Wednesday, May 1, 2019

காம்போஜத்தில் கம்ப ராமாயணம்


கம்பராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் அனுமன்  வாலியின் பெருமையைச் சொல்லுமிடத்து
" உழலும் மந்தரத்து உருவு தேய முன்
அழலும் கோள் அரா அகடு தீவிடச்
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்."
என்று சொல்வதாகக்  காண்கிறோம்
(பாற்கடலில் அமுதம் எடுக்க முயன்ற தேவரும், அவுணரும்  வேண்டியபடியே,  வாலி..   வாசுகியின் வாற்புறம் பிடித்து இழுத்த பிற்பாடு இருதரப்பினரும்  வலிமை குறைந்து நிற்கையில் தான் ஒருவனாகவே மந்தர மலையைக் கடைந்த பெருவலியுடையவன் .)

இதையே பின்னரும்
"தேவர் வேண்ட,
    வேலையை விலங்கல் மத்தில்
சுற்றிய நாகம் தேய
    அமுது எழக் கடைந்த தோளான்"
என்று சுந்தரகாண்டத்தில் அனுமன் புகழ்ந்து பேசுவான்..

வாலி பாற்கடலைக் கடைந்த இவ் வரலாறு 
"கருங்கழல் வாலி .....  வாலமும்
பணமும் இருங்கையில் பற்றி கடைந்தனன் புணரி"
என்று சிவஞான முனிவரால் காஞ்சிப்புராணம் - மணிகண்டேசுரப் படலத்தில்  சொல்லப்பட்டுள்ளது..

காம்போஜம் என்று அக்காலத்தில் வழங்கப்பட்ட கம்போடியா நாட்டில் உள்ளது  புகழ் வாய்ந்த  அங்கோர்வாட் ஆலயம். இங்குள்ள  பாற்கடலில் அமுதம்  கடையும் சிற்பத் தொகுதியில் கம்பன் காட்டியபடியே  வாலி..  வாசுகிப் பாம்பின் வாலைப் பற்றி நின்றபடி இழுப்பதான காட்சி அமைக்கப்பட்டுள்ளதும்   நாம் அறிந்து கொள்ளவேண்டியதாகும்..
Sunday, April 21, 2019

தியாகராஜ ஞானியார்

Image result for thyagaraja tiruvarur

                                                  
1986ம் வருஷத்தில் ஒரு கார்த்திகை சோமவாரம்..   
அன்று மாலையில்.. 
எசமான் ஆரூரனுக்குத் திருவாரூர்  க்ஷேத்ர மாஹாத்ம்யம் பற்றி சொல்லி வந்தபோது இடையே 
 "பந்த காக்ஷி"  தெரியுமோ..?  த்யாகேசா த்யாகேசான்னு  பிள்ளைத்தண்டு போட்டு அஜபா நர்த்தனம் பண்ணுவா.." 
என்றபடி தாம் முன்னொரு சமயம் திருவாரூர் பக்த காட்சி உத்ஸவத்தைக் கண்ணுற்றதை நினைவுகூர்கிறார்கள்..

பிள்ளைத் தண்டு போடும் உரிமை விழிப்பிரமர் என்ற திருவீழிமிழலை அந்தணர்களுக்கு முற்காலத்தில் இருந்தது.. பிற்பாடு எப்படி அது சைவர்கள் வசம் தரப்பட்டது.. என்று கதையைத் தொடர்ந்தவர்கள் .. 
சட்டென்று ஆரூரனைப் பார்த்து  
"உனக்கு த்யாகராஜ ஞானியாரைத் தெரியுமோ?.. அவரும்  பிள்ளைத் தண்டு போடும் சைவக்குடும்பத்தில் வந்தவர்தான்  " என்றார்கள்..
"தெரியாது" என்றதும் 
"அந்த நாளில்  திருவாரூரில் ஒரு பேப்பர் கூட அவர் நடத்திண்டிருந்தாரே"  என்று  குறிப்பிட்டார்கள்..  
அதற்கும் "தெரியாது" என்றே ஆரூரன்  தெரிவித்துக்கொண்டதும் 
" ஞானியார் பத்தி  உங்க தாத்தாவுக்குத் தெரியும்..அவரிடம் கேளு.. மத்தவாளிடமும் மேற்கொண்டு விசாரித்துப்பாரு " என்றார்கள்..

