கம்பராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் அனுமன் வாலியின் பெருமையைச் சொல்லுமிடத்து
" உழலும் மந்தரத்து உருவு தேய முன்
அழலும் கோள் அரா அகடு தீவிடச்
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்."
என்று சொல்வதாகக் காண்கிறோம்
(பாற்கடலில் அமுதம் எடுக்க முயன்ற தேவரும், அவுணரும் வேண்டியபடியே, வாலி.. வாசுகியின் வாற்புறம் பிடித்து இழுத்த பிற்பாடு இருதரப்பினரும் வலிமை குறைந்து நிற்கையில் தான் ஒருவனாகவே மந்தர மலையைக் கடைந்த பெருவலியுடையவன் .)
இதையே பின்னரும்
"தேவர் வேண்ட,
வேலையை விலங்கல் மத்தில்
சுற்றிய நாகம் தேய
அமுது எழக் கடைந்த தோளான்"
என்று சுந்தரகாண்டத்தில் அனுமன் புகழ்ந்து பேசுவான்..
வாலி பாற்கடலைக் கடைந்த இவ் வரலாறு
"கருங்கழல் வாலி ..... வாலமும்
பணமும் இருங்கையில் பற்றி கடைந்தனன் புணரி"
என்று சிவஞான முனிவரால் காஞ்சிப்புராணம் - மணிகண்டேசுரப் படலத்தில் சொல்லப்பட்டுள்ளது..
காம்போஜம் என்று அக்காலத்தில் வழங்கப்பட்ட கம்போடியா நாட்டில் உள்ளது புகழ் வாய்ந்த அங்கோர்வாட் ஆலயம். இங்குள்ள பாற்கடலில் அமுதம் கடையும் சிற்பத் தொகுதியில் கம்பன் காட்டியபடியே வாலி.. வாசுகிப் பாம்பின் வாலைப் பற்றி நின்றபடி இழுப்பதான காட்சி அமைக்கப்பட்டுள்ளதும் நாம் அறிந்து கொள்ளவேண்டியதாகும்..