Monday, November 28, 2016

ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள் : அக்டோபர் 1991 - திருவிசைநல்லூர் உத்ஸவம் ..


திருவிசைநல்லூர் ஸத்குரு  ஸ்ரீசிவன் ஸார்  அவர்களின் மனதிற்குகந்த ஸ்தலம்..  ஸ்ரீஸதாசிவ  ப்ரஹ்மேந்த்ர ஸரஸ்வதீ  ஸ்வாமிகள்   அவதரித்ததும் இங்குதான்..  தஞ்சையை ஆண்ட ஸாஹஜீ  போஜன் என்று புகழப்பட்ட ஷாஜி ராஜா மான்யமாக அளித்த அக்ரஹாரம் .. இவ்வரசனின் காலத்தில் தஞ்சை மண்டலத்தில்  அத்வைத ராஜ்யலக்ஷ்மீ பொலிந்திலங்கினாள் ..
ஷாஜி ராஜரின் சரித்திரத்தை நமக்கு சுவையுடன் அறிவிக்கிறது  ஸ்ரீஐயாவாள் அவர்கள் இயற்றிய ஸாஹேந்த்ர விலாஸம்  என்னும் நூல்..

ஸ்ரீஸார் அவர்களிடம் அடைக்கலமாகியிருந்த காலத்தில்   இயன்றபோதெல்லாம் திருவிசைநல்லூர் சென்று அங்குள்ள ஸ்ரீஐயாவாள் மடத்தில்..  ஸ்ரீஸார் அவர்கள் தனது ஏணிப்படிகளில் மாந்தர்கள் புஸ்தகத்தில் எழுதியுள்ள ஸ்ரீதர ஐயாவாள் அவர்களின் திவ்ய சரித்ரத்தைப் பாராயணம் செய்து விட்டு வருவது  ஆரூரனின் வழக்கம்..

ஸ்ரீஐயாவாள் சரித்திரத்தை எத்தனையோ பேர்  எழுதியிருப்பினும் ஸ்ரீஸார் அவர்களது வர்ணனம்  நேரில் காண்பது போலவேயிருக்கும்..  மனதை உருக்கிவிடும்.. ஒருமுறையாவது  அந்த புண்ய ஸ்தலத்தை தரிசிக்க வேணுமென்ற ஆவலை வாசிப்பவர்களின்  மனத்தில் தோற்றுவிக்கும்..

திருவிசைநல்லூர் கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்திற்கு  முதல் பத்ரிகை ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகளுக்குத்தான் ஸமர்ப்பிக்கப்படும்..அடுத்த பத்ரிகை  ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார்  அவர்களுக்கு திருவிசநல்லூர் மடத்து நிர்வாஹிகள் சார்பில் நேரில் வைக்கப்படும்.. பிறகுதான் மற்றவர்களுக்கெல்லாம் உத்ஸவ பத்ரிகை அனுப்பி வைக்கப்படும்.. 

1991ம் வருஷம்.. ஸ்ரீஐயாவாள் மடத்தில் நடைபெறும் கார்த்திகை அமாவாஸ்யை கங்காவதரண உத்ஸவ பத்ரிகையை ஸத்குரு ஸ்ரீஸார் அவர்களுக்கு  நேரில் சமர்ப்பிக்க வேண்டி உத்ஸவ  கமிட்டி முக்யஸ்தரான அவ்வூர்ப் பெரியவரான  ராயர் ஒருவர் வந்திருந்தார்.. 

திருவிசைநல்லூர் உத்ஸவமானதால்  என்னுள் இயல்பான ஒரு ஆர்வம் ஏற்பட்டது..  அவரை இருக்க வைத்து .. உபசரித்து .. பிறகு அவரை ஸ்ரீஸார் அவர்களிடம் ஆஜர்படுத்தினேன்.. 

