Thursday, September 24, 2015

சங்கர நாராயணீ ...




" தாத்தா.. எனக்கு சங்கர நாராயணீன்னு ஏன் இவ்ளோ நீ..ள..மா பேர் வெச்சே..?.. எல்லாருக்கும் ஸ்டைலா ரெண்டெழுத்திலே சின்ன சின்னதா பேர் இருக்கே.." ஒருநாள் தாத்தாவிடம் மருகினாள் பேத்தி...

" அப்டில்லாம் சொல்லக்கூடாதும்மா.. உனக்கு பேர் வெச்சதே பெரீவா அனுக்ரஹத்னாலதான்.. " என விஸ்தாரமாக கதையைச் சொல்ல ஆரம்பித்தார் தாத்தா...

திருவாரூரிலிருந்து ஸ்ரீமடத்தின் அன்பர்கள் சிலருடன் ஸ்ரீபெரீவாளைத் தரிசிக்கச் சென்றிருந்தார் தாத்தா (நெம்மேலி ஆடிட்டர் வெங்கட்ராமையர்)...

எப்போதுமே ஸ்ரீகாமகோடி ஆசார்யாளைத் தரிசனம் பண்ணும்போது சில ஸம்ப்ரதாயங்களை பின்பற்ற வேணும் என்பார் தாத்தா..

" ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம் ராஜ ஸம்ஸ்தானத்துக்கும் மேல்..! ஆகையினால் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளுக்கு நேர் எதிரில் நிற்கக்கூடாது.. ஸ்ரீயவாளிடம் நெருங்கிப் பேசக்கூடாது.." என்பார்...

தரிசனம் செய்யப்போகும்போது அவர்களின் அருகாமையில் செல்லாது சிறிது தூரத்தில் ஓர் ஓரமாக இரண்டு கைகளையும் சிரத்தின் மேல் கூப்பிக் கொண்டுதான் நிற்பார்.

ஸ்ரீபெரீவாளின் திருக்கண் வீக்ஷண்யம் பட்டவுடன் படபடவென்று கன்னத்தில் போட்டுகொண்டு நான்கு முறை சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பார்..

ஸ்ரீபெரீவாளிடம் சட்டென்று எதையும் பேசிவிட மாட்டார்.. ஸ்ரீயவாள் ஏதும் உத்தரவு பண்ணும் வரை அருகில் செல்லாது வாய் பொத்திக் காத்திருப்பார் ..

"அவாள் கண்ணால் சொல்வதைக் கண்ணால் நாம் புரிந்து கொள்ளணும்.. அபூர்வமாக சில சமயங்களில், தம் அடிமையாயிருப்போருக்கு தனது ஹ்ருதயத்தைத் தொட்டுக்காட்டி ஆசீர்வாதிப்பார்கள் .. அதன் சூக்ஷ்மத்தை தெரிந்து கொள்ளணும் " என்பார்..

" ஸ்ரீயவாள் தராமல் ப்ரஸாதத்திற்குக் கை நீட்டக்கூடாது .. ப்ரஸாதம் வேணுமென்று வாய் விட்டும் கேட்கக் கூடாது.. எதை எப்போது நமக்கு தரணும்னு அவாளுக்குத் தெரியும் " என்றே என்னிடம் சொல்லுவார்..

1970 ஜனவரி மாசம் 1ம் தேதி, ஸ்ரீமடத்தின் அன்பர்களுடன் ஸ்ரீபெரீவாளைத் தரிசிக்கச் சென்றார் தாத்தா...

அன்பர்கள் அனைவர்களின் க்ஷேம லாபங்களை கேட்டுகொண்டு, அவர்களின் அந்தரங்கமான பக்தி ச்ரத்தை கண்டு ஸந்தோஷித்து ஸ்ரீபெரீவாள் பரமானுக்ரஹம் பண்ணினார்கள் ..

ஸ்ரீபெரீவாள் திருவுளக்குறிப்பின்படி அன்பர்கள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து ஸ்ரீபெரீவாளிடம் அனுக்ரஹ ப்ரஸாதம் பெற்றுக் கொண்டனர்..