பிற்பாடு எசமான் சொன்னதைப்  பற்றி  தாத்தாவிடம் கேட்டபோது... அக்காலத்தில், திருவாரூரில் தியாகராஜ ஞானியார் என்றொரு பத்திராதிபர்  இருந்ததும் அவர் கமலானி  என்றொரு பத்திரிகையை வெகுகாலம் நடத்தி வந்ததாகவும், அவரும் பிள்ளைத் தண்டு ரகசியத்தைப் பேணும் குடும்பதைச் சேர்ந்தவர்தான்.. என்று தாத்தா மேற்கொண்டு விபரம் சொன்னார்... 
வருஷங்கள் கடந்தன..  
கமலானியும் தியாகராஜ ஞானியாரும் ஆரூரன் மனஸிலிருந்து விடை பெற்றுக்கொண்டார்கள்..
ஆனாலும் ஒவ்வொரு வருஷமும் பந்தக்காட்சி வரும்போது எசமான் பக்தகாட்சி மண்டபத்தருகில் நின்றுகொண்டு அஜபா நர்த்தனம் செய்து கொண்டு வரும் ஸ்ரீதியாகேசரை தரிசிக்கும் காட்சி மனதில் தோன்றும்..  
பிள்ளைத்தண்டு போடுபவர்களைப் பார்க்கும்போது தியாகராஜ ஞானியார் பற்றி எசமான் சொன்னதும்  சட்டென்று தோன்றும்.. 
தற்போது திருவாரூரார் யாருக்கும் ஞானியாரையும் அவர் நடத்தி வந்த கமலானி பத்திரிகை  பற்றியும் தெரியாது..  
இந்த விஷயமெல்லாம் முதலும் கடைசியா எசமான் மனசு வைத்துச் சொன்னால்தான் உண்டு என்று நினைத்துக் கொள்வதுண்டு..

இந்த வருஷமும் பந்தக்காட்சி வந்தது.. ஆனால் போகக்  கூடவில்லை..
  
அன்றிரவில் எசமானர் சொல்லியது பற்றிய நினைப்புடன்..
ஆரூரன் இணையத்தில் எவற்றையோ தேடிக்கொண்டிருந்தபோது  சுப்பிரமணிய பாரதியார்  தொடர்பான ய. மணிகண்டன் அவர்கள் எழுதிய அரிய  கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது..
  
என்னதான் இருக்கிறதென்று மேலோட்டமாகப் பார்த்தபோது..
பாரதியின் மணலி விஜயம் பற்றி அதில் இருக்கவே  மேற்கொண்டு வாசிப்பு ஓடியது.. பாரதி திருவாரூருக்கு அருகில் இருக்கும் மணலி என்னும் கிராமத்திற்குச் சென்றதும், அங்குள்ள குலோத்துங்கன் வாசகசாலையின் முதலாண்டு நிறைவுவிழாவிலே சத்தியமூர்த்தியுடன் பங்கேற்றதும், இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகச் சொற்பொழிவாற்றியதும், தாம் இயற்றிய தேசப் பக்திப் பாடல்களைப் பாடிக்காட்டியதும் அக்கட்டுரையில் விவரிக்கப்பட்டிருந்தது..கட்டுரையின் நிறைவில்  "மணலி குலோத்துங்கன் வாசகசாலை - அரிய உபந்யாஸங்கள்" என்று தலைப்பிட்டு அந்தக் கூட்ட நிகழ்வுகள் மற்றும் சொற்பொழிவுகளின் சுருக்கம் தரப்பட்டிருந்தது..

அதிலிருந்து ஒரு பகுதி..
" மணலி யென்பது திருத்துறைப்பூண்டிக் கருகிலுள்ள ஒரு அழகிய கிராமம். அங்கு ஒரு ஆரம்பப் பாடசாலையும் அதனைச் சார்ந்து குலோத்துங்கன் வாசக சாலையென்ற படிப்பறையும் இருக்கின்றன. அந்த வாசகசாலையின் முதல் ஆண்டு நிறைவு டிஸம்பர் 13ஆந் தேதி திங்கட் கிழமை பிற்பகல் மூன்று மணி முதல் இரவு 10 மணி வரை கொண்டாடப்பட்டது. இடையிடையே வந்திருந்த கூட்டத்தார் அனைவருக்கும் சிற்றுண்டிகளும் இரவில் பலருக்கு போஜனமும் நேர்த்தியாகத் தயார் செய்யப்பட்டிருந்தன.
நெடும்பலம் மிராஸ்தார் ஸ்ரீமான் ஸாமியப்ப முதலியார் அக்ராஸனம் வஹித்தார். அக்ராஸனபதியும், சென்னை யிலிருந்து மேற்படி திருவிழாவுக்கென்று விசேஷமாக அழைக்கப்பட்டிருந்தவர்களாகிய ஸ்ரீமான் ஸத்தியமூர்த்தி அய்யரும், ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியும் பந்தருக்குட் புகும்போது இனிய நாகஸ்வரம் ஒலித்தது....

பிறகு ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியைக் குறித்துத் திருவாரூர் ஸ்ரீமான் ஞானியார் (கமலாஸனி - பத்திராதிபர்) சில விஷயங்கள் தெரிவித்தார்.

அப்பால் ஸ்ரீமான் - பாரதி “இந்தப் பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு (தோடி)”, “ஜயமுண்டு (கமாஸ்)” என்ற கீதங்கள் பாடினார்.ஸபையோர் அடிக்கடி கைகொட்டி வியப்புக் கூறி மகிழும்படி, இரண்டு மணி நேரத்துக்கு மேலே, நெடுநேரம் பேசினார்.... 