ஸ்ரீஸார்..  அவரிடம் மிகுந்த ப்ரியத்துடன்  பல வருஷத்து விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.. அப்போதுதான் ஸ்ரீசார் அவர்களுக்கு திருவிசைநல்லூர் மடத்துடனும் .. ஊராருடனும்  இருந்த தொடர்பை அறிந்துகொண்டேன்..

ஸ்ரீஐயாவாள்  ஸ்ரீபரமேச்வராம்சம் .. அந்த மடத்தின்  சொத்தை அபகரித்தவர்கள் வாழ்ந்ததில்லை..  விகடம்ராமசுவாமி சாஸ்திரிகள் என்ற ஒரு மஹாமேதை  இந்த உத்ஸவத்தை  மேலும் விரிவாக்கி ப்ரபலப்படுத்தினார்.. இந்த மடத்தில்  பல காலமாக ஸ்த்ரீகள் பாடும்  வழக்கம் இல்லை..  என அதுவரை தெரியாத பல அரிய விஷயங்கள் அப்போது வெளிவந்தன.

பிற்பாடு .. ஸ்ரீபெரீவா அவர்கள் சம்பந்தமான ஒரு ஆச்சர்யமான நிகழ்வை ராயர் சொன்னார்..

" சில வருஷங்களுக்கு முன்னால்  தஞ்சாவூர் ப்ரதேசத்தில்  ஐப்பசியில் பருவ மழை பெய்யாது பொய்த்தது.. மேட்டூர் ஜலமும் வரவில்லை..  காவேரியில் சுத்தமாக வரத்து இல்லை.. ஸ்ரீஐயாவாள்  மடத்தின் பின்புறம் கங்கை ஆவிர்பவிக்கும் கிணறும்  வறண்டு போனது..  

ஸ்ரீஐயாவாள்  மடத்தின்  கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவம்  அந்த வருஷம்   நடக்குமா என்ற பயம் வந்து விட்டது.. 

உத்ஸவ பத்ரிகையை  எடுத்துக் கொண்டு போய் ஸ்ரீபெரிவாளின் ஸன்னதியில் ஸமர்ப்பித்தோம்.. மெதுவாக அங்குள்ள பிரச்னை பற்றிச் சொன்னோம்..  அப்படியே சில நிமிஷங்கள் கழிந்தன ..

ஸ்ரீபெரிவா சற்றுநேரம் மோனமாக இருந்து விட்டு .. சைகையால் அருகிலிருந்த  ஸ்ரீமடத்து அன்பரை அழைத்து  ஒரு பெரிய செப்புக் குடத்தில் கங்கா ஜலத்தை நிரப்பி வரச்சொன்னார்கள்..  அங்கு கங்கா ஜலம் இருப்பது பற்றி எங்களுக்கு ஏதும் அதற்கு முன்னால்  தெரியாது.. அந்த அன்பரும் அவ்வண்ணமே கங்கா ஜாலம் நிரம்பிய ஒரு பெரிய  செப்புக் குடத்தைத்  தூக்கி வந்து  ஸ்ரீபெரீவாளின் திருமுன்னர்க் கொண்டு வைத்தார்.. 

உடனே ஸ்ரீபெரீவா  எங்களிடம் "இந்தக் குடத்தில் இருக்கும் கங்கா ஜலத்தை ஜாக்ரதையாகத் திருவிசைநல்லூருக்குக்  கொண்டுபோய் வையுங்கள்.. மழை வராவிட்டால்  ஸ்ரீஐயாவாள்  மடத்தில் இருக்கும் கங்கை ஆவிர்பவிக்கும் கிணற்றில்  கார்த்திகை அமாவாஸ்யைக்கு முன்னால் சேர்த்து விடுங்கள் .. ! " என்று அபயம் காட்டி எங்களுக்கு  ப்ரஸாதம் அளித்து அனுப்பி வைத்தார்கள்.. 

திருவிசைநல்லூருக்குத் திரும்பினோம்.. 

ஸ்ரீபெரீவாளின் வாக்கு என்றும் பொய்க்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தபோதிலும் .. அப்போதிருந்த வறட்சியான கால நிலை எங்களை ஸஞ்சலத்தில்  ஆழ்த்தியபடியே இருந்தது.. 

