இன்று " ராமபத்ர ராரா" என்னும் ஸ்ரீபத்ராசல ராமதாசரின் கீர்த்தனையைக் கேட்க நேர்ந்தது... கீர்த்தனையைக் கேட்கும்போதே பழைய நினைவுகள் மனதிற்குள் தோன்றலாயின...
அப்போது...
பூஜ்யஸ்ரீ புதுபெரியவாள் அவர்களின் திருவுளப்படி... பூஜ்யஸ்ரீ பாலபெரியவாளை முதன்முதலாக தஞ்சை ஜில்லாவிற்கு அழைத்துவந்து ஒவ்வொரு பெரிய நகரத்திலும் அவர்களுக்குப் பட்டணப்ரவேசம் செய்துவைத்தார்கள் ஸ்ரீமடத்தின் சிஷ்யர்கள்...
ஊருக்கு ஊர் போட்டி போட்டுக்கொண்டு மேன்மேலும் சிறப்பாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன..
முதலில் சிதம்பரம் ..
அடுத்தது சீர்காழியில் ..
நெப்பத்தூர் பாலு ஐயர்.. டாக்டர் கோதண்டராம ஐயர்.. தங்குடு டாக்டர், எஸ்டேட் முதலியார் கடைக்கண் விநாயகநல்லூர் துரைராஜ பிள்ளை உள்ளிட்ட அந்த வட்டாரத்தில் மிகப்பிரபலமான பெரிய மனிதர்கள் அடங்கிய வரவேற்புக் குழு ஐம்பது நாகஸ்வர வாத்யக்காரர்களை ஏற்பாடு செய்து பட்டணப்ரவேசம் விட்டார்கள்..
ஊர்வலத்தின் நிறைவில் அருகில் வந்துகொண்டிருந்த ஆரூரனின் தகப்பனாரைப் பார்த்த பூஜ்யஸ்ரீ பாலபெரியவாள் அவர்கள் 'அடுத்த மூன்று நாட்களில் திருவாரூரில் கேம்ப் ஏற்பாடாயிருக்கு போலிருக்கே.. அங்கே எவ்ளோ நாகஸ்வரம் வரப்போறது ?' என்று விளையாட்டாகக் கேட்டார்கள்..
அதற்கு ' எல்லாம் பெரிவா அனுக்ரஹம்" என்று மட்டும் சொல்லிக்கொண்டார் ஆரூரனின் தகப்பனார்...
அன்றிரவே சீர்காழியிலிருந்து திருவாரூர் திரும்பியாயிற்று .. வரும் வழியெங்கும் ' இடையில் இருக்கும் மூன்று நாட்களுக்குள் எப்படி சீர்காழியைத் தாண்டி நம்ப ஊரில் ஏற்பாடு செய்வது ?" என்று கவலைப்பட்டுக் கொண்டே வந்தார்..
மறுநாள் காலை எட்டு மணி இருக்கும் .. திருவாரூர் கோயில் ப்ரதான நாகஸ்வரக்காரரான பாரிநாயனம் வித்வான் செல்வகணபதி பிள்ளை தற்செயலாக வீட்டுக்கு வந்தார் ..
பூஜ்யஸ்ரீ ஆசார்யர்களின் திருவாரூர் விஜயத்தைப் பற்றிக் கேட்டதும் " என்னால் இயன்ற அளவு எங்க மனுஷாளைக் கொண்டாந்துடறேன் " என்று மிகுந்த விநயத்துடன் சொல்லிச் சென்றார்..
அத்துடன் இந்த விஷயத்தை மறந்து விட்டு அடுத்த ஏற்பாடுகளை பார்க்கலாயிற்று..
மூன்றாவது நாள்...
பூஜ்யஸ்ரீஆசார்யர்களும் திருவாரூர் எல்லைக்குள் விஜயமானார்கள் ...
முதலில் ஸ்ரீத்யாகராஜஸ்வாமியை தர்சித்துக்கொண்டு ஸ்ரீமாற்றுரைத்த விநாயகர் கோயிலில் பட்டண ப்ரவேசம் தொடங்கிற்று..
அதுவரையிலும் கமலாலயத்தின் படித்துறைகளில் ஆங்காங்கு இருந்து கொண்டு தங்கள் வாத்தியங்களை தயார் பண்ணிக் கொண்டிருந்த நாகஸ்வர வித்வான்கள் தங்களது செட்டுகளுடன் விரைவாக அங்கு வந்து சேர்ந்து கொண்டனர்...அவர்களில் பலரும் வ்யாஸ பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஸ்ரீமடத்திற்கு வந்து வாசிக்கும் வழக்கம் உடையவர்கள்..
முதலில் மல்லாரி வாசிக்கத் தொடங்கினார் திருக்கோயில் வித்வான் செல்வகணபதி பிள்ளை..
அவ்வளவுதான்...
ஏராளமான நாகஸ்வர வித்வான்களின் மல்லாரி மற்றும் தவில் முழக்கம் கமலாயக் குளக்கரையில் பட்டு மேலக்கோபுரத்திலும் பெரிய கோயில் மதிலிலும் எதிரொலித்தது ..