பிறகு ஸ்ரீ தியாகராஜ ஞானியார் “அறிவு” என்ற விஷயத்தைக் குறித்துப் பேசினார். மிகவும் ரஸமாகப் பேசி, “அறிவே கடவுள்” என்ற வேதப் பொருளை நாட்டினார். “சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே, தேஜோ மயாநந்தமே” என்ற தாயுமானவர் அடியை மேற்கோளாக நன்கெடுத்துக் காட்டினார்.... 
அப்பால் வேறு சிலர் பேசினார்கள். பிறகு ஸபா நாயகர் சுமார் அரை மணி நேரம் மிகவும் நுண்ணறிவுடனும், ராஜ்ய தந்த்ர பாண்டித்யத்துடனும் பேசினார். ஸாமான்ய ஜனங்களைப் போலவே மிராஸ்தார்களும் உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச விடுதலைக்காகச் செலவிட வேண்டுமென்றார்.பிராமணர் - அல்லாதார் என்ற பேதத்தைக் கண்டித்தார். இதனுடன் சபை முடிந்தது." என்று முடித்திருந்தார் எழுத்தாளர் ய.மணிகண்டன்..
இத்தனை காலம் கழித்து.. 
இன்று, அறியப்படாத பாரதி   என்னும் இக்கட்டுரை வாயிலாக  கமலாஸனி - பத்திராதிபர் தியாகராஜ ஞானியார் சுதந்திரப்போராட்டவீரர் என்றும் , அவர் மஹாகவி பாரதி,   தீரர் ஸத்யமுர்த்தி ஆகியோருக்கும் ஆதரவாக இருந்து திருவாரூர் அருகில் உள்ள கிராமங்களுக்கு அவர்களை அழைத்துச்சென்று கூட்டங்களை நடத்தி தெய்வீகமும் தேசியமும் பரவப் பாடுபட்டவர் என்பதுமான பலவற்றையும்  அறிந்துகொண்டது எசமானவர்களின் கருணையேயன்றி வேறென்ன ?Tuesday, September 25, 2018

அமெரிக்க விநாயகர்...1

                                       Image result for mahaperiyava pillayar 

புகழ் பெற்ற நூலகத் துறை மேதையான S.R.ரங்கநாதன் அவர்களின்  நூல் ஒன்றை  வாசித்துக் கொண்டிருந்தபோது...

பூஜ்யஸ்ரீ பெரீவா அவர்களுடன் தமக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் விவரித்திருந்த இச் சம்பவம் கண்ணில் பட்டது...

சீர்காழியைப் பூர்விகமாகக் கொண்ட  S.R. ரங்கநாதன் இந்திய நூலகத் துறையின் முன்னோடி...உலகெங்குமிருந்த பழம்பெருமை மிக்க நூல் நிலையங்களுடனும் நல்ல தொடர்பில் இருந்தவர்...

                   

1932ம்  வருஷத்தில் ஒருநாள்...

S.R.ரங்கநாதன்  பூஜ்யஸ்ரீ பெரீவாளைத்  தரிசிக்க வந்திருந்தார்...

ரங்கநாதனைக் கண்ணுற்ற   பூஜ்யஸ்ரீ பெரீவா அவரைப் பார்த்து...
" வெகுகாலத்திற்கு  முன்பு நம் தேசத்திலிருந்து தற்போதைய அமெரிக்காவிற்குச் சென்றவர்கள்  அங்கு ஹிந்து தெய்வங்களுக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள் என்பது தெரியுமோ ?" என்று வினவினார்கள்..

அதுவரையிலும் ரங்கநாதனுக்கு  அப்படி ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை.. அதனால் பதில் தர முடியாமல் மேற்கொண்டு அவர்கள் சொல்வதை எதிர்பார்த்து இருந்தார்..

சற்று நேரம் மௌனம்..

பிறகு, பூஜ்யஸ்ரீ பெரீவா அவர்களே தொடர்ந்தார்கள்...

"அப்படி அந்த நாட்டிற்குப் போய் அங்கேயே  தங்கிவிட்ட நம்ப ஜனங்கள் தங்களுக்காக கோயில்களைக் கட்டிக்கொள்ள வேணுமென்று  நினைத்து தொடங்கியபோது   முதலாவதாக  ஒரு பிள்ளையார் கோயிலைத்தான் கட்டியிருக்கணும்..
அப்படி நம்மவர்களால் வெகு காலத்திற்கு முன்னால் கட்டப்பட்டதாக  பிள்ளையார் கோயில் எதையும் பற்றி அங்கிருக்கும் பழைய ரிகார்டுகளில் ஏதாவது படமோ அல்லது விஷயமோ உன் கண்ணில் பட்டிருக்கா..?"

(தொடரும்)

Wednesday, September 12, 2018

காணாபத்யம் போற்றும் கமலை


கமலாலயத் திருக்குளத்தின் ஈசான்ய முலையில் வீற்றிருக்கும் மாற்றுரைத்த விநாயகர் ..
மாற்றுரைத்து தங்கத்தின் மதிப்பைக் காட்டிய பிள்ளையார் ... இவரை " ஸ்வர்ணாகர்ஷண கணபதி" என்று போற்றுகிறார் ஸ்ரீதீக்ஷிதர்

ஸ்ரீத்யாகேசர் அருளும் ஆரூர்ப் பூங்கோயிலின் வழிபாடு  ஸ்ரீவல்லபா கணபதியிடத்தினின்று தொடங்குவதும்.. ஸ்ரீகமலைப்பராசக்தியின் வழிபாடு  ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியிடமிருந்து ஆரம்பித்தலும் வெறெந்தத்  தலத்திலும் இல்லாத சிறப்பு..