உத்ஸவத்திற்கு  இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையிலும் மழை பெய்யவே இல்லை .. காவேரியில் ப்ரவாஹமேயில்லை..  வயல் வெளிகளும் காய்ந்து வெடித்துப் போயிருந்தன..ஸ்ரீஐயாவாள்  மடத்துக் கிணறும் சுத்தமாகக் காய்ந்துபோயிருந்தது..

உத்ஸவ கமிட்டி மீட்டிங் போட்டோம்.. என்ன செய்வது என்று கலந்து பேச ஆரம்பித்தோம்.. எல்லோரும் ஒருமித்ததொரு முடிவுக்கு வந்தோம் .. 

"ஸ்ரீபெரீவா  அவர்களின் உத்தரவு ப்ரகாரம்  செப்புக் குடத்திலிருந்த கங்கா ஜலத்தைக்  கிணற்றில் ஊற்றிவிடுவோம்.. அப்புறமாக அதைக் கொஞ்சமாக எடுத்து அனைவருக்கும் ப்ரோக்ஷணம் செய்து விட  வேண்டியதுதான் " என்று தீர்மானித்து அவ்விதமே கங்கா ஜலத்தைக்  கிணற்றில் சேர்த்தோம்.. 

அடுத்து நடந்ததுதான் ஆச்சர்யம் .. 

கார்த்திகை அமாவாஸ்யை தினத்தில் ஸ்ரீஐயாவாள் அவர்களின் ஸ்தோத்ரத்தைக் கேட்டவுடன்  கங்கை அவரது இல்லத்தின் பின்புறமிருந்த கிணற்றில் ஆவிர்பவித்துப்  பெருகி ஊரெங்கும் காணும்படி வழிந்தோடினாள் என்பது சரித்ரம் ..   அதை மீண்டும் காட்டும்படியாக ..

கார்த்திகை அமாவாஸ்யைக்கு முதல் நாள் .. செப்புக் குடத்திலிருந்த ஸ்ரீபெரீவா அனுக்ரஹித்திருந்த கங்கையைக் கிணற்றில் சேர்த்த சில மணி நேரத்தில்..  தொடங்கியது  பெரும் மழை.. விடிய விடிய விடாது பெய்து ஊரையே வெள்ளத்தில்  மிதக்க வைத்தது ..   

ஸ்ரீஐயாவாள் அவர்கள் கங்கையை வரவழைத்தது போல்  மடத்திலிருந்த கிணற்றில் ஜலம் பெருகியது.. 

அமாவாஸ்யை  அன்று விடியற்காலை   கிணற்றின்  கைப்பிடிச் சுவற்றிற்கு மேல் ஜலம் பெருகி வழிந்தோடியதைக் கண்டோர் அதிசயித்தனர்.. அதேவிதமாகக் காவேரியிலும் கால் வைக்கக்கூட  முடியாத அளவிற்கு ப்ரவாஹம் மிக  அதிகமாக இருந்தது..  

பல நூறு பக்த ஜனங்கள் அன்று மடத்திலிருந்த கிணற்றில் ஸ்நானம் செய்தும் வழிபட்டனர்.. 

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஸ்ரீபெரிவாளைத் தரிசிக்கச் சென்றோம்..

திருவிசைநல்லூர் மடத்தார் வந்திருக்கும் விபரம் அவர்கள் ஸந்நிதானத்தில் தெரிவிக்கப்பட்டது..  

 உடனே ..  ஸ்ரீபெரீவா அவர்கள்  புன்முறுவலுடன்..    

" திருவிசநல்லூர் மடத்து   கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்துக்கு,, எப்போதும் போல ,,  இந்த வருஷமும் கங்கை வந்தாளா ?. என்று எங்களை பார்த்துக்  கேட்டதை  என்னிக்கும் மறக்க முடியாது!"  என்று முடித்தார் ராவ்ஜீ ..





