Monday, March 5, 2018

விச்வரூப தரிசனம்...II

1995ம் ஆண்டு..எசமானர்களின் சோழமண்டல யாத்திரை.. மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள்,  காரைக்கால் முக்கியஸ்தர்கள் ஏற்பாட்டில்  மாபெரும் வரவேற்பு நடந்தது.

இரண்டு நாட்கள் முகாமிட்டு பிறகு  எசமானர்கள் திருமலைராயன் பட்டினம் வழியே  வாழ்மங்கலம் தமிழக எல்லையில் இருக்கும் செக் போஸ்ட்டைக் கடந்து திருவாரூரில் இரவு தங்குவதாக ஏற்பாடு..

காரைக்கால்  முயல் மார்க் ரைஸ் மில் வளாகத்திலிருந்து எசமானர்கள் இருவரும் புறப்பட்டு பாரதியார் வீதியில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் அப்போதைய  அமைச்சர் சந்திரகாசு, காவல்துறை கண்காணிப்பாளர் பரம்ஜித்சிங், காரைக்கால் மண்டல நிர்வாகி மாத்யூ சாமுவேல், ஊர்  முக்கியஸ்தர்களின் வாகனங்களும் வந்து கொண்டிருந்தன.

ஆரூரனுக்கு அந்த ஊரில் அலுவலகம் ஏற்படுத்தித் தந்து சில காலம்தான் அப்போது ஆகியிருந்தது.

வீதியின் ஓரமாக எசமானரை வணங்கி நமஸ்கரித்ததும் .. தமது திருக்கரத்தை உயர்த்திக்  காட்டினார்கள்,,, வாகனத்தில் இருந்தபடியே மேலே இருந்த அலுவலகத்தின் பெயர்ப் பலகையையும்  வாசித்துவிட்டார்கள்..

சட்டென்று  முன்னால் இருந்து வாகனத்தை ஓட்டி வந்த ஸ்ரீசீதாராம ஐயரிடம் வாகனத்தை நிறுத்தத் சொல்லிவிட்டு இறங்கி விடுவிடுவென்று மாடிப்படிகளில் ஏறி அலுவலகத்துள் வந்து அங்கிருந்த எசமானர்களின் திருவுருவப்படங்களுக்கு புஷ்பம் சார்த்தி, குங்குமத்தை தமது கை நிறைய அள்ளி சுற்றிலும் இருந்த சாதனங்களின் மீது இட்டார்கள்.. ப்ரஸாதம் கொடுத்தார்கள்...

அப்போது ஆரூரனின் பெற்றோர் திருவாரூர் முகாம் வேலைகளை ஏற்பாடு செய்வதற்காக முன்னதாகச் சென்றுவிட்டபடியால்  ஸ்ரீமடம்  முக்யஸ்தரான முதியவர் திருத்துறைப்பூண்டி ஸ்ரீராஜம் ஐயர் மட்டுமே அங்கிருந்தார்.

அவரிடம்-
" நம்ப பையன் தன்னந்தனியா புது ஊர்ல தைரியமா வந்து ஆஃபீஸ் போட்ருக்கான்.. நிறைய வேலை பார்த்துண்டு நன்னா இருக்கணும்" என்று சிரித்தபடியே  சொல்லிவிட்டு  வேகமாகக் கீழிறங்கித் தம் வாகனத்தில் ஏறிவிட்டார்கள்..

சுற்றிலும் இருந்த விஐபி-களுக்கு சற்று நேரம் என்ன நடந்ததென்றே  அறியக்கூடவில்லை..
என்னவென்று அறிய  பலருக்கு ஆர்வம்...
ஒரு சிலருக்கு இப்படி திடீர்  ப்ரோக்ராம் இடையில் வந்து புகுந்ததென்று சற்று கோபம்..

எஜமானர்களின் அடுத்த முகாம் திருவாரூர் என்பதால் ஆரூரனும் வேகமாக வந்து அருகிலிருந்த வாகனத்தில் ஏறிக்கொண்டு கான்வாயின் முன்னால் முந்திக்கொண்டு செல்ல..

சற்று நேரத்தில்..திருமலைராயன் பட்டினத்தில் அபிராமியம்மன் கோயிலில் பொது ஜனங்கள் வரவேற்பு,,

அப்போது ஒரு காவலர் ஆரூரனிடம்   "உங்களை காவல்துறை கண்காணிப்பாளர் அழைக்கிறார்" என்று கூப்பிட்டுப் போய் அருகில் இருந்த காவல் நிலையத்துக்குள் உட்கார்த்தி வைத்து விட்டார்..

அப்போதுதான், முன் அனுமதியின்றி  கான்வாயை இடையில் நிறுத்தி எசமானரை இறக்கி அழைத்துப்போனதாலும்..
பிறகு வாகனங்களை முந்திக்கொண்டு முன்னால் வேகமாகச் சென்றதாலும் மந்திரி உள்ளிட்ட ஓரிரு முக்கியஸ்தர்களுக்கும், காவல்துறைக்கு கண்காணிப்பாளருக்கும் கோபம் வந்து இப்படி உட்கார்த்தி வைத்துவிட்டார்கள் என்பது புரிந்தது..