முதற் பிரகாரத்திலிருக்கும் ஸ்ரீவாதாபி கணபதியை முன்னொரு காலத்தில் சிலர் கலிங்க தேசம் வரைக்கும் எடுத்துப்போனதும்..
அப்போது வாஹனத்தின் அச்சு முறிந்ததும்..
பிற்பாடு வாதாபி வாரணம் ஆரூருக்கே திரும்ப வந்து சேர்ந்ததும் சரித்திரத்தில் காண்பன..

ஸ்ரீஐங்கலக்காசு விநாயகர்
பூங்கோயிலின் எழுந்தருளும் கணபதியார் திருமேனி..
ஐந்து கலம் அளவிற்கான காசுகளைக் கொண்டு உருக்கித்  தூயதாக வார்க்கப்பட்ட விக்ரஹம் என்பர்..
குதிரைக்காரன் கலாபத்தில் ஆரூர்ப் பெருமான் த்யாகர் உட்பட அனைத்து உத்சவ மூர்த்திகளும் பாதுகாப்பிற்காக வேறிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இவரைக் கிழக்கில் கடற்கரையோரம் கொண்டு செல்லும்போது அந்நியர் அச்சுறுத்தலால் அடையாளமிட்டுக் கடலினுள் இட்டனர்.. அப்போது தலைகீழாகக் கடலினுள் சரிந்தபோது மேற்கை பாசம்.. அடித்தரையில் பட்டுச் சற்றே வளைந்து போனதை இன்றும் காணலாம்..

மூலாதாரசக்ரமாகிய நான்கிதழ்த் தாமரையில் ஐந்தலையரவின் மீது நிருத்தமிடும் ஸ்ரீமூலாதார கணபதி... திருவாரூரன்றி..   உலகில் வேறெங்கும் காணமுடியாதவர்.
"ஸ்ரீமூலாதாரசக்ரவிநாயக" என்னும் ஸ்ரீராகக்ருதியில் இந்த மூர்த்தியின் பல சிறப்புகளையும்  குறிப்பிடுகிறார் ஸ்ரீதீக்ஷிதர்..


ஹேரம்ப கணபதி 
பஞ்சமுக கணபதி எனவும் அழைக்கப்படுபவர்..
வாதாபி விநாயகரின் அருகில் இருக்கும் மூர்த்தி...
இவரைப் போற்றி மலஹரி ராகத்தில் "பஞ்சமாதங்கமுககணபதிநா" என்றும் தொடங்கும்  கீர்த்தனம் ஒன்றைச் செய்திருக்கிறார் தீக்ஷிதர்..
பஞ்சமுகப் பிள்ளையாரின் (த்யான ச்லோகத்தின்படியான) வடிவமைப்பு அப்படியே இந்த க்ருதியில் பாடப்பெற்றிருப்பது மிகவும் சிறப்பானதாகும்..

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி...
ஸ்ரீவித்யை வழிபாட்டில் முதன்மையான மூர்த்தி.. ஆரூர் உள்ளிட்ட  மிகச்சில க்ஷேத்ரங்களில் மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும்..

இவரது வழிபாடு மிகவும் குஹ்யமானது..
மிகச் சிறந்த பலன்களை அதிசீக்ரத்தில் தரவல்லது.. ஆனால் தற்போதைய காலச்சூழலில் முறையற்ற உபாஸனை அபாயகரமானதெனவும் பெரியோர் எச்சரிப்பதுண்டு..

(திருவாரூரில் ஸ்ரீகமலாம்பிகைக்கு  ஆக்னேயத்தில் இருக்கும் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியைத் தரிசிக்கும் மந்த்ரஸாதகர்கள் ஒரு சிலர்  அக்ஷரபீடத்தருகில் அமர்ந்து திவ்ய மந்த்ரங்களை ஜபம் செய்வதையும் எனது சிறு பிராயத்தில் கண்டிருக்கிறேன்..)

தீக்ஷிதரவர்களின் "உச்சிஷ்டகணபதிம்" கீர்த்தனையில் இவரின் ஸ்வரூபம், மந்த்ரம், உபாஸிப்போர் அடையும் பலன்கள்.. அழகுறத் தரப்பட்டுள்ளன.

उच्छिष्टगणपतौ भक्तिं
कृत्वोन्नतपदवीं व्रज रे हृदय |

सच्छब्दवाच्यस्वरूपिणि शबलीकृतब्रह्मस्वरूपिणि |
चिच्छक्तिस्फूर्तिस्वरूपिणि चिदानन्दना[द]थस्वरूपिणि ||

नारीयोनिमुखास्वादने नग्नरामक्रियामोदने |
भेरीवीणावेणुवादने भेदाज्ञानध्वान्तसूदने ||

शौरिनुते नतगुरुगुहमदने
सूरिजनयुतश्रीपुरसदने |
दूरीकृतमहादुरितकदने
गौरीशनन्दने गजवदने ||

இரண்டாம் பிரகாரத்தின் கிழக்குப்புறச்சுவரில் காணும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய சாசனம் இது..