எத்தனை நாகஸ்வரக்காரர்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணக்கூட முடியவில்லை.. அந்த அளவிற்கு மக்கள் கூட்டம்.. அவ்வளவு நெரிசல்...
அருகிலிருந்த ஆரூரனின் தகப்பனாரை சமிக்ஞையால் அழைத்த பூஜ்யஸ்ரீ பாலபெரியவாள் புன்சிரிப்புடன் ...
"இங்கு வந்திருக்கும் வித்வான்கள் மொத்தம் எத்தனை பேர் ?" என்று கேட்டார்கள்..
அதுவரை வந்திருந்தவர்களை எண்ணிப்பார்க்காத அவரும் பணிவுடன் "இன்னும் எண்ணலே பெரிவா..எல்லாம் பெரிவா அனுக்ரஹம்" என்று சொன்னார்...
அன்று மட்டும் தஞ்சாவூர் ஜில்லாவில் இருந்த பிரபல நாகஸ்வர வித்வான்கள் மொத்தம் 108 பேர்.. தவில் வித்வான்கள் மொத்தம் 216 பேர் ஆக மொத்தம் 324 பேர் பூஜ்யஸ்ரீ ஆசார்யாளின் திருவாரூர் பட்டணப்ரவேசத்தில் கலந்து கொண்டு இசைமழை பொழிந்தார்கள்.. தாளம், ச்ருதிப்பெட்டி, ஒத்து வாசித்தவர்களையும் உடன் வந்தவர்களையும் சேர்த்தால் மொத்த கலைஞர்கள் 400 பேருக்கும் மேல் இருந்திருப்பார்கள்
செல்வகணபதி பிள்ளை தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னதும்.. அவரவர்களும் மற்றவர்களிடமும் சொல்லி அழைத்துக் கொண்டு அன்று இத்தனை பேரும் ஒன்றாகத் திரண்டு வந்திருக்கிறார்கள்.
வெகு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த மிக நீண்ட ஊர்வலம் நிறைவாக துர்காலயா சாலையிலிருக்கும் ஆரூரனின் இல்லத்தை அடைய இரவு வெகு நேரமாயிற்று...
ஜாகைக்குள் ப்ரவேசமாகும் முன் " மங்களம் வாசித்து முடிச்சுடலாங்களா?" என்று கேட்டார் செல்வகணபதி பிள்ளை.. சற்று தொலைவிலிருந்தும் பூஜ்யஸ்ரீ பால பெரியவாள் அவர் கேட்டதைக் கவனித்துவிட்டு ஆரூரனைக் கூப்பிட்டு... "'ராமபத்ர ரா...ரா' வாசிச்ச பிற்பாடு மங்களம் வாசிக்கச் சொல்லு" என உத்தரவாயிற்று ..
எசமான் திருவுளக்குறிப்பையறிந்ததும் வித்வான்கள் இன்னும் விசேஷமாக அந்த கீர்த்தனையை விஸ்தாரமாக வாசித்து நிறைவு செய்தார்கள்..
அனைவருக்கும் பூஜ்யஸ்ரீ பெரியவாள் ப்ரஸாதம், ஸன்மானங்களையும் வழங்கி அருளினார்கள்...
அக்காலத்தில் திமிரி நாகஸ்வரம் மட்டுமே ஸ்ரீமடத்தில் வாசிக்கும் வழக்கம் இருந்தது.. அதேவிதமாக பாரி நாகஸ்வரம் மட்டுமே வாசிக்கப்படும் வழக்கம் திருவாரூரில் உள்ளது..
'மறுநாள் ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரீ ஸமேத ஸ்ரீசந்த்ரமௌலீச்வர ஸ்வாமியின் பூஜைக்கு திருவாரூர் ஸம்ப்ரதாயபடி பாரி நாகஸ்வரம் வாசிக்கவேணும்' என்ற பூஜ்யஸ்ரீ
பாலபெரியவாளின் திருவுளப்பாங்கைத்
தெரிந்து கொண்ட செல்வகணபதி பிள்ளையும் அவ்வண்ணமே மூன்று காலங்களுக்கும் கொடுகொட்டியுடன் பாரி நாயனம் வாசித்து நிறைவு செய்தார்...
ராமபத்ர ரா.. ரா.. கீர்த்தனையைக் கேட்டு முடிப்பதற்குள் இத்தனை நிகழ்வுகளும் மனதிற்குள் மலர்ந்து விரிந்துவிட்டன...
( பூஜ்யஸ்ரீ பாலபெரியவாள் அவர்களின் பொன்விழா ஆண்டையொட்டி எழுதப்பட்டது)
ராமபத்ர ரா.. ரா.. கீர்த்தனையைக் கேட்டு முடிப்பதற்குள் இத்தனை நிகழ்வுகளும் மனதிற்குள் மலர்ந்து விரிந்துவிட்டன...
( பூஜ்யஸ்ரீ பாலபெரியவாள் அவர்களின் பொன்விழா ஆண்டையொட்டி எழுதப்பட்டது)
No comments:
Post a Comment