Wednesday, September 12, 2018

காணாபத்யம் போற்றும் கமலை


கமலாலயத் திருக்குளத்தின் ஈசான்ய முலையில் வீற்றிருக்கும் மாற்றுரைத்த விநாயகர் ..
மாற்றுரைத்து தங்கத்தின் மதிப்பைக் காட்டிய பிள்ளையார் ... இவரை " ஸ்வர்ணாகர்ஷண கணபதி" என்று போற்றுகிறார் ஸ்ரீதீக்ஷிதர்

ஸ்ரீத்யாகேசர் அருளும் ஆரூர்ப் பூங்கோயிலின் வழிபாடு  ஸ்ரீவல்லபா கணபதியிடத்தினின்று தொடங்குவதும்.. ஸ்ரீகமலைப்பராசக்தியின் வழிபாடு  ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியிடமிருந்து ஆரம்பித்தலும் வெறெந்தத்  தலத்திலும் இல்லாத சிறப்பு..

முதற் பிரகாரத்திலிருக்கும் ஸ்ரீவாதாபி கணபதியை முன்னொரு காலத்தில் சிலர் கலிங்க தேசம் வரைக்கும் எடுத்துப்போனதும்..
அப்போது வாஹனத்தின் அச்சு முறிந்ததும்..
பிற்பாடு வாதாபி வாரணம் ஆரூருக்கே திரும்ப வந்து சேர்ந்ததும் சரித்திரத்தில் காண்பன..

ஸ்ரீஐங்கலக்காசு விநாயகர்
பூங்கோயிலின் எழுந்தருளும் கணபதியார் திருமேனி..
ஐந்து கலம் அளவிற்கான காசுகளைக் கொண்டு உருக்கித்  தூயதாக வார்க்கப்பட்ட விக்ரஹம் என்பர்..
குதிரைக்காரன் கலாபத்தில் ஆரூர்ப் பெருமான் த்யாகர் உட்பட அனைத்து உத்சவ மூர்த்திகளும் பாதுகாப்பிற்காக வேறிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இவரைக் கிழக்கில் கடற்கரையோரம் கொண்டு செல்லும்போது அந்நியர் அச்சுறுத்தலால் அடையாளமிட்டுக் கடலினுள் இட்டனர்.. அப்போது தலைகீழாகக் கடலினுள் சரிந்தபோது மேற்கை பாசம்.. அடித்தரையில் பட்டுச் சற்றே வளைந்து போனதை இன்றும் காணலாம்..

மூலாதாரசக்ரமாகிய நான்கிதழ்த் தாமரையில் ஐந்தலையரவின் மீது நிருத்தமிடும் ஸ்ரீமூலாதார கணபதி... திருவாரூரன்றி..   உலகில் வேறெங்கும் காணமுடியாதவர்.
"ஸ்ரீமூலாதாரசக்ரவிநாயக" என்னும் ஸ்ரீராகக்ருதியில் இந்த மூர்த்தியின் பல சிறப்புகளையும்  குறிப்பிடுகிறார் ஸ்ரீதீக்ஷிதர்..


ஹேரம்ப கணபதி 
பஞ்சமுக கணபதி எனவும் அழைக்கப்படுபவர்..
வாதாபி விநாயகரின் அருகில் இருக்கும் மூர்த்தி...
இவரைப் போற்றி மலஹரி ராகத்தில் "பஞ்சமாதங்கமுககணபதிநா" என்றும் தொடங்கும்  கீர்த்தனம் ஒன்றைச் செய்திருக்கிறார் தீக்ஷிதர்..
பஞ்சமுகப் பிள்ளையாரின் (த்யான ச்லோகத்தின்படியான) வடிவமைப்பு அப்படியே இந்த க்ருதியில் பாடப்பெற்றிருப்பது மிகவும் சிறப்பானதாகும்..

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி...
ஸ்ரீவித்யை வழிபாட்டில் முதன்மையான மூர்த்தி.. ஆரூர் உள்ளிட்ட  மிகச்சில க்ஷேத்ரங்களில் மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும்..

இவரது வழிபாடு மிகவும் குஹ்யமானது..
மிகச் சிறந்த பலன்களை அதிசீக்ரத்தில் தரவல்லது.. ஆனால் தற்போதைய காலச்சூழலில் முறையற்ற உபாஸனை அபாயகரமானதெனவும் பெரியோர் எச்சரிப்பதுண்டு..

(திருவாரூரில் ஸ்ரீகமலாம்பிகைக்கு  ஆக்னேயத்தில் இருக்கும் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியைத் தரிசிக்கும் மந்த்ரஸாதகர்கள் ஒரு சிலர்  அக்ஷரபீடத்தருகில் அமர்ந்து திவ்ய மந்த்ரங்களை ஜபம் செய்வதையும் எனது சிறு பிராயத்தில் கண்டிருக்கிறேன்..)

தீக்ஷிதரவர்களின் "உச்சிஷ்டகணபதிம்" கீர்த்தனையில் இவரின் ஸ்வரூபம், மந்த்ரம், உபாஸிப்போர் அடையும் பலன்கள்.. அழகுறத் தரப்பட்டுள்ளன.