தைப்பூசத்திருவிழாவன்று பெருமான் ஸ்ரீவீதிவிடங்கதேவர் ஆட்டத்துவெளியில் திருஉலா வரும்போது..
ஸ்ரீமாஹேச்வரர் விண்ணப்பம் செய்தபடி இறைவன் அடியவரான  வீரவித்யாதர பல்லவராயர் என்பார் வேண்ட..
அதையேற்ற ஈசனும்...
தீர்த்தக்குளத்தின் (கமலாலயம்) மேற்புறமிருக்கும் தமது பிள்ளையாகிய திக்கு நிறைந்த விநாயகப் பிள்ளையாருக்கு அர்ச்சனைக்காகவும், திருவமுதுக்காகவும்   வேண்டுவனவற்றை அளிக்கத் திருவாய் மலர்ந்தருளியது பற்றிய கல்வெட்டு இது..

இதில் குறிப்பிடப்படும் திக்கு நிறைந்த விநாயகப் பிள்ளையார் தற்போது கமலாயத் திருக்குளத்திற்குத் தென்மேற்கில் "கூத்தாடும் பிள்ளையார்" என்ற பெயருடன் அழகுறத் திகழ்கின்றார்..

ஸ்வேதவிநாயகர்...

ஸ்ரீஸ்காந்தபுராணத்தின் ஒரு பகுதியான நாகரகாண்டம் கமலாலய க்ஷேத்ர மாஹாத்ம்யத்தில்  நளசக்ரவர்த்திக்கு சனீச்வரனால்  ஏற்பட்ட  உபாதை தீர அவர் ஸ்நானம் செய்ததாகக் குறிப்பிடப்படும் நளதீர்த்தக் குளத்தின் வாயு திக்கில் இருக்கும் பிள்ளையார் இவர்..
வெள்ளைக் கல்லால் ஆன மூர்த்தி..

ஓடம்போக்கியாற்றிலிருந்து சாலைக்காரத்தெரு வழியாகப் பாய்ந்த ஓடையொன்றின் தென்கரையில் அமர்ந்திருக்கும்  இவர்க்கு "ஓடைக்கரைப் பிள்ளையார்" என்ற பெயர் ஏற்பட்டு அதுவே பிற்பாடு ஓட்டைப்பிள்ளையார் என வழங்கலாயிற்று.. அதனால் நள தீர்த்தமும் தற்போது ஓட்டைக்குளம்  என்றே அழைக்கப்படுகிறது,..

நளதீர்த்த ஸ்நானம்... சர்மநோயைப் போக்கும்  என்பது புராணங்களில் கண்டது...

அருகிலிருக்கும், நளேச்வரர் திருக்கோயிலில் உள்ள  பல்லவர் காலத்திய மாத்ருகணத்தொகுதியில் இவரும் ஒருவராக இருந்திருக்கக் கூடும்...

கமலையில் இருக்கும் கணபதிகளின் எண்ணிக்கை... மொத்தம் ஐநூறு.. வேறெந்த தலத்துக்கும் இந்தப் பெருமை கிடையாது..

திருவாரூரின் தென்கிழக்கில்  கபிலநதிக்குத் தெற்கில் உள்ள பகுதி... விஜயபுரம்..
ஸ்ரீநீலோத்பலாம்பிகையின் அருகில் குழந்தை ஸ்கந்தனைத் தனது  தோளில் சுமந்திருக்கும் அம்பிகையின் சேடி "விஜயை" என்ற குள்ளவடிவுடையோள்..
விஜயை  வழிபட்டதால் "விஜயபுரம்" என்ற பெயர் உண்டாயிற்று என்பார் உ.வே.சா.

கமலையைக் காத்தருளும் கணபதிகளில் ஐநூறாமவர் விஜயபுரத்தில் இருக்கிறார்.
இவருக்கும் "ஐநூற்றுப்பிள்ளையார்" என்றே பெயர் வழங்குவது குறிப்பிடத்தக்கது...


நடுக்கம் தீர்த்த வினாயகர்...

பராசக்தி  விராட்புருஷனைத் தனது பீடாஸனமாக்கி அவனது ஹ்ருதய கமலத்தில் அமர்ந்ததால் ஸ்ரீகமலாம்பிகை என்ற பெயர் உண்டாயிற்று.

அப்போது அம்பிகையின் திருமேனியில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டபோது..அதைத் தீர்க்க ஸ்ரீவினாயகர் உற்பத்தியானார். அன்னையின் மடியிலமர்ந்தார்.. நடுக்கமும் நின்றது..

வினாயகருக்கு " நடுக்கம் தீர்த்த கணபதி" என்ற பெயரும் வழங்கலாயிற்று.

இவ்வினாயகர் சன்னதி  கமலைப் பராசக்திக்குத் தென் கிழக்கில் அமைந்துள்ளது.

திருவாரூர் திருக்கோயிலில் இருக்கும் பதினாறு விநாயகர்கள்..