அடுத்து அவர் சொன்னது ...







Thursday, November 3, 2016

ஸ்வாமிநாதன்... 2




தங்கக் கொடிமரத்தின் அருகில் வந்ததும் "ஸார்.. ஸ்வாமி அணிந்திருந்த தங்கக் கோவணத்த பாத்தீங்களா..? என்று கேட்டார் உடையார் தம்பி...
கேட்டவர் ஸ்ரீபெரீவா அவர்களைப் பற்றித் தொடர்ந்தார்... 

"டெல்லிலே உத்தர ஸ்வாமிமலை கோவில் கட்டணும்னு அங்கிருந்த தமிழர்கள்..  அரசியல் முக்கியஸ்தர்கள்  எல்லோருமே சேர்ந்து தீர்மானிச்சு.. பெரீயவங்ககிட்டே வந்து அதைத் தெரிவிச்சுக்கிட்டாங்க.. 

மூணு வருஷத்துல மஹாபலிபுரம் ஸ்தபதி மூலமா ஸ்வாமிமலை முருகன் மாதிரி விக்ரஹம் தயார் பண்ணி அப்போ காஞ்சிபுரத்தில் இருந்த பெரீயவங்களிடம் கொண்டு வந்து காண்பிச்சுருக்காங்க..

சிலையருகில் வந்து நின்னு சற்று நேரம் அதை உற்றுப் பார்த்த பெரீயவங்க .. சிலையின் சிரசுப் பகுதியைத்    தொட்டுக் காட்டி - 


"ஸ்வாமிநாத சுவாமிக்கு இருக்கறா  மாதிரி.. சிகை (குடுமி) 
அமைப்பு  இந்த விக்ரஹத்துக்கு இருக்கோ பாரு?" 

- அப்டின்னு ஸ்தபதியைப் பார்த்து உத்தரவாச்சாம்.. 

அப்போதுதான் ஸ்தபதிக்கு ஸ்வாமிநாத சுவாமிக்கு சிரசின் மேற்புறம் இருக்கும் சோழிய முன்குடுமி அமைப்பு மாதிரி தான் வடித்த சிலையில் வைக்கவில்லை என்பது தோன்றியது..எவ்வளவோ பார்த்துப் பார்த்து செய்தும் இரு சிலைகளுக்குள்ளும் ஒரு வித்யாசம் வந்துடுத்தேன்னு ஸ்தபதிக்கு மனசுக்குள் குழப்பம் ஏற்பட்டுப் போச்சு .. 

உடனே பெரீயவங்க புன்முறுவலுடன் -

 "ஸ்வாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு இப்டி ஒரு திருவுள்ளம் இருக்கு போல இருக்கு.. அவர் தெற்கில் இருக்கார் .. இவர்.. வடக்கில் .. உத்தர ஸ்வாமிமலையில் இருக்கப் போறார் .. அதனால் அந்தப்பக்கத்து ஆசாரப்படியே அமையட்டும்னு   ரெண்டு விக்ரஹங்களும் நுணுக்கமான ஒரு வித்யாஸம் இருக்கறா மாதிரிப் பண்ணிருக்கார்..அப்டியே இருக்கட்டும்!  " 

 - என்று சொல்லி சுவாமிக்குத் தன் திருக்கரங்களாலேயே விபூதி அபிஷேகம் பண்ணி, பிற்பாடு  ஸ்தபதிக்குரிய பஹுமானங்களையும் செய்து அனுப்பிச்சதா என் தாத்தா சுவாமிநாத உடையார் என்னிடம் சொல்லிருக்காங்க.. " என்று சொன்னார்..

சென்ற 2000மாவது வருஷத்துல.. எங்க தகப்பனார் ராஜகோபால உடையார் தலைமையில் திருப்பணி நடந்து கும்பாபிஷேகம் செய்வதற்குச் சில நாட்கள் இருக்கும்போது  கோயிலுக்கு வந்து திருப்பணி வேலைகளைத் துரிதப்படுத்திக்கொண்டிருந்தார் .. 

