Wednesday, August 12, 2015

எசமானும் தியாகராசாவும்


1984ம் வருஷம் ஸ்ரீபெரீவா காஞ்சிபுரத்தில் இருந்த சமயம்..

திருவாரூரிலிருந்து   சுவாமியைத்  தொட்டு   பூஜிக்கும்   உரிமை  பெற்ற   நயினார்   வந்து கோவில்  மரியாதைகளைச் சமர்ப்பித்தார். 

ப்ரஸாதத்   தட்டில்   ஸ்ரீதியாகராஜாவுக்குச் சார்த்திக்  களைந்த செங்கழுநீர்,  நீலோத்பல புஷ்பங்கள்  இருந்தன.  

இவ்விரண்டும் மிகவும் அரிதானவை. திருவாரூர் தவிர வேறெங்கும் காணமுடியாதவை. 

ஸ்ரீதியாகராஜாவுக்கு தினமும் இந்த புஷ்பங்களைச் சார்த்துவது வழக்கம்.

கோவில் ஐந்து வேலி, கமலாலயக் குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்பது வழக்கு மொழி.

ப்ரஸாத தட்டைத் தன் கரத்தால் தொட்ட ஸ்ரீபெரீவா இரண்டு புஷ்பங்களையும் தன் சிரத்தில் சார்த்திக்கொண்டார்கள்...சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு…திருவாரூரிலிருந்து செங்கழுநீர், நீலோத்பலக் கிழங்குகளை ஸ்ரீமடத்தில் பயிராக்கக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார்கள்.
ஊருக்குத் திரும்பினோம்..
செங்கழுநீர்ஓடைக்குப் போனோம். காவல்காரரைப் பார்த்து விஷயத்தைச் சொன்னோம்..
“திருவாரூரில் மட்டுமே வளரும் இந்த புஷ்பங்கள் வேறெங்கும் வளர்வதில்லை ; இருந்தாலும் எசமான் சொன்னா நடக்கும்.. அவங்களும் தியாகராசாவும் வேற இல்லீங்களே!” என்றபடியே கிழங்குகளைப் பறித்துக் கொடுத்ததார் காவல்காரர் சுந்தரமூர்த்தி..
உத்தரவானபடியே கொடிக்கிழங்குகளைக் ஸ்ரீமடத்திற்குக் கொண்டு வந்து ஸ்ரீபெரீவாளிடம் சமர்ப்பித்தோம்..
ஸ்ரீபெரீவாளின் சன்னதிக்கெதிர்புறமாக இருந்த மேடையின் வெளிப்புறம் நடைபாதையை ஒட்டி இரண்டு தொட்டிகளை கட்டச் சொன்னார்கள். ஆற்று மண், குளத்துப் பொருக்கு இரண்டும் கொண்டு நிரப்பச் சொன்னார்கள். கிழங்குகளை மண்ணுக்குள் புதைத்து ஜலம் விடச் சொன்னார்கள்.
எல்லாம் நல்லபடியாக நடந்தது…
ஆனாலும் தியாகராஜாவுக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடப்பட்டு வரும் இவை ஸ்ரீமடத்தில் கட்டப்பட்ட தொட்டிகளில் பூக்குமா ? என்னும் கேள்வி எங்கள் மனத்தில் இருந்தது.
இரண்டு மாதங்களில் கொடிகள் நன்றாக வளர்ந்து மூன்று மூன்றாக ஆறு புஷ்பங்கள் ஒரே சமயத்தில் பூத்தன !
தொட்டிகளுக்கருகில் வந்து பார்த்த ஸ்ரீபெரீவா இரண்டை ஸ்ரீசந்த்ரமௌலீச்வரருக்கும், இரண்டை ஸ்ரீகாமாக்ஷீ அம்பாளுக்கும் சார்த்தும்படி உத்தரவிட்டார்கள்..மீதமிருந்த இரண்டையும் ஸ்ரீ தியாகராஜஸ்வாமிக்குச் சார்த்துவது போலத் தன் சிரசில் வைத்துக் கொண்டார்கள்..
மறுபடியும் பூக்கள் தொட்டியில் பூக்கவில்லை...`
சில மாதங்களுக்கு முன் ஸ்ரீபெரீவாளுக்குச் சார்த்துவதற்காக மறுபடியும் செங்கழுநீர், நீலோத்பலம் பயிராக்கினால் என்ன என்று தோன்றியது.கிழங்குகளைத் திருவாரூரிலிருந்து கொண்டு வந்து சின்னத் தொட்டிகளில் இட்டு வளர்த்தோம்...
இரண்டு பூக்களுமே இந்தக் கட்டுரை எழுதும் இன்றைய தினத்தில் பூத்திருக்கின்றன. இரண்டையும் எஜமானுக்கு ஸ்ரீபாத புஷ்பங்களாக அட்டித்தொழுது நமஸ்கரிக்கிறோம்.
எசமானும் தியாகராசாவும் ஒண்ணுதானே !





1 comment:

  1. Great experience! "எசமானும் தியாகராசாவும் ஒண்ணுதானே !" May this attitude pervade us all! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Sri Thyagaraja Swamy PooRRi! Hara Hara Shankara, jaya Jaya Shankara!

    ReplyDelete