Sunday, June 17, 2018

திருவாரூர் - பஞ்சக்ரோச ப்ரதக்ஷிணம்


ஸ்ரீஸ்காந்த புராணம் நாகர கண்டம்  கமலாலய க்ஷேத்ர மாஹாத்ம்யத்திற் சொல்லியுள்ளபடி திருவாரூர் ஸ்தலத்தை  பஞ்சக்ரோச ப்ரதக்ஷிணம் செய்யும் முறை..

கமலாலயத் திருக்குளத்தில் இருக்கும் 64 தீர்த்த கட்டங்களிலும் படிந்து,  ஆரூர் ஆதியை வணங்கி வலமாக .. 

கிழக்கில் கயா சீர்ஷம் என்னும் ராமகே (கேக்கரை), 
தெற்கில் தக்ஷிண கோகர்ணம் என்னும் புலிவலம் (வ்யாக்ர ப்ரதக்ஷிணம்), 
மேற்கில் க்ருஷ்ணமங்கள க்ஷேத்ரம் என்னும் திருக்கண்ண மங்கை , 
வடக்கில் உத்தர கோகர்ணம் என்னும் வண்டாம்பாலை  
(விறன்மிண்டர் கதையில்.. த்யாகேசர் தாண்டிக் குதித்தபடித் தாம்  திருவாரூர் எல்லைக்குள் வந்து விட்டதை "வந்தோம் இப்பாலே" என்று சொல்லிய  இடம்) ..

இப்படியாக வலம் வந்து திருவாரூர் அடைந்து  
அசலேசம், ஹாடகேசம், ஆனந்தேசம்,  சித்தீசம்,  வன்மீகர், வீதிவிடங்க த்யாகர், கமலாம்பிகை, அல்லியங்கோதை உள்ளிட்ட மூர்த்திகளை வணங்கி, அடியார்களுக்கு விதிப்படி தானங்களை அளித்து பஞ்சக்ரோச யாத்திரையைப்  பூர்த்தி  செய்ய வேண்டியது... 

எஜமானர்களின் திருவாணைப்படி  பூஜ்யஸ்ரீ ஓடாச்சேரி ஸ்வாமிகள் அவர்கள் இயன்றபோதெல்லாம் அடியவர்களைச் சேர்த்துக்கொண்டு  நாகர கண்டத்தைச் சொல்லியபடியே இப்படி வலம் வருவார்.. 

தன்னுடைய மாட்டைத் தேடிக்கொண்டு போன ஒருவன்..
தான்  அறியாமலே  சமத்காரபுரம் என்னும் இந்த நகரத்தின் பஞ்சக்ரோச  எல்லையைச் சுற்றி வந்ததாலேயே  பெரும் புண்ணியம் அடைந்து தனது அடுத்த  ஜன்மத்தில் மன்னனாகப் பிறந்தான்..

ஸ்ரீதூர்வாஸ மஹாமுனிவர் இங்கு வந்து...
பஞ்சக்ரோச எல்லைக்குள்ளாக  'ஸ்ரீபுரம்' என்னும் அழகிய நகரத்தை ஏற்படுத்தி, அதைச் சுற்றிலும் மஹாபத்மாடவியை அமைத்து,  அதனுள் ஸ்ரீகமலாம்பிகையை எழுந்தருளவைத்து  விதிப்படி  பூஜித்தனர் என்பது வரலாறு.. 

Thursday, June 7, 2018

ராமபத்ர ரா.. ரா..


இன்று  " ராமபத்ர ராரா" என்னும் ஸ்ரீபத்ராசல ராமதாசரின் கீர்த்தனையைக் கேட்க நேர்ந்தது... கீர்த்தனையைக் கேட்கும்போதே   பழைய நினைவுகள் மனதிற்குள் தோன்றலாயின...

அப்போது...
பூஜ்யஸ்ரீ புதுபெரியவாள் அவர்களின் திருவுளப்படி...  பூஜ்யஸ்ரீ பாலபெரியவாளை முதன்முதலாக  தஞ்சை ஜில்லாவிற்கு  அழைத்துவந்து  ஒவ்வொரு பெரிய நகரத்திலும்  அவர்களுக்குப் பட்டணப்ரவேசம் செய்துவைத்தார்கள் ஸ்ரீமடத்தின் சிஷ்யர்கள்... 

ஊருக்கு ஊர்  போட்டி போட்டுக்கொண்டு  மேன்மேலும்  சிறப்பாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.. 

முதலில் சிதம்பரம் .. 
அடுத்தது சீர்காழியில் .. 
நெப்பத்தூர் பாலு ஐயர்.. டாக்டர் கோதண்டராம ஐயர்..  தங்குடு டாக்டர், எஸ்டேட் முதலியார்  கடைக்கண் விநாயகநல்லூர் துரைராஜ பிள்ளை உள்ளிட்ட அந்த வட்டாரத்தில் மிகப்பிரபலமான பெரிய  மனிதர்கள் அடங்கிய வரவேற்புக் குழு ஐம்பது நாகஸ்வர வாத்யக்காரர்களை ஏற்பாடு செய்து பட்டணப்ரவேசம் விட்டார்கள்..   

