1989.. சென்னையில் சி.ஏ இன்டர்மீடியட் பரீக்ஷைக்கு வாசித்துக் கொண்டிருந்த சமயம்.. பழைய மாணவன் என்பதால் லயோலா காலேஜ் ஹாஸ்டலில் தங்குவற்கு ரூம் கொடுத்திருந்தார்கள்..
என்னுடன் வேறு சில மாணவர்களும் அவ்விதம் தங்கிப் படித்து வந்தார்கள்..
அவர்களில் ஒருத்தன் ராமசுப்பு என்கிற ராமசுப்ரமணியன்..
அவனுக்கு சொந்த ஊர் ராஜபாளையம்.. அந்த ஊரில் ராஜு பிரிவினர் அதிகம்.. சுப்புவும் ராஜுதான்.. தெலுங்கு பேசுவான்.. ஆறடி உயரத்திற்கு மேல் இருப்பான்.. மாநில பாஸ்கெட்பால் ப்ளேயர்.. க்ஷத்ரிய வம்சம்.. ஸ்ரீபெரீவாளை நேரில் தரிசித்திராவிட்டாலும் நல்ல பக்தி கொண்டவன்..
ஒவ்வொரு வாரமும் காஞ்சீபுரம் சென்று ஸ்ரீபெரிவாளைத் தரிசனம் பண்ணிவிட்டு வருவது என் வழக்கம்.. ஒருநாள் சுப்பு தானும் வருகிறேன் என்று சேர்ந்துகொண்டான். இன்னும் சில நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு எல்லோருமாகச் சேர்ந்து காஞ்சீபுரம் சென்றோம்..
அப்போது ஸ்ரீபெரிவா ஸ்ரீமடத்தில் தரிசனம் அளித்துக்கொண்டிருந்தார்கள்.. சாயங்கால நேரம்.. இருட்ட ஆரம்பித்திருந்தது..
பக்தர்கள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து ஸ்ரீபெரிவாளைத் தரிசனம் செய்துகொண்டிருந்தார்கள்.. க்யூ வரிசைக்குப் பின்னால் இருந்த சிமெண்டு மேடையில் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம்.. அந்த இடம் சற்று உயரமாக இருக்கும்..
அப்போது ஸ்ரீபெரீவா என்னிடம் சுப்பு பக்கமாகத் தன் திருக்கரத்தைக் காண்பித்தார்கள்.. “அவன் யார் ?” என்பது போல ஜாடை காட்டினார்கள்..
அருகிலிருந்த அணுக்கத்தொண்டர் என்னிடம் “ உன் கூட வந்திருக்கும் அந்தப் பையன் பேர் என்ன? “ என்று கேட்டார்…
உடன் “ இவன் பேர் ராமசுப்ரமண்ய ராஜா.. சொந்த ஊர் ராஜபாளையம்.. மெட்ராஸில் எல்லாரும் சேர்ந்து படிச்சிண்டிருக்கோம்” என்று தெரிவித்துக் கொண்டேன்..
அடுத்த கேள்வி பாய்ந்து வந்தது..
தூரத்திலிருந்த ஸ்ரீபெரீவா ராமசுப்புவைக் கை காட்டி “அவன் பூணல் போட்டுண்டிருக்கானா..?.. ஏன் அவன் பூணல் போட்டுக்கலைன்னு கேளு “ என்றார்கள்..
ராமசுப்புவை நான் கவனித்துப் பார்த்தேன்.. ஒரு பெரிய வஸ்த்ரத்தால் தன் உடம்பை நன்றாக போர்த்திக் கொண்டிருந்தான்.. அவன் மேலிருந்த வஸ்த்ரம் தவிர ஒன்றும் அருகிலிருந்த என் கண்களுக்குத் தெரியவில்லை..
'அவனுக்கு பூணல் இல்லை ‘ என்று அவ்வளவு தூரத்திலிருந்து ஸ்ரீபெரிவா அவனைக் குறிப்பாகக் காட்டிக் கேட்டதும் எங்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை..
நான் மெதுவாக சுப்புவைப் பார்த்தேன்..
ராமசுப்பு சற்று பயத்துடன் ஸ்ரீபெரிவாளைக் கும்பிட்டு “ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அதனால் பூணல் போடலே சாமி..” என்றான்..
ஸ்ரீபெரீவா அவனைப் புன்முறுவலுடன் காட்டி “ அவா ( ராஜு ) ஜாதியில் கல்யாணத்தின்போதுதான் பூணல் போடற வழக்கம்.. அதே மாதிரி கல்யாணம் ஆனவாளை மட்டும்தான் அவா பேருடன் ‘ராஜா’ ன்னு சேர்த்துச் சொல்றது ஸம்ப்ரதாயம்..
இந்தப் பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை..அதனால் இவன்பேரைச் சொல்லும்போது ராமசுப்ரமண்ய ராஜான்னு சொல்றது அவாளுடைய ஜாதி ஸம்ப்ரதாயப்படி சரியில்லே.. இவனை ராமசுப்ரமண்யன் என்றுதான் இப்போதைக்குக் கூப்பிடணும் “ என்று சொல்லி முடித்தார்கள்…
No comments:
Post a Comment