...தாத்தாவுக்கு மட்டும் ப்ரஸாதம் தரவில்லை..

தாத்தாவைத் தன் திருக்கண்களால் நோக்கி தம் ஹ்ருதயத்தைத் தொட்டுக்காட்டி" நாராயணா.. நாராயணா.." என்று மட்டும் சொல்லி தலையை சற்று அசைத்து கிளம்ப உத்தரவாயிற்று.....

சற்று தள்ளி, சிரத்தின் மேல் கரம் குவித்தபடி இருந்த தாத்தா ஸ்ரீபெரீவாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து திரும்பினார்..

" இவருக்கு மட்டும் ஏன் ஸ்ரீபெரீவா ப்ரஸாதம் தரலே" என்று.. கூட வந்தவர்களுக்குக் குழப்பம்..

"ஸ்ரீயவாள் என்ன பண்ணினாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்.. ஆனா அதக் கேக்கற யோக்யதையும் உரிமையும் சிஷ்யாளுக்கு கிடையாது " என்று அவர்கள் வாயை அடைத்துவிட்டார் தாத்தா..

ஊருக்குத் திரும்பி மோட்டார் வண்டியில் கூட வந்தவர்களை அவரவர்கள் வீட்டருகில் இறக்கி விட்டுவிட்டு சாவகாசமாக ஆத்துக்கு வந்து சேர்ந்தார் ...

ஆத்து வாசலிலேயே தாத்தாவுக்கு நல்ல சேதி காத்திருந்தது ..

.. ஸ்ரீபெரீவாளை தரிசித்த தினம்.. ஜனவரி ஒண்ணாம் தேதியன்று தாத்தாவுக்கு இங்கே திருவாரூரில் பேத்தி பிறந்திருக்கிறாள் ..

ஸ்ரீபெரீவா ஸன்னதியில் தாத்தா இருந்த நேரத்தில்.. பேத்தி பிறந்து வ்ருத்தி தீட்டு வந்துவிட்டதால் தன்னைக் கிட்டத்தில் வரச் சொல்லி பிரசாதம் தராமல் ஸ்ரீபெரீவா " நாராயணா.. நாராயணா.." என்றபடி தலையசைத்துக் குறிப்பால் அனுக்ரஹம் பண்ணினது தாத்தாவுக்குப் புரிந்தது ...

" அன்னிக்கு ஸ்ரீபெரீவா, ' நாராயணா.. நாராயணா' ன்னு அனுக்ரஹம் பண்ணி நீ பிறந்ததுனாலதான் உனக்கு சங்கர நாராயணீன்னு பேர்ம்மா .. மத்தவா பேர் மாதிரி இது சாதாரணப் பேரில்லே ! "என்று கதையை முடித்தார் தாத்தா..


ஸ்ரீராமநாம சம்பந்தம்..!



அன்று விடியற்காலை ஸ்ரீமடத்தில்.. ஸ்ரீபெரீவா சன்னதியின் முன்புறம் பக்தர்கள் விஸ்வரூப தர்சனத்திற்காகக் காத்திருக்கிறார்கள்..

மேனாவின் கதவு மெல்லத் திறக்கிறது.. பக்தர்களிடம் பரபரப்பு.. உற்சாகம்.. அனைவரும் தலையாரக் கும்பிட்டு பன்முறை நமஸ்கரிக்கின்றார்கள்..

ஸ்ரீபெரீவாளின் அருகில் அணுக்கத் தொண்டர்  ப்ரம்மஸ்ரீ வேதபுரி சாஸ்த்ரிகள்.. அன்றைய தினப் பஞ்சாங்கம் வாசிக்கிறார்..

ஸ்ரீபெரிவா பக்தர் கூட்டத்தின்மீது திருக்கண் சார்த்துகிறார்கள்.  எல்லோரும் படபடவென்று கன்னத்தில் போட்டுக்கொள்ளுகின்றனர்...