उच्छिष्टगणपतौ भक्तिं
कृत्वोन्नतपदवीं व्रज रे हृदय |

सच्छब्दवाच्यस्वरूपिणि शबलीकृतब्रह्मस्वरूपिणि |
चिच्छक्तिस्फूर्तिस्वरूपिणि चिदानन्दना[द]थस्वरूपिणि ||

नारीयोनिमुखास्वादने नग्नरामक्रियामोदने |
भेरीवीणावेणुवादने भेदाज्ञानध्वान्तसूदने ||

शौरिनुते नतगुरुगुहमदने
सूरिजनयुतश्रीपुरसदने |
दूरीकृतमहादुरितकदने
गौरीशनन्दने गजवदने ||

இரண்டாம் பிரகாரத்தின் கிழக்குப்புறச்சுவரில் காணும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய சாசனம் இது..

தைப்பூசத்திருவிழாவன்று பெருமான் ஸ்ரீவீதிவிடங்கதேவர் ஆட்டத்துவெளியில் திருஉலா வரும்போது..
ஸ்ரீமாஹேச்வரர் விண்ணப்பம் செய்தபடி இறைவன் அடியவரான  வீரவித்யாதர பல்லவராயர் என்பார் வேண்ட..
அதையேற்ற ஈசனும்...
தீர்த்தக்குளத்தின் (கமலாலயம்) மேற்புறமிருக்கும் தமது பிள்ளையாகிய திக்கு நிறைந்த விநாயகப் பிள்ளையாருக்கு அர்ச்சனைக்காகவும், திருவமுதுக்காகவும்   வேண்டுவனவற்றை அளிக்கத் திருவாய் மலர்ந்தருளியது பற்றிய கல்வெட்டு இது..

இதில் குறிப்பிடப்படும் திக்கு நிறைந்த விநாயகப் பிள்ளையார் தற்போது கமலாயத் திருக்குளத்திற்குத் தென்மேற்கில் "கூத்தாடும் பிள்ளையார்" என்ற பெயருடன் அழகுறத் திகழ்கின்றார்..

ஸ்வேதவிநாயகர்...

ஸ்ரீஸ்காந்தபுராணத்தின் ஒரு பகுதியான நாகரகாண்டம் கமலாலய க்ஷேத்ர மாஹாத்ம்யத்தில்  நளசக்ரவர்த்திக்கு சனீச்வரனால்  ஏற்பட்ட  உபாதை தீர அவர் ஸ்நானம் செய்ததாகக் குறிப்பிடப்படும் நளதீர்த்தக் குளத்தின் வாயு திக்கில் இருக்கும் பிள்ளையார் இவர்..
வெள்ளைக் கல்லால் ஆன மூர்த்தி..

ஓடம்போக்கியாற்றிலிருந்து சாலைக்காரத்தெரு வழியாகப் பாய்ந்த ஓடையொன்றின் தென்கரையில் அமர்ந்திருக்கும்  இவர்க்கு "ஓடைக்கரைப் பிள்ளையார்" என்ற பெயர் ஏற்பட்டு அதுவே பிற்பாடு ஓட்டைப்பிள்ளையார் என வழங்கலாயிற்று.. அதனால் நள தீர்த்தமும் தற்போது ஓட்டைக்குளம்  என்றே அழைக்கப்படுகிறது,..

நளதீர்த்த ஸ்நானம்... சர்மநோயைப் போக்கும்  என்பது புராணங்களில் கண்டது...

அருகிலிருக்கும், நளேச்வரர் திருக்கோயிலில் உள்ள  பல்லவர் காலத்திய மாத்ருகணத்தொகுதியில் இவரும் ஒருவராக இருந்திருக்கக் கூடும்...

கமலையில் இருக்கும் கணபதிகளின் எண்ணிக்கை... மொத்தம் ஐநூறு.. வேறெந்த தலத்துக்கும் இந்தப் பெருமை கிடையாது..

திருவாரூரின் தென்கிழக்கில்  கபிலநதிக்குத் தெற்கில் உள்ள பகுதி... விஜயபுரம்..
ஸ்ரீநீலோத்பலாம்பிகையின் அருகில் குழந்தை ஸ்கந்தனைத் தனது  தோளில் சுமந்திருக்கும் அம்பிகையின் சேடி "விஜயை" என்ற குள்ளவடிவுடையோள்..
விஜயை  வழிபட்டதால் "விஜயபுரம்" என்ற பெயர் உண்டாயிற்று என்பார் உ.வே.சா.

கமலையைக் காத்தருளும் கணபதிகளில் ஐநூறாமவர் விஜயபுரத்தில் இருக்கிறார்.
இவருக்கும் "ஐநூற்றுப்பிள்ளையார்" என்றே பெயர் வழங்குவது குறிப்பிடத்தக்கது...


நடுக்கம் தீர்த்த வினாயகர்...

பராசக்தி  விராட்புருஷனைத் தனது பீடாஸனமாக்கி அவனது ஹ்ருதய கமலத்தில் அமர்ந்ததால் ஸ்ரீகமலாம்பிகை என்ற பெயர் உண்டாயிற்று.

அப்போது அம்பிகையின் திருமேனியில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டபோது..அதைத் தீர்க்க ஸ்ரீவினாயகர் உற்பத்தியானார். அன்னையின் மடியிலமர்ந்தார்.. நடுக்கமும் நின்றது..

வினாயகருக்கு " நடுக்கம் தீர்த்த கணபதி" என்ற பெயரும் வழங்கலாயிற்று.

இவ்வினாயகர் சன்னதி  கமலைப் பராசக்திக்குத் தென் கிழக்கில் அமைந்துள்ளது.

திருவாரூர் திருக்கோயிலில் இருக்கும் பதினாறு விநாயகர்கள்..










No comments:

Post a Comment