ஆரூரனுக்கு இளம் வயது.. உள்ளூர் வ்யவஹாரமும் தெரியாது.. இப்போதுள்ளதைப் போல  செல் ஃபோன் முதலிய வசதிகளும் அப்போது கிடையாது.. கையில் காசு இல்லாமல் மேல் சட்டை அணியாமல் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது...
சற்று நேரத்திற்கெல்லாம் வாக்கி டாக்கி ஒலித்தது..

காவல்துறைக் கண்காணிப்பாளரிடமிருந்து உடனே ஆரூரனை வாழ்மங்கலம்  செக்போஸ்ட் அருகில் பத்திரமாக அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லப்பட்டது..

சில நிமிடங்களில் வாழ்மங்கலம் தமிழக எல்லைப்புறக் கண்காணிப்புச் சாவடிக்கு அழைத்து  வந்தார்கள்.. பக்கத்திலிருந்த பெரிய ஆலமரத்தடியில் எசமானர்கள் செல்லும் வாகனங்கள் நிற்பது கண்ணில் பட்டது..

நடந்தவற்றை எவரும் அவர்களிடம் சொல்லவில்லை.. என்றாலும் யாவற்றையும் உணர்ந்து  எல்லைச்சாவடி வந்ததும் வண்டிகளை நிறுத்திவிடச் சொல்லியிருக்கிறார்கள். ஆரூரனைத் திருப்பிக் கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைக்கச் சொல்லிவிட்டு அங்கேயே நின்றுவிட்டிருக்கிறார்கள்.. அதனால் உடன் வந்த எல்லா வாகனங்களும் அப்படியே சாலையோரமாக நின்றிருந்தன.

காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆரூரனை அழைத்துக்கொண்டுபோய்  எசமானர்களிடம் ஒப்புவித்தார்.. நடந்தவற்றுக்கு எசமானர்களிடம் வருத்தத்துடன் மன்னிப்பும்  கோரினார்..

ஆரூரனைக் கண்டதும்..
"அடுத்தது திருவாலூர்தான்..  ஓடிப்போய் முன் வண்டியில் ஏறிக்கோ.. முன்னாடி போ.." என்று  தமக்கேயுரிய  ப்ரகாசமான சிரிப்புடன் எசமான் சொன்னார்கள்...

இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு 1995..
எசமானர் தங்கக் கையால்  குங்குமத்தை அள்ளிப் போட்ட ஆரூரனின் அலுவலகம்  அவரது தெய்வ வாக்கின்படியே  பல்கித் தழைத்து பிற்பாடு.. 2005ல் எசமானருக்கு மாபெரும் வரவேற்பளித்ததும் நாம் ஏற்கனவே கண்டது...

விச்வரூப தர்சனம் : 1

Image may contain: 1 person, smiling, standing



2004 தீபாவளியன்று தர்மத்தின் வாழ்வை சூது கவ்வியிருந்த அந்த சமயத்தில் வேதபுரியான புதுச்சேரி மண்ணில் தர்மத்தை மீண்டும் வெல்ல வைக்க உள்ளூர் மக்கள் திரண்டனர்.
காரைக்கால் நகரில் முழுக் கதவடைப்பு..
கண்டன ஆர்ப்பாட்டம்.. பொதுமக்கள் நடத்திய மாபெரும் ஊர்வலம்...


பிற்பாடு 2005ம் ஆண்டு... சிதம்பரம் முகாம்.. ஆரூரனிடம்.. "இன்னும் இரண்டு நாட்களில் காரைக்காலுக்கு வரப்போகிறோம்.. ஆனதைச் செய்" என்று மட்டும் சொன்னார்கள்...

காரைக்கால் மாவட்டத்திற்கு எசமான் விஜயம் செய்தபோது....
அம்பகரத்தூர் தமிழகம்-புதுவை எல்லைப் பகுதியிலிருந்து அவர்களின் வாகனத்தின் முன்னும் பின்னும் சுழலும் விளக்குடன் சைரன் பொருத்தப்பட்ட இரு காவல்துறை வாகனங்கள்..


ஒவ்வொரு காவல் நிலையத்தையும் தாண்டுங்கால் அந்தந்தக் காவல்நிலையப் பொறுப்பாளர் நீண்ட விசில் ஒலித்தபடி ஸல்யூட் செய்தனர்..
திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேச்வர ஸ்வாமி ஆலயத்திலும் மற்ற இடங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள், நகரமன்ற மேயர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றனர்...
ஸ்ரீமடத்திற்கென ஃப்ரெஞ்ச் அரசு சார்பாகப் பல நூற்றாண்டுகளாக வழங்கி வரும் அனைத்து பாரம்பர்ய மரியாதைகளுடன் எசமானரைப் போற்றி வணங்கினர்..

மீனவப் பஞ்சாயத்துகள் ஸ்ரீயவர்களின் வருகையை ஒட்டி எவரும் கடலுக்குப் போகக்கூடாதென்று விடுமுறை அறிவித்து அவர்களைத் தரிசிக்கத் திரண்டு வந்தனர்...