ஊர்வலத்தின் நிறைவில் அருகில் வந்துகொண்டிருந்த ஆரூரனின்  தகப்பனாரைப் பார்த்த  பூஜ்யஸ்ரீ பாலபெரியவாள் அவர்கள் 'அடுத்த மூன்று  நாட்களில்  திருவாரூரில் கேம்ப்   ஏற்பாடாயிருக்கு போலிருக்கே.. அங்கே எவ்ளோ நாகஸ்வரம் வரப்போறது ?' என்று  விளையாட்டாகக் கேட்டார்கள்.. 
அதற்கு ' எல்லாம் பெரிவா அனுக்ரஹம்" என்று மட்டும் சொல்லிக்கொண்டார் ஆரூரனின்  தகப்பனார்...

அன்றிரவே சீர்காழியிலிருந்து திருவாரூர் திரும்பியாயிற்று .. வரும் வழியெங்கும் ' இடையில் இருக்கும் மூன்று நாட்களுக்குள் எப்படி சீர்காழியைத் தாண்டி  நம்ப ஊரில் ஏற்பாடு செய்வது ?" என்று கவலைப்பட்டுக் கொண்டே வந்தார்..

மறுநாள் காலை எட்டு மணி இருக்கும் .. திருவாரூர் கோயில் ப்ரதான நாகஸ்வரக்காரரான பாரிநாயனம் வித்வான் செல்வகணபதி பிள்ளை தற்செயலாக வீட்டுக்கு வந்தார் ..   

பூஜ்யஸ்ரீ ஆசார்யர்களின் திருவாரூர் விஜயத்தைப் பற்றிக் கேட்டதும்  " என்னால் இயன்ற அளவு எங்க மனுஷாளைக் கொண்டாந்துடறேன் " என்று மிகுந்த விநயத்துடன் சொல்லிச் சென்றார்.. 
அத்துடன் இந்த விஷயத்தை மறந்து விட்டு அடுத்த ஏற்பாடுகளை பார்க்கலாயிற்று..

மூன்றாவது நாள்...
பூஜ்யஸ்ரீஆசார்யர்களும் திருவாரூர் எல்லைக்குள் விஜயமானார்கள் ...
முதலில் ஸ்ரீத்யாகராஜஸ்வாமியை  தர்சித்துக்கொண்டு ஸ்ரீமாற்றுரைத்த விநாயகர் கோயிலில் பட்டண ப்ரவேசம் தொடங்கிற்று.. 
அதுவரையிலும் கமலாலயத்தின் படித்துறைகளில் ஆங்காங்கு இருந்து கொண்டு தங்கள் வாத்தியங்களை தயார் பண்ணிக் கொண்டிருந்த  நாகஸ்வர வித்வான்கள் தங்களது செட்டுகளுடன் விரைவாக அங்கு வந்து சேர்ந்து கொண்டனர்...அவர்களில் பலரும் வ்யாஸ பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஸ்ரீமடத்திற்கு ந்து வாசிக்கும் வழக்கம்  உடையவர்கள்..

முதலில் மல்லாரி வாசிக்கத்  தொடங்கினார் திருக்கோயில் வித்வான் செல்வகணபதி பிள்ளை..
அவ்வளவுதான்...
ஏராளமான நாகஸ்வர வித்வான்களின் மல்லாரி மற்றும் தவில் முழக்கம் கமலாயக் குளக்கரையில் பட்டு மேலக்கோபுரத்திலும் பெரிய கோயில் மதிலிலும் எதிரொலித்தது .. 
எத்தனை நாகஸ்வரக்காரர்கள்  வந்திருக்கிறார்கள் என்று எண்ணக்கூட முடியவில்லை.. அந்த அளவிற்கு மக்கள் கூட்டம்.. அவ்வளவு நெரிசல்... 

அருகிலிருந்த ஆரூரனின் தகப்பனாரை   சமிக்ஞையால் அழைத்த பூஜ்யஸ்ரீ பாலபெரியவாள்  புன்சிரிப்புடன் ... 
 "இங்கு வந்திருக்கும் வித்வான்கள் மொத்தம் எத்தனை பேர் ?" என்று கேட்டார்கள்.. 
அதுவரை வந்திருந்தவர்களை எண்ணிப்பார்க்காத அவரும் பணிவுடன் "இன்னும் எண்ணலே பெரிவா..எல்லாம் பெரிவா அனுக்ரஹம்" என்று சொன்னார்...

அன்று மட்டும்  தஞ்சாவூர் ஜில்லாவில் இருந்த பிரபல நாகஸ்வர வித்வான்கள் மொத்தம் 108 பேர்.. தவில் வித்வான்கள் மொத்தம் 216 பேர் ஆக மொத்தம் 324 பேர் பூஜ்யஸ்ரீ ஆசார்யாளின் திருவாரூர்  பட்டணப்ரவேசத்தில் கலந்து கொண்டு இசைமழை  பொழிந்தார்கள்..   தாளம், ச்ருதிப்பெட்டி, ஒத்து வாசித்தவர்களையும் உடன் வந்தவர்களையும் சேர்த்தால்   மொத்த கலைஞர்கள் 400 பேருக்கும் மேல் இருந்திருப்பார்கள்  

செல்வகணபதி பிள்ளை தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னதும்..  அவரவர்களும்  மற்றவர்களிடமும் சொல்லி அழைத்துக் கொண்டு அன்று  இத்தனை பேரும் ஒன்றாகத் திரண்டு   வந்திருக்கிறார்கள். 

