Thursday, December 31, 2015

சொல்லும் பொருளும் : 1 - முன்னுரை




ஸ்ரீபெரீவாளுடன் அடிக்கடி சம்பாஷித்து அவர்களின் அருளமுதைப் பருகி ஆனந்தித்தவர்கள் மிகப் பலர்..அவர்களுள் மிகச் சிலரே அவற்றை எழுத்து வடிவில் கொணர்ந்துள்ளனர்.. முன்னவர்கள் போல அனேக தடவைகள் இல்லாவிடினும்,ஒரு சிலமுறை மட்டுமே ஸ்ரீபெரீவாளின் சொல்லமுதைச் செவிமடுக்கும் பெரும்பேறு சிவனருளால் கிட்டிற்று.
.
1986ம்வருஷத்தில் ஒரு கார்த்திகைச் சோமவாரத்து முன்னிரவில் ஸ்ரீத்யாகேசர், ஸ்ரீகமலாம்பிகை, ஸ்ரீகாமாக்ஷ்யம்பாள் குறித்து அவர்கள்  சொன்ன பல விஷயங்கள் யாரும் அதுவரை கேள்விப்பட்டிராதவை..

“சொல்லச் சொல்ல எழுதிக்கோ“ என்று உத்தரவானது...

அந்த சமயத்தில், செய்திகளைக் குறிப்பெடுத்துக் கொள்ள நோட்டும் பேனாவும் கையில் இல்லை.. திகைத்தேன்..

சுற்றியிருந்தவர்கள் யாரிடமும் பேனா இல்லை.. சில நிமிடம் அமைதி..

அங்கு தர்சனத்திற்காகக் காத்திருந்த பொள்ளாச்சி ஸ்ரீமதி. ஜயம் மாமி அவர்களைக் காட்டி “அவாளிடமிருந்து பேனா வாங்கிக்கோ“ என்று மந்தஹாஸத்துடன் சொன்னார்கள்..

“பேனா கிடைத்து விட்டது.. பேப்பர் வேணுமே.. ஸ்ரீபெரீவா எவ்ளொ சொல்லபோறான்னு தெரிலயே..?“

மீண்டும் அதே புன்முறுவலுடன் தம் திருமுன்னர் வைக்கப்பட்டிருந்த கல்யாண பத்ரிகைகளின் மேலுறைகளை எடுத்துத் தம் திருக்கரத்தால் ஒவ்வொன்றாகக் கிழித்துப் போட்டு அவற்றில் எழுதிக்கொள்ளும்படி பணித்தார்கள்.. 

முன்னிரவு ஏழு மணிக்கு ஆரம்பித்து மூன்று மணி நேரத்திற்கு மேல் பொழிந்தார்கள்.. 
அவற்றுள்  சிலவற்றை இன்று முதல் பகிர்ந்துகொள்வோம்..