ஸ்ரீபெரிவா : (மெல்லிய குரலில் ப்ரம்மஸ்ரீ வேதபுரி சாஸ்த்ரிகளிடம்)
“இங்கே இருக்கறவாளில் எத்தனை பேருக்கு அவாளின் பேரில் ஸ்ரீராமருடைய சம்பந்தம் இருக்குன்னு கேளு.”
.
ப்ரம்மஸ்ரீ : (திரும்பி பக்தர்களை பார்த்து) “ இங்கே இருக்கறவாளில் எத்தனை பேருக்கு அவாளின் பேரில் ராமர் சம்பந்தம் இருக்குன்னு கேக்கச்சொல்லி பெரீவா உத்தரவு.. ஒவ்வொருத்தரா சொல்லுங்கோ..”

உடன் அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக தத்தம் பெயர்களைச் சொல்லுகிறார்கள்.. 

ராமஸ்வாமி, ராமக்ருஷ்ணன், ஸ்ரீராமன், ராமச்சந்திரன். ராமநாதன், ராமமூர்த்தி..“ என்று பெயர் வரிசை நீண்டு கொண்டே போகிறது...

என்ன மாயமோ..” அத்தனை பேரும் ஆச்சர்யத்துடன் பேச்சின்றி நிற்கின்றார்கள்.

கூடியிருந்தவர்கள் அத்தனை பேர் பெயர்களிலும் ஸ்ரீராம சம்பந்தம் இருக்கிறது.. அங்கிருந்த ஒரு பையனைத் தவிர...   

ப்ரம்மஸ்ரீ :  “ உம் பேர் சொல்லுப்பா”

பையன் தன் பெயரைச் சொல்லுகிறான்.. அந்தப் பெயரில் ஸ்ரீராம சம்பந்தம் இல்லை..

ஸ்ரீபெரிவா : “ எல்லார் பேரிலுமா ஸ்ரீராம சம்பந்தம் இருக்கு ?”

ப்ரம்மஸ்ரீ : “ ஒரு பையனைத் தவிர எல்லார் பேரிலுமே ஸ்ரீராம சம்பந்தம் இருக்கு பெரீவா..

ஸ்ரீபெரிவா : (அந்தப் பையனைக் காட்டியபடி)
“அவனா..? அவனுக்கும்  ஸ்ரீராமருடைய சம்பந்தம் இருக்கு..”

ப்ரம்மஸ்ரீ ஒரு கணம் திகைத்துப்போகிறார்..

ப்ரம்மஸ்ரீ : “ இவன் பேரில் ராமர் வரலியே பெரியவா. எப்டி சம்பந்தம் இருக்குன்னு எனக்கு தெரீலே.”

ஸ்ரீபெரிவா : (சிறு புன்னகையுடன்)“அவன் தாத்தா பேர் உனக்குத் தெரியுமோ?”

ப்ரம்மஸ்ரீ : “ தெரியும்.. திருவாலூர் ஆடிட்டர் வெங்கட்ராமையர் “

ஸ்ரீபெரிவா : “ தாத்தா பேரை வெச்சுக்கரதுனால தான் பேரன்னு சொல்றோம். தாத்தா பெயரைக் கொண்டவன்.. பெயரன் .. கூப்படரச்சே பெயரன் மாறி  பேரன்னு ஆயிடுத்து.. அதனால் வெங்கட்ராமையர் பேரன் என்பதாலும்.. (என்பதாலும் என்று அழுத்திச் சொல்லுகிறார்கள்) இவனுக்கும்   ஸ்ரீராம சம்பந்தம் இருக்குன்னு சொன்னேன்.”

[இதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தகப்பனாரிடம் இந்த சம்பவத்தைச் சொன்னேன்.. சொல்லி முடித்ததும் பட்டென்று என் தலையில் குட்டிக் கேட்டார் அப்பா..

”...ஏம்ப்பா. உனக்கு  ஸ்ரீராமசர்மான்னு நாமகரணம்  பண்ணினது  மறந்து போச்சா?”]