அப்போது அங்கு வந்த பெரிய சிவாசாரியார் என் தகப்பனாரை சன்னதிக்குள் அழைத்துச் சென்று   சுவாமிநாதசுவாமியின் இடுப்பில் சார்த்தியிருந்த வெள்ளிக் கௌபீனம்  மிகவும் நாள்பட்டதாகையால் கருத்தும்.. நெளிந்தும் போயிருந்ததைக் காண்பித்து  உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேணுமென்று வேண்டிக்கொண்டார்.

 "இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையில் எப்படி மாற்று ஏற்பாடு செய்வது..?" என்று யோசித்தபடி என் தகப்பனார்  மலையிலிருந்து இறங்கிக் கீழிருக்கும்  திருக்கோயில் அலுவலத்துக்குள்  வந்து அமர்ந்தார் .. 

"நான்கு நாட்கள்தானே இன்னும் இருக்கு.. அதற்குள் எப்படி ஏற்பாடு செய்வது?" என்று என்னைப்  பார்த்துக் கேட்டார்.

அதேசமயத்தில் திருக்கோயில் அலுவலகத் தொலைபேசியில் என் தகப்பனாருக்கு ஒரு அழைப்பு வந்தது..  காஞ்சி ஸ்ரீமடத்திலிருந்து முக்கியமான மனுஷாள் அப்பாவிடம் பேசவேணுமென்று  எங்கள் இல்லத்திற்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள்.. அப்பா அவர்களிடம் பேசினார் .. 

விபரம் இதுதான்.. 

"ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமி திருமேனியில் எப்போதும் இருக்கறா  மாதிரி ஸ்ரீமடத்திலிருந்து  ஒரு ஆபரணம்  சார்த்த வேணும்.. அதுக்காக  விசேஷமா.. கால் கிலோ எடைக்கு,  புதுசாக  ஸ்வர்ணத்திலே   ஒரு கௌபீனம் செய்து.. ஸ்ரீமடத்தில் இப்போ ரெடியா இருக்கு .. நம்ப தண்ணீர்க்குன்னம் உடையார்தான் அங்கு கோவில்  திருப்பணியை முன்னாடி நின்னு செய்யறார்.. அதனால அவர்கிட்டேயும், சிவாசார்யாள்கிட்டேயும் ஸ்ரீமடத்தின் சார்பில் ஸ்வாமிக்கு ஸ்வர்ண கௌபீனம்  சார்த்தற விஷயத்தைத் தெரிவிக்கணும் என்பதான ஸ்ரீபுதுப்பெரியவாளின்   ஆக்ஞை  விபரத்தை  தங்களிடம் சொல்வதற்காக வந்தோம் !"  

என்று ஸ்ரீமடத்து அன்பர்கள் என் தந்தையாரிடம் தொலைபேசியில் தெரிவித்தனர். 

 " பெரீயவங்க உத்தரவாச்சுன்னா  அது ஸ்வாமிநாதஸ்வாமியின் 
உத்தரவுதான் .. அப்படியே செய்துறலாம்னு எங்க பதிலை 
மஹாசந்நிதானத்தில தெரிவிச்சுடுங்க! " 

என்று பதிலளித்தார் என் தந்தை..

ஸ்ரீபுதுப்பெரியவர்களும்,  ஸ்ரீமடத்துப் பரிவாரங்களுடன் முன்னதாகவே ஸ்வாமிமலைக்கு விஜயம் செய்து ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியின் கும்பாபிஷேகத்தை விமர்சையாக நடத்திவைத்தார்கள். ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமிக்கு ஸ்ரீமடத்திலிருந்து ஸமர்ப்பிக்கப்பட்ட  ஸ்வர்ண கௌபீனமும் அவர்கள் திருமுன்னிலையில்  சார்த்தப்பட்டு விசேஷ பூஜைகளும் நடந்தேறின." என்று சொல்லி முடித்தார் உடையார் தம்பி.