..  

எப்படியும் கடைசியாக ..  ஏதாவது இழப்பீடு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை மட்டுமே வைத்து விதையைத் தெளிக்கும் விவசாயி.. 

திருப்பூருக்கு வேலைக்குப் போய்விட்ட சந்ததிகள்..  

இந்த வருஷம்.. கொடும்  பஞ்ச காலத்தில்  அரிசித்  தவிடு இல்லாவிட்டாலும் .. வைக்கோலாவது முதலாளி  வாயாரக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும்  கால்நடைகள்.. 

தஞ்சாவூர் டெல்டாவில் ..  என்றோ  நடந்தாய் .. வாழி காவேரி ..!







2 comments:

  1. இயற்கையும் காவேரியும் தொடர்ந்து வஞ்சிக்க மாட்டார்கள்! தர்மம் தழைத்து ஓங்கும் விரைவில்! மஹா பெரியவா திருவடிகளே சரணம்!

    ReplyDelete