வெகு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த மிக நீண்ட ஊர்வலம் நிறைவாக துர்காலயா சாலையிலிருக்கும் ஆரூரனின்  இல்லத்தை அடைய இரவு வெகு நேரமாயிற்று...

ஜாகைக்குள் ப்ரவேசமாகும் முன் " மங்களம் வாசித்து முடிச்சுடலாங்களா?" என்று கேட்டார் செல்வகணபதி பிள்ளை.. சற்று தொலைவிலிருந்தும்   பூஜ்யஸ்ரீ பால பெரியவாள்  அவர் கேட்டதைக்  கவனித்துவிட்டு   ஆரூரனைக்  கூப்பிட்டு... "'ராமபத்ர ரா...ரா'  வாசிச்ச பிற்பாடு மங்களம் வாசிக்கச் சொல்லு" என உத்தரவாயிற்று  .. 

எசமான் திருவுளக்குறிப்பையறிந்ததும் வித்வான்கள் இன்னும் விசேஷமாக அந்த கீர்த்தனையை விஸ்தாரமாக வாசித்து நிறைவு செய்தார்கள்.. 

அனைவருக்கும் பூஜ்யஸ்ரீ  பெரியவாள்  ப்ரஸாதம், ஸன்மானங்களையும் வழங்கி அருளினார்கள்...

அக்காலத்தில் திமிரி  நாகஸ்வரம் மட்டுமே ஸ்ரீமடத்தில்  வாசிக்கும் வழக்கம் இருந்தது.. அதேவிதமாக பாரி நாகஸ்வரம் மட்டுமே வாசிக்கப்படும் வழக்கம் திருவாரூரில் உள்ளது.. 

'மறுநாள் ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரீ ஸமேத ஸ்ரீசந்த்ரமௌலீச்வர ஸ்வாமியின் பூஜைக்கு திருவாரூர் ஸம்ப்ரதாயபடி பாரி நாகஸ்வரம்  வாசிக்கவேணும்' என்ற பூஜ்யஸ்ரீ
பாலபெரியவாளின் திருவுளப்பாங்கைத்
தெரிந்து கொண்ட செல்வகணபதி பிள்ளையும் அவ்வண்ணமே மூன்று காலங்களுக்கும் கொடுகொட்டியுடன் பாரி நாயனம் வாசித்து நிறைவு செய்தார்...

ராமபத்ர ரா.. ரா.. கீர்த்தனையைக் கேட்டு முடிப்பதற்குள் இத்தனை நிகழ்வுகளும் மனதிற்குள் மலர்ந்து விரிந்துவிட்டன... 

( பூஜ்யஸ்ரீ பாலபெரியவாள் அவர்களின் பொன்விழா ஆண்டையொட்டி எழுதப்பட்டது)
  

திருவாரூர்த் திருவீதிகள்


 'படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார் 
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் 
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய் 
நடந்த செந்தா மரையடி நாறுமால்
என பெரியபுராணம்  திருநகரச் சிறப்பில் பாடுகிறார் ஸ்ரீசேக்கிழார் ஸ்வாமிகள்.

ஸ்ரீத்யாகேசர், வன்தொண்டர் நம்பிஆரூரருக்காகப்  பரவை நாச்சியாரது திருமனைக்கு  தூது நடந்தபோது அவரின் திருவடித் தாமரைகள் தோய்ந்த வீதியே   'திருவடிப்போது நாறிய திருவீதி'(1) என்று வழங்கப்பட்டது..

இவ்விடம்  துர்க்கை அம்மன் சன்னதித்தெரு என வழங்கப்படுகிறது..இங்கு இருந்த  பரவையார் திருமனையே  தற்போது ஸ்ரீஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின்  திருக்கோயிலாக உள்ளது. 

திருவாரூரில் ஆழித்தேரோடும்  நான்கு திருவீதிகளில் ஒன்றான தெற்குவீதியை அணிமுடிநெடிய திருவீதி(2) எனவும், அதற்குத் தெற்கில்  இருப்பதை  பொன்பரப்பிய  திருவீதி(3) எனவும்,  அதற்கும் தெற்கில் இருக்கும் வீதியை புகழாபரணத்  திருவீதி(4) எனவும் கூறுவர்.. 

பொன்பரப்பிய  திருவீதியின் நடுவில் இருப்பது குமரக்கோட்டம் (5).. குமரக் கோட்டத்தின் கிழக்கில் இருக்கும் பகுதி தற்போது குமரக்கோயில் தெருவென்றும.. மேற்புறம் இருக்கும் தெரு செட்டித்தெரு (V.S,தெரு)வென்றும் வழங்கப்படுகிறது..  

புகழாபரணத்  திருவீதியின் தற்போதைய பெயர் காரைக்காட்டுத்தெரு ஆகும்...