ஹரிஜனங்களும் உரிய மரியாதைகளுடன் தமது கிராமப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று கொண்டாடினர்.. அவர்கள் சென்ற இடமெல்லாம் மக்கள் திரண்டு வந்திருந்தனர்...


எசமானரை வரவேற்கும் பொருட்டு "விச்வரூப தர்சனம்" என்ற ஒரே மாதிரியான தலைப்புடன் காரைக்கால் மாவட்டம் முழுவதும் பல வண்ணச் சுவரொட்டிகள்... அலங்கார வளைவுகள்.. இருபது அடி உயரம் கொண்ட அவர்களது திருவுருவப் படங்கள் என..யாவற்றையும்.. அனைத்து ஹிந்து இயக்கங்களைச் சார்ந்த இளைஞர்களும் சிட்டாகப் பறந்து நிறைத்தனர்..
சுனாமியால் பாதிப்புற்ற நாகூர்ப் பட்டினச்சேரி மீனவர்களின் மீள்குடியேற்றத்திற்கு ஸ்தலம் தந்துதவினார்கள். அந்த இடங்களைப் பார்வையிட்டருளினார்கள்.. தக்க தருணத்தில் எசமான் செய்த உதவியை மீனவ சமுதாய மக்கள் பணிவுடன் ஏற்றுப் போற்றினர்.

பிற்பாடு... வாஞ்சியூர் தேவஸ்தானத்திற்கு விஜயம்... சொத்துக்களைப் பார்வையிட்டுத் திரும்பிய சூழலில்.. நேரமின்மை காரணமாக அவர்களுக்குரிய பாரம்பர்ய தேவஸ்தான மரியாதைகளை விரிவாகச் செய்ய முடியாமற் போயிற்று..

ஸ்ரீகாரைக்கால் அம்மையார் திருக்கோயில் மணிமண்டபத்தில் உளுந்து இடக்கூட இடமில்லாத அளவுக்குக் கூட்டம்... சட்டமன்ற உறுப்பினர் AMH நாஜிம்.. அவ்வளவு இடர்ப்பட்ட காலத்திலும் 2004 சுனாமியின்போது ஸ்ரீமடம் சார்பில் எசமான் ஆற்றிய அரும் பணிகளைப் போற்றிப் பேசினார். 

அனைவருக்கும் ப்ரஸாதம் அளித்து அவர்கள் தங்கியிருந்த சுரக்குடி க்ராமத்திற்குத் திரும்ப இரவு வெகு நேரமாயிற்று...

அப்போது வாகனத்திலிருந்து இறங்கி வரும்போது "இரண்டே நாள்தானே டயம் கொடுத்தோம்.. பாவம்.. தூங்கியிருக்கக்கூட மாட்டா.... " என்று தமக்கேயுரிய மந்தஹாஸத்துடன் மெலிதாகத் தமக்குள் சொல்லிக் கொண்டே நடந்து வந்ததை அப்போது அருகிலிருந்த மஹாதேவ ஐயர் என்னும் ஓய்வு பெற்ற ஃப்ரெஞ்ச் அரசு அலுவலர் சொன்னார்..

மறுநாள் அதிகாலை.. " நாகபட்டிணம் வக்கீல் சாம்பசிவ ஐயர்.. பண்டகசாலை க்ருஷ்ணமூர்த்தி ஐயர்.. வக்கீல் NRS போன்ற அனுபவஸ்தர்கள் இருந்து நிர்வாஹம் பண்ணின தேவஸ்தானம்.. வாஞ்சியூர் எஸ்டேட்.. பெரீவாளுக்கு எப்டி மரியாதை பண்ணணும்கூட தெரீல.. அவசரத்ல ஏதோ தெரிஞ்ச மட்டும் பண்ணிட்டோம்.. இன்னும் எவ்வளவோ பெரீசா தங்களுக்குப் பண்ணியிருக்கணும்.. பெரீவா..." என்று சொல்லி மறுபடியும் எல்லா மரியாதைகளையும முன் வைத்து நமஸ்கரித்தபோது ஏற்றுக் கொண்டு ப்ரஸாதம் தந்தார்கள்...

அடுத்த முகாம் கோவிந்தபுரம்...

அங்கும் நல்ல கூட்டம்.. நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் சென்று சற்று தள்ளியிருந்து நமஸ்கரித்தபோது... 

தம் அருகிலிருந்த ஒரு வங்கியின் முக்ய பொறுப்பாளரிடம் "இவனை உனக்குத் தெரியுமோ?" என்றார்கள்..
அவரும் உடனே "...." என்றதற்கு..
" அவன் இல்லே.. அவனுடைய தம்பி இவன்..
அவனுக்கு வ்யாபகம் ஜாஸ்தி..
உங்க எல்லாருக்கும் அவனைத்தான் தெரியும்..
இவனை யாருக்கும் தெரியாது..
இவன் நாங்க சொல்லாமல் வெளியில் வரமாட்டான்...
அந்த ஊர்ல Goverment Guest மரியாதையை எப்பவும் கொடுப்பா.. இப்பவும் கொடுத்தா.." என்று சொல்லிப் புன்னகைத்